பாடசாலை ஒன்றைத்துவக்க வேண்டுமென்று வள்ளல் பெருமான் விரும்பினார். அறியாமை இருளைப் போக்கி, நல்ல வழியில் ஞான வழியில் மக்களை வழி நடத்தும் வகையில் பாடசாலை இருக்க வேண்டுமென்று விழைந்தார்.
சமரச சன்மார்க்க நெறியைப் பரப்பும் வகையில் பாடசாலை அமைய வேண்டுமென்று எண்ணினார்.
கற்றறிந்தவர், மொழியறிவு நிறைந்தவர், புலமை மிக்கவர் என்று வள்ளலாரால் போற்றப்பட்ட, அவரது முதல் மாணாக்கர் தொழுவூர் வேலாயுதனார். எனவே, தாம் துவங்க இருக்கும் பாடசாலையின் ஆசிரியராக வேலாயுதனாரை அமர்த்தினார்.
திருக்குறளின் சமரச கருத்துக்களால் பெரிதும் கவரப்பெற்ற வள்ளலார், பாடசாலையில் பயிலும் மாணாக்கர்களுக்கு முதலில் திருக்குறளைப் போதிக்குமாறு கூறினார்
பாடசாலை துவக்கப்பட்டது. மாணாக்கர்களூம் சேர்ந்தார்கள். தொழுவூர் வேலாயுதனார் பாடம் நடத்திவந்தார். சீடரின் திறமையிலும் போதிக்கும் திறனிலும் வள்ளலார் பெரும் நம்பிக்கை கொண்டிருந்ததால் ஒரு சில மாதங்கள் வரை அதில் தலையிடாமல் இருந்தார்.
மூன்று, நான்கு மாதங்கள் கடந்த பின்பு, வள்ளலார் பாடசாலைக்கு வந்தார். திருக்குறள் வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. எந்த அதிகாரம் படிக்கிறார்கள் என்று கவனித்தார். மூன்றாவது அதிகாரத்தை வேலாயுதனார் நடத்துவதைக்கண்டு அடிகளார் அதிர்ச்சியுற்றார்.
மாதங்கள் மூன்று கடந்தும் முப்பது குறளைக் கூட கற்பிக்க இயலவில்லையா உங்களால், போதும்இனி நீங்கள் ஆசிரியராக இருக்க வேண்டாம் என்று கூறியதுடன் பாடசாலை நடத்தவும் அனுமதி மறுத்துவிட்டார்.
அன்பிற்குரிய சீடர் என்றாலும் செய்யும் செயலில் குறை இருந்தால் சுட்டிக் காட்டி திருத்துவதுதான் குருவின் கடமை என்பதை இந்நிகழ்ச்சியின் மூலம் எடுத்துக் காட்டினார்.
தயவு