Vallalar Universal Mission Trust   ramnad......
தேகபலம், தேகபலம், தேஜஸ், ஞானம் தரும் தூதுவளை! 14 சித்த மருத்துவர் நிபுணர் அருண் சின்னையா
தேகபலம், தேகபலம், தேஜஸ், ஞானம் தரும் தூதுவளை!
14
சித்த மருத்துவர் நிபுணர் அருண் சின்னையா

"அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி'.


சமரச சன்மார்க்கம் விழையும் அன்பர்களே! "முக்தி அடைவதற்கு இம்மானிட தேகமே ஏற்புடையது' என்னும் அருள்வாக்கிற்கேற்ப, கிடைத்தற்கரிய பெரும்பிறப்பாகிய மனிதப் பிறப்பை பெற்றுக்கொண்ட நாம், நமது உடலையும் உள்ளத்தையும் பக்குவப்படுத்தி, நல்லுணர்வுகளைப் பெற்றுப் பேரின்பமுற, உணவு வகை, ஒழுக்கமுறை ஆகியவற்றோடு பல அரிய ஞான மூலிகைகளின் ரகசியங்களையும் வள்ளல் பெருமான் வெளிப்படுத்தி யுள்ளார்.

வள்ளலார் அருளிய ஞான மூலிகைகளுள் தூதுவளைக்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. சாத்வீக உணவுகளிலேயே மிகவும் நுட்பமான உணவு தூதுவளையாகும். கரிசலாங்கண்ணி, பொற்றலை, கையாந்தகரை, தூதுவளை, வல்லாரை போன்ற ஞான மூலிகைகள் அருட்பெருஞ்ஜோதி வள்ளல் பெருமானால் புசிக்கப் பெற்று, உலகமெல்லாம் அவரால் பரப்பப்பட்டது.

வள்ளலாருக்கு முன்தோன்றிய சித்தர்கள் மூலிகைகளின் தன்மைகளைப் பற்றிச் சொல்லியிருந்த போதிலும், வள்ளலார் மூலிகைகளின் குணங்கû ளயும் தன்மைகளையும் சொல்லியிருப்பது, படிப்பவருக்குப் பசுமரத்து ஆணிபோல் பதியும்.

வள்ளல் பெருமான் தனது திருவருட்பாவில் நித்திய கரும விதி என்ற அகராதியில், உணவில் பச்சரிசி சாதம், பசும்பால், பசுநெய், முருங்கை, கத்தரி, தூதுவளை, பொன்னாங்கண்ணி போன்றவற்றைச் சேர்க்கும்படி கூறுகிறார். தூதுவளைக் கீரையுடன் மிளகு ஒரு பங்கு, சீரகம் காலே அரைக்கால் பங்கு, வெந்தயம் கால் பங்கு, புளி வீசம் பங்கு, உப்பு வீசம் பங்கு, மிளகாய் வீசம் பங்கு சேர்த்துச் சமைக்க வேண்டும் என்றும்; வெங்காயம், பூண்டு, பெருங்காயம் ஆகியவற்றை இத்துடன் சேர்க்க வேண்டாம் என்றும் கூறுகிறார்.

இதிலிருந்து தூதுவளையின் மகத்துவம் நமக்குப் புலனாகிறது அல்லவா? வாருங்கள், நாமும் தூதுவளையைச் சரணடைந்து நலம் பெற யாசிப்போம்.

"தூதுவளை, மாதுளை இருக்கும் வீட்டில் மார்பிலும் வயிற்றிலும் களங்கமில்லை' என்றொரு பழமொழி உண்டு. அதாவது தூதுவளை மார்பு சார்ந்த வியாதிகளான நுரையீரல் கோளாறுகள், கபக் கோளாறுகள், இதயநோய்க் கோளாறுகளை அதிசயமாய் குணமாக்கும் தன்மை கொண்டது. அதேபோல் குடல் சார்ந்த, வயிறு சார்ந்த பிரச்சினைகளுக்கு மாதுளையே நன்மருந்தாகும்.

தூதுவளைக் கீரை முட்கள் நிறைந்த ஒருவகை கீரையாகும். முட்கள் நிறைந்த மூலிகைகளின் பூக்களில், நரம்புகளை வலுவாக்கும் தன்மையை இறைவன் வைத்திருக்கிறான். தூதுவளைப் பூவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நமது உணர்வு நரம்புகள் பலப்பட்டு, சரும நோய்கள், பார்வைக் குறைவு, காது கேளாமை, ருசியின்மை போன்ற கோளாறுகள் மாயமாய் மறையும்.

தூதுவளை தோசை

முட்கள் நீக்கப்பட்ட தூதுவளை இலைகளை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து, அத்துடன் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து விழுதாய் அரைக்கவும். இதனை எட்டு கரண்டி தோசை மாவில் கலந்து தோசை வார்க்கவும். இது சிறுவர் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட ஏற்றது; சுவையானது. இதனை வாரம் இருமுறையேனும் உட்கொண்டு வந்தால் சளி, இருமல், கப நோய்கள் அனைத்தும் குணமாகும்.

தூதுவளை ரசம்

முட்கள் நீக்கப்பட்ட தூதுவளை இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சிறிதாய் அரிந்து கொள்ளவும். மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை மைய தட்டி எடுத்துக்கொள்ளவும். கறிவேப்பிலை, மல்லி இலைகளையும் சிறிதாய் அரிந்து, அவற்றை தூதுவளை இலையுடன் சேர்த்து வதக்கி, அதில் தக்காளிக் கரைசலைச் சேர்த்து, மிளகு, சீரகம், பூண்டு, உப்பு ஆகியவற்றையும் சேர்த்து சூடு செய்யவும். கொதி வருவதற்கு முன் இறக்கி சுவையாய் சாப்பிட, சளி, இருமல் மூக்கடைப்பு, ஈஸ்னோபீலியா, தும்மல், சைனஸ், ஆஸ்துமா போன்ற அனைத்துக் குறைகளும் தீ ரும்.

நல்ல பசி உண்டாக...

தூதுவளை இலைகள் மூன்று, மிளகு மூன்று, சிறிது மஞ்சள் ஆகியவற்றைத் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்துச் சாப்பிட, நல்ல பசி உண்டாகும்.

தொண்டைச் சதை கரைய...

தூதுவளை இலை ஒரு கைப்பிடி, அதிமதுரம், சித்தரத்தை, சுக்கு ஆகியவை வகைக்கு பத்து கிராம் எடுத்து நன்கு நசித்து, ஒரு லிட்டர் தண்ணீரி லிட்டுக் கொதிக்க வைத்து, நான்கில் ஒரு பங்காய்ச் சுண்டச் செய்து, வேளைக்கு அறுபது மி.லி. வீதம் தினம் மூன்று வேளை சாப்பிட்டு வர, ஏழு தினங்களில் தொண்டையில் வளர்ந்துள்ள சதை (பர்ய்ள்ண்ப்ண்ற்ண்ள்) கரையும்.

விடாத இருமல் விலக...

தூதுவளை இலை ஒரு கைப்பிடி, உலர்ந்த திராட்சை முப்பது எண்ணிக்கை, அதிமதுரம் ஒரு துண்டு, சீரகம் பத்து கிராம் ஆகியவற்றை எடுத்து, அனைத்தையும் நசித்து, ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டுக் கொதிக்க வைத்து, நான்கில் ஒரு பங்காய் சுண்டச் செய்து, நூறு மி.லி. அளவில் காலை, ம தியம், இரவு மூன்று வேளையும் பனை வெல்லம் சேர்த்து அருந்தி வர, எப்பேர்ப்பட்ட இருமலும் மூன்று தினங்களில் குணப்படும்.

ஆஸ்துமா, மூச்சுத் திணறல் குணமாக...

தூதுவளை, துளசி, முசுமுசுக்கை, கண்டங் கத்திரி ஆகிய நான்கையும் காயவைத்து, வகைக்கு நூறு கிராம் எடுத்துக்கொள்ளவும். இத்துடன் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், ஜாதிக்காய், மாசிக்காய், ஜாதிப்பத்திரி, ஏலக்காய், கருஞ்சீரகம், அக்ரகாரம், கடுக்காய் ஆகியவற்றை வகைக்கு பத்து கிராம் எடுத்து, அனைத்தையும் ஒன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு (அரை ஸ்பூன்) பொடியை எடுத்து, தேனில் குழைத்து தினம் இருவேளை சாப்பிட்டு வர, ஆஸ்துமா, மூச்சுத் திணறல், நுரையீரல் கோளாறுகள் போன்ற அனைத்தும் தீ ரும்.

சைனஸ் - தொடர் தும்மல் குணமாக...

தூதுவளை, குப்பைமேனி, துளசி, நிலவேம்பு, திப்பிலி, அதிமதுரம், சுக்கு, சித்தரத்தை ஆகியவற்றை வகைக்கு பத்துகிராம் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் தட்டிப்போட்டு கசாயமிட்டு, நான்கில் ஒரு பங்காய் சுண்டச் செய்து, நூறு மி.லி. அளவில் தினமும் இருவேளை சாப்பிட்டு வர, தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் கொட்டுதல் போன்றவை குணமாகும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க...

தூதுவளைப் பூக்களை நிழலில் உலர்த்தி நூறு கிராம் அளவு எடுத்துக்கொள்ளவும். இத்துடன் மாதுளம் பூ நூறு கிராம், ஜாதிக்காய் நூறு கிராம் சேர்த்து அரைத்து பத்திரப்படுத்தவும். இதில் காலை- மாலை இரண்டு கிராம் அளவில் சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக் குறைவு நீங்கி புத்திரப்பேறு உண்டாகும்.

தூதுவளை மிக நுண்ணறிவு தரும் மூலிகையாகும். இதனை அலட்சியம் செய்யாமல் பிறவிப்பயன் பெற வேண்டி, குருவின் திருவடி சரணடைந்து வணங்கி, ஏதேனும் ஒரு வகையில் உட்கொண்டு வரவேண்டும். இதனால் தேக அசுத்தம் நீங்கி, தேகம் வலுவாகி, உடம்பில் ஒளி, தேஜஸ், காந்தம் உண்டாகும். அதுவே முக்திக்கும் ஏதுவாகும்.

அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் பாதம் பணிவோம். அவர் வழிகாட்டிய ஞான மூலிகையாம் தூதுவளையைச் சரணடைந்து, பிறவிப் பயன் பெறுவோம்.

நன்றி

நக்கீரன்

01/11/2008

3 Comments
Ramanujam jam
வள்ளல் பெருமான் தெரிவித்த அரிய மூலிகைகளை வைத்து அதன் பயன்பாடுகளையும், அதனை உண்ணும் முறைகளையும், இன்றைய கால கட்டத்தில், அதன் மூலம் என்னென்ன வகையான உணவுப் பதார்த்தங்களைத் தயாரிக்கலாம் என்பது குறித்தும் தெரிவித்த சித்த மருத்துவர் திரு அருண் சின்னைவிற்கு நன்றி.
அவர் தெரிவித்த விபரத்தை, எல்லா அன்பர்களும், குறிப்பாக உலகெல்லாம் உள்ள அன்பர்களும் காண வேண்டும் அதன் பயன்பாடு என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவா மிகக் கொண்டு, இந்த இணைய தளத்தின் மூலம் வெளியிட்ட வள்ளலார் யுனிவெர்சல் மிஷன் ட்ரஸ்டுக்கும் நன்றி.
Sunday, January 4, 2009 at 20:19 pm by Ramanujam jam
kgurunathan
Jan 24 2009
K.Gurunathan, Tirunelveli.
This article is very useful. Please suggest how to get seeds for this plant and how to grow this at home. Also suggest other important herbal plants and its seeds availability in our area. Moreover please suggest the readymade herbal powder produced by Genuiene Vallalar sales outlets in Tirunelveli.
Thanks.
Friday, January 23, 2009 at 22:21 pm by kgurunathan
paulpasu
selaviila vaithiyam
Tuesday, August 28, 2012 at 04:54 am by paulpasu