Vallalar Universal Mission Trust   ramnad......
அன்றைய சிக்கல்களும் இராமலிங்க அடிகளார்…


உலகறி வேதாகமங்கள் எல்லாம் பொய் பொய்யே இவற்றை ஒழிக்கவேண்டும் என்றும் அவர் உள்ளம் கொதிக்கிறது.

கலையுரைத்த கற்பனையே

நிலை எனக்கொண்டாடும்

கண்மூடி வழக்கம் எலாம்

மண்மூடிப் போக

கண் மூடி வழக்கம் என்ன்னும் கடுஞ்சொல் ஆட்சியை இங்கு சிறிது எண்ணி அவர் உள்ளத்தை உணரலாம்.

இச்சமயங்களும் மதங்களும் சாத்திரங்களும் கண்டு கூறியவை கடவுளும் தெய்வங்களும் இவையெல்லாம் வீண் என்றும் வேண்டாதவை என்றும் இராமலிங்க அடிகள் கண்டிக்கிறார். இவை அனைத்தையும் பேசியும் பயன்படுத்தியும் வரும் மதவாதிகளும் இருக்கின்றனர். இக்கூட்டத்தாரும் இராமலிங்க அடிகளாருக்கு குற்றவாளிகளாகவே தோற்றமளிக்கின்றனர். ஆதலாம் சமய மதங்கள், வேதாகமசாத்திரங்கள் அவற்றின் பலப்பல தெய்வங்கள் அவற்றின் காவலர் கூட்டங்கள் இவை அனைத்தையும் இராமலிங்க அடிகளார் இங்குச் சாடுகின்றார்.

கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல சமயக்

கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்

கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல கதியும்

காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்

பிள்ளைவிளையாட்டு……………………………….

இவையே அவர் கண்ட இரண்டாம் குறை. முதற்குறையும் இரண்டாம் குறையும் அவை இரண்டும் அடிகளார் கண்ட சமயக் குற்றங்கள்.

இராமலிங்க அடிகளார் கண்ட அடுத்த குறை மூன்றாம் குறை சமூகத்தில் அமைந்த குறை. அது சாதி மத வேறுபாடு. உயர் வருணம் தாழ்வருணம் என்னும் சழக்கு; அதாவது வருணாசிரமம் அந்தச் சாதியினை அவர் கண்டிக்கும் வேகத்தை இப்பாடல் வரிகளில் காணலாம்.

நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா

நவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளைவிளை யாட்டே

மேல்வருணம் தோல் வருணம் கண்டறிவார் இலைநீ

இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை

இருவாய்ப் புன்செயில் எருவாக்கிப் போட்டு

மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம

வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டு

சாதியும் மதமும் சமயமும் பொய்யென

ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி

இராமலிங்க அடிகளார் சாதியை கண்டித்தலோடு அமையாது அவற்றுடன் பிற ஆசிரமங்களையும் ஆசாரங்களையும் கண்டித்தலை இங்குக் காண்கிறோம். ஆசிரமங்களாவன பிரமசரியம். கிருகஸ்தம், வானப் பிரஸ்தம்., சந்நியாசம், ஆகியவை. இந்த அமைப்பையே அவர் சாடுவதாகத் தெரிகிறது. வருணாசிரமத்தோடு சேர்ந்து எண்ணற்ற சாரங்கள் இயங்கி வருகின்றன. அவற்றையும் இராமலிங்க அடிகளார் சாடுகின்றார்.

அன்று வழ்ங்கிய சமயங்கள், அவற்றை தாங்கி அன்று நிலவிய நூல்கள் , அவை ஆதரித்த அன்று விளங்கிய சமூக அமைப்பு ஆகிய இவை அனைத்தையும் இராமலிங்க அடிகளார் வெறுத்தார். அவை அனைத்தையும் பொய் என்பது மட்டும் இல்லை. தீயவையும் ஆகும் என்று அவர் கருதினார். இந்த உணர்வோடு தெய்வத்தின் மீது அவர் கொண்ட முழுமையான பக்தி இணைந்தது. ஆதலால்தான் இராமலிங்க அடிகளார் வெறுஞ் சமயவாதி மட்டும் அல்லாது சமய சீர்திருத்த வாதியாகவும் உயர்ந்தார். பழமையை மாற்ற எண்ணிய போது புதுமை ஒன்றையும் அவ்விடத்தில் அவர் படைத்து வழங்க வேண்டிய தேவையும் ஏற்பட்டது. அவர் கண்ட புதுமை - புதுமைச் சமயம் சமரச சன்மார்க்கம் என்பது.

இவ்வாறாக அன்றைய சமூகச் சிக்கல்களை எடுத்துக் காட்டி அவற்றுகுத் தம்போக்கில் இராமலிங்க அடிகளார் தீர்வும் கண்டார்.

திரு . முருகரத்னம்