Vallalar Universal Mission Trust   ramnad......
மனிததேகம் ,ஜீவகாருண்யம் என்கிற திறவுகோல்


னித தேகம் மற்ற ஜீவ தேகம் போல் இலேசிலே எடுக்க முடியாது. ஆதலால் மனித தேகத்தில் ஆன்ம விளக்கமும், அருள் விளக்கமும் மிகவும் விளங்குவதாலும் இந்த மனித தேகம் போனால் மீண்டும் இந்த தேகம் என்கின்ற நிச்சயம் இல்லாமையாலும், இந்த மனித தேகம் முத்தியின்பம் பெறுதற்கே எடுத்த தேகமாதலாலும், இந்த மனித தேகம் மாத்திரமே முதற்சிருஷ்டி தொடங்கிக் கடவுள் சம்மதத்தால் சிருஷ்ட்டிக்கப்பட்ட உயர்ந்த அறிவையுடைய தேகமாதலாலும், மனிதர்கள் மாத்திரம் பசியாற்றுவிக்கின்ற ஜீவகாருண்ய விதியைப் பொதுவில் அவசியம் உறுதியாகப் பிடிக்க வேண்டும் என்றும் கடவுள் விதித்திருக்கின்றபடியால் பசியை ஆகாரத்தினால் நிவர்த்தி செய்விக்கின்ற ஜீவகாருண்ய ஒழுக்கம் மனிதர்களிடத்தே பெரும்பான்மை நடத்தவேண்டும் என்று அறிய வேண்டும்.


புண்ணிய பூமிகளைச் சுற்றி வருதல், புண்ணிய தீர்த்தங்களிலாடல், புண்ணியதலங்களில் வசித்தல், புண்ணிய மூர்த்திகளைத் தரிசித்தல், தோத்திரஞ்செய்தல், ஜெபஞ்செய்தல், விரதஞ் செய்தல், யாகஞ் செய்தல், பூஜை செய்தல், முதலிய சரியை கிரியைகளைச் செய்கின்ற விரதிகளும், பக்தர்களும், இருடிகளும், உணவை நீக்கி, உறக்கத்தை விட்டு, விசயச் சார்புகளைத் துறந்து, இந்திரியங்களை அடக்கி மனோலயஞ் செய்து யோகத்திலிருக்கின்ற யோகிகளும், அளவிறந்த சித்தியின்பங்களைப் பெற்ற சித்தர்களூம், நித்தியா பித்தியங்களை அறிந்து, எல்லாப் பற்றுக்களையும், துறந்து, பிரமானுபவத்தைப் பெற்ற ஞானிகளும், ஜீவகாருண்யம் என்கிற திறவுகோலைச் சம்பாதித்துக் கொள்ளாதவர்களானால் மோட்சமென்கின்ற மேல் வீட்டிற்கு முன்னும் பின்னுமாக ஏறிச் சமீபத்திற்காத்திருந்து மீளவும் அத்திறவுகோலைச் சம்பாதிக்க திரும்புவார்களல்லது, கதவைத் திறந்து உள்ளே புகுந்து இன்பத்தை அடைந்து வாழ மாட்டார்கள் என்று உண்மையாக அறிய வேண்டும்.

கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருள் எந்த வண்ணம் உடையது? என்றறிய வேண்டில்

சொல்லுவார் சொல்லும் வண்ணங்களும், நினைப்பார் நினைக்கும் வண்ணங்களும், அறிவார் அறியும் வண்ணங்களும், அனுபவிப்பார் அனுபவிக்கும் வண்ணங்களும், ஆகிய சரிவ சக்தி வண்ணங்களும், ஆகிய சர்வ சக்தி வண்ணங்களும் தனது ஏகதேச வண்ணங்களாக விளங்க விளக்கி விளங்குகின்ற பூரண விளக்க வண்ணத்தையுடையது என்று அறிய வேண்டும்.

ஜீவர்கள் முன் தேகத்தில் செய்த பாப கர்மங்கள் இந்தத் தேகத்திலும் வரும் என்பது எப்படி? எனில்

ஒரு சமுசாரி முன்குடித்தனஞ் செய்திருந்த வீட்டில் தன் தலைவன் கட்டளைப்படி நடவாமல் துன்மார்க்கர்களை வருவித்து அவர்களோடு கூடிப் பழகியிருந்தானானால், அந்த சமுசாரி அந்த வீட்டை விட்டு வேறொரு வீட்டில் குடிவந்த காலத்திலும், அந்தந்த துன்மார்க்கங்கள் இந்த வீட்டிலும் வந்து அவனுடன் பழக்கஞ் செய்வார்கள். அதுபோல் ஒரு ஜீவன் முன் குடியிருந்த தேகத்தில் கடவுள் கட்டளைப்படி நடவாமல் துன்மார்க்கத்தால் பாப கர்மங்களை விரும்பிச் செய்து இருந்தானானால் அந்த ஜீவன் வேறோரு தேகத்தில் வந்த போதும் அந்த பாப கர்மங்கள் இப்போது வந்த தேகத்திலும் அந்த ஜீவனைச் சேருமென்று அறிய வேண்டும்.

வெளியீடு

சமரச சுத்த சன்மார்க்க சத்திய விவேக விருத்தி

மாத இதழ்

பட்டிவீரன்பட்டி - 624211

ஆசிரியர் : .இறையருள்