Vallalar Universal Mission Trust   ramnad......
18.7.1872ல் வள்ளலார் ஞான சபையை எப்படி தூய்மை செய்வது வழிபடுவது என்பது பற்றி ஒரு பத்திரிகை எழுதி வெளியிட்டார்கள், வருமாறு;

சபை வழிபாட்டு முறை

18.7.1872ல் வள்ளலார் ஞான சபையை எப்படி தூய்மை செய்வது வழிபடுவது என்பது பற்றி ஒரு பத்திரிகை எழுதி வெளியிட்டார்கள், வருமாறு;

திருச்சிற்றம்பலம்

ஞானசபை விளக்க விபவ பத்திரிகை

அன்புடைய நம்மவர்களுக்கு வந்தனம்

இன்று தொடங்கி சபைக்கு சமரச சன்மார்க்க சத்திய ஞான சபையென்றும் சாலைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையென்றும் சங்கத்திற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்றும் திருப்பெயர் வழங்குதல் வேண்டும்.

இன்று தொடங்கி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரது அருட்பெருஞ் சித்தி வெளிப்படும் வரைக்கும் ஞான சபைக்குள்ளே தகரக் கண்ணாடி விளக்கு வைத்தல் வேண்டும். பித்தளைமுதலியவற்றின் விளக்குகளும் வேண்டாம் தகரக் கண்ணாடி விளக்கு வைக்கும் காலத்தில், தகுதியுள்ள நம்மவர்கள் தேகசுத்தி கரண சுத்தியுடைவர்களாய் திருவாயிற்படிப் புறத்திலிருந்துக் கொண்டு விளக்கேற்றி, பன்னிரண்டு வயதிற்கு உட்பட்ட சிறுவர் கையிற் கொடுத்தாவது எழுபத்திரண்டு வயதிற்கு மேற்பட்ட பெரியவர் கையிற் கொடுத்தாவது, உட்புற வாயில்களூக்குச் சமீபங்களில் வைத்து வரச்செய்விக்க வேண்டும். நாலு நாளைக்கு ஒரு விசை காலையில் மேற்குறித்த சிறியாரைக் கொண்டாயினும் பெரியாரைக்கொண்டாயினும் உள்ளே தூசு துடைப்பிக்க வேண்டும். தூசு துடைக்கப் புகும் போது நீராடி சுத்த தேகத்தோடு கால்களில் வத்திரம் சுற்றிக் கொண்டு புகுந்து முட்டிக்காலிட்டுக் கொண்டு துகள் துடைக்கச் செய்விக்க வேண்டும். விளக்கு வைக்கின்ற போதும் இங்ஙனமே செய்விக்க வேண்டும். விளக்கு வைத்தற்கும் தூசு துடைத்தற்கும் தொடங்குகின்ற பன்னிரண்டு வயதிற்குட்பட்ட சிறுவரும் எழுபத்திரண்டு வயதிற்கு மேற்பட்ட பெரியவரும் பொருள் இடம் போகம் முதலியவற்றில் சிறிதும் இச்சை இலலாதவராய் தெய்வ நினைப்புள்ளவர்களாய் அன்புடையவர்களாய் இருத்தல் வேண்டும். விளக்கு வைக்கும்போதும் தூசு துடைக்கும்போதும் நம்மவர்களில் நேர்ந்தவர்கள் புறத்தில் நின்று பரிசுத்தராய் மெல்லெனத் துதி செய்தல் வேண்டும். யாவரும் யாதொரு காரியம் குறித்தும் தற்காலம் உள்ளே போதல் கூடாது. ஞான சபைத் திறவுகோல் ஒருவர் கையிலும் வெளிப்பட விருக்கப்படாது. அத்திறவு கோலை வேறொரு பெட்டிக்குள் வைத்து அப்பெட்டியைப் பூட்டி அப்பெட்டியைப் பொற்சபைக்குள் வைத்து அப்பெட்டித் திறவுகோலை ஆஸ்தானக் காவல் உத்தரவாதியாய் இருக்கின்றவர் கையில் ஒப்புவித்தல் வேண்டும்.

தொடர்ச்சி காலம் நேர்ந்த தருணம் எழுதுகிறேன்.

இங்ஙனம்

சிதம்பரம் இராமலிங்கம்