இரண்டு ஆயிரம் ஆண்டுகளாகக் கூறிவரும் வறுமை தம் காலத்திலும் அகலாமல் இருப்பதையும், சமயங்களும் சாதிகளும் வறுமையுடன் போராடி அதை ஒழிக்காமல் தமக்குள்ளேயே போராடி ஒன்றை ஒன்று ஒழிப்பதற்குக் கச்சை கட்டிக்கொண்டு இருப்பதைக் கண்டார். “ வறுமையால் சங்கடப்பாவி” யின் கொடிய பிடிக்குள் சிக்கி, காற்றினில் சருகாய்ச் சீவனற்று நெளியும் மனிதப் புழுக்களோ இறைவனை அறிவார்கள்? அவர்களிடம் இறைவனைப் பற்றிக் கூறுவதும் பாவம் என்றார் விவேகானந்தர். அந்த ஏழைகளை பொருள் உடையவரின் சகோதரர் என்று கூறினார் வள்ளலார். அந்த சோதரருக்கு இரக்கம் காட்டி, பசி துடைத்துக் கண்ணீரை மாற்றுவதே உண்மையான இறைவழிபாடு என்றார் அவர். வறுமை தீர்ப்பது பசிதீர்ப்பது மட்டும் அன்று. வளமாக வாழச் செய்வதே பசி தீர்த்தல் முன்பு அறமாகக் கருதப்பட்டது. சமய நெறியில் ஒரே சமயத்தைச் சார்ந்த அடியார்க்கு அன்னம் இடுதல் சமய ஒழுக்கமாகக் கருதப்பட்டது. ஆனால் வள்ளலார், தேசம் கலாசாரம், சமயம், குலம், முதலிய எந்த வித வேறுபாடும் பாராமல், விசாரியாமல் அனைவருக்கும் துன்பம் உறும்போது பசிதீர்க்க வேண்டும் என்கின்றார். இச்சகோதர பாவத்திற்குத் தடையாய் இருந்துவரும் பழைய அமைப்புகளாகிய சாதி சமய, கோத்திர அமைப்புகளை எதிர்க்கின்றார். அன்பு மனிதருக்கு இயற்கைக் குணம் அது தடையின்றி பரவவேண்டும். ஆனால் இந்தப் பழைய அமைப்புகள் அன்புக்கு வேலி கட்டிவிட்டன. அன்பு வளர்ந்து அகிலம் முழுதும் அன்பால் நோக்கும் பார்வை (Universal perspective) வந்தால் தான், அதன் மூலம் – இறைவனை உணர முடியும். இதற்காக வள்ளலார் அகிலமாம் சகோதரத்துவம் என்ற கொள்கையை எடுத்துக் கூறி அதைப் பழைய அமைப்புகளுக்கு மாற்றாக நம்முன் வைத்தார். சாதியை விட்டவனே சன்மார்க்கி என்றார். நம் குலம் எல்லாம் புழுக்குலம் என்றார். சாதிப்பேச்சும் குலப் பூச்சும் இறாவாமையைத் தருமா ? என்று கேட்டார். உயர் குலம் என்று இறுமாந்தவரும் இறக்கின்றார். தாழ்குலம் என்று தள்ளப்பட்டரும் இறக்கின்றார். இறவாமைதான் வாழ்வில் அடுத்து நாம் எட்டிப் பிடிக்க வேண்டிய படி அதனை அடைவதற்கு உங்கள் சாதியும் குலமும், சமயமும் மதமும் என்ன செய்யும் என்று கேட்டார் வள்ளலார்.
தொடரும்…
திரு சுப.அண்ணாமலை