Vallalar Universal Mission Trust   ramnad......
வள்ளலாரின் இறைக் கொள்கை


வள்ளலார் வகுத்த சன்மார்க்க நெறியின்படி இறைவன் ஒருவனேயாவன். அவன் ‘அருட்பெருஞ்ஜோதி’ என அழைக்கப்பெறும் தனிமுதல் தலைவனாவான். சமயங்களும் தத்துவங்களும் அணுக முடியாதவனும் அனுபவத்தால் மட்டுமே உணரக் கூடியவனுமான அவ் இறைவனைச் ‘சிவம்’ என அழைப்பதில் வள்ளலார்க்கு விழைவு மிகவுண்டு. ஆயினும் சைவ சித்தாந்தத்தில் கூறப்படும் ‘பரசிவம்’ என்பது பரவெளியில் நடமிடும் இறைவனின் இடதுகாற் சிறுவிரலில் ஒட்டிய தூசியில் ஒரு சிறு துகளே என்று தம் அனுபவத்தால் உணர்ந்து கூறுகின்றார். வள்ளலார் கூறும் ‘சிவம், எல்லாச் சமயங்களுக்கும் தத்துவங்களுக்கும் உரிய ஒரே ஒரு தனி முழுமுதலாகும், தனித்தனிச் சமயங்கள், தத்துவங்கள் யாவும் முயன்றும் எட்டாத மிகப்பெரும் நிலையினனாகிய பேரிறைவனையே அவர் ‘சிவமாகவும், ‘அருட்பெருஞ்சோதியாகவும்’ காணுகின்றார்.

சுருக்கமாகக் கூறுவதெனில், “உயிர்கள் அருட் பெருஞ் சோதியாகிய இறையிடம் அருட்பெரும் சோதியைப் பெற்றுத்தாமும் அருட்பெரும் சோதியாகி விடுவதே “வள்ளலார் வகுத்தசன்மார்க்கமாகும்.

அருள்நெறியினால் ஒருவன் தன்னை உலகு எங்கும் கலந்துள்ள ‘ஒளி’யாகக் காண்கின்றான். இவ் அருளுறவால் இறையோடு உறவுடையவன் என என்னும் மனப்பக்குவம் வாய்க்கின்றது. சீவான்மாவினுள் பரமான்மாவாக இருக்கும் உயிருக்குள் உயிராக இருக்கும் இறையை உணர்ந்து, தனக்குள் உள்ள உள்ளோளியாகவே இறையை நாடுகிறான். அவ் உள்ளொளிக்கும் உள்ளொளியாக இறைவன் இருப்பதை அவனால் உணர முடிகின்றது. கண்ணுக்குப் புலப்படும் புற ஒளி; கருத்துக்குக் காட்சியாகும் அக ஒளி; உள்ளத்தால் மட்டுமே உணரப்படும் உள்ளொளி. இவற்றுள் புறஒளி அக ஒளிக்குள் அடக்கம் அக ஒளியோ உள்ளொளிக்குள் ஒடுக்கம். அவ் உள்ளொளியை அனுபவிக்கலாமே தவிரப் புறத்தார்க்குப் புலனாக எடுத்துரைக்க இயலாது என்பர். இவ் உள்ளொளியையே வள்ளலார் ‘அருட்பெருஞ்ஜோதி’ என அழைக்கின்றார்.

“சோதியுட் சோதியுட் சோதி என்னைச்

சிவவெளிக்கு ஏறுஞ் சிகரத்தில் ஏற்றிச்

சிவமாக்கிக் கொண்டது பாரீர்” (திரு.6.1.146.)

சோதிக்குள் இருக்கும் சோதிக்குட் சோதியான இறையைப் பொதுவாக உணரலாமேயன்றித் தனித்து நோக்கி அறிய இயலாது என்றும் உள்ளத்தால் உணர்ந்தறியலாமேயன்றி அளவை முதலிய தருக்கநெறிகளால் அளந்தறிய முடியாதென்றும் விளக்குகின்றார்.

“பொதுவுனர் உணரும் போதலால் பிரித்தே

அதுவெனில் தோன்றா அருட்பெருஞ் ஜோதி”

-திரு.6, 1. 121

“உளவினில் அறிந்தால் ஒழியமற்று அளக்கின்

அளவினில் அளவா அருட்பெருஞ் சோதி”

-திரு.6.1.122

இச்சோதியே சிற்றம்பலத்தில் நடமிடும் எம்பெருமான் என்றும் தெளிவுபடுத்துகிறார்.

……….தொடரும்.