Vallalar Universal Mission Trust   ramnad......
மோட்ச வீடு

14.1

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கிற சாதன சகாயங்கள் எவர்க்கு வேண்டுவதில்லை?

ஜீவகாருண்யமென்கின்ற மோட்ச வீட்டுத் திறவு கோலைக் காலம் உள்ளபோதே சம்பாதித்துக் கொண்ட சமுசாரிகளுக்கு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கிற சாதன சகாயங்கள் தேவை இல்லை.

14.2.

எக்காலத்தும் அடையாத இன்ப வீட்டை எவரால் அடைய முடியும்?

ஜீவகாருண்யம் என்கின்ற மோட்ச வீட்டுத் திறவு கோலைக் காலம் உள்ளபோதே சம்பாதித்துக் கொண்ட சமுசாரிகள் எக்காலத்தும் அடையாத இன்ப வீட்டை அடைய முடியும்.

14.3.

ஜீவகாருண்யம் என்கின்ற மோட்ச வீட்டுத் திறவுகோலைக் காலம் உள்ளபோதே சம்பாதித்துக் கொண்ட சமுசாரிகள் மோட்ச வீட்டில் புகுந்து எப்படி வாழ்வார்கள்?

ஜீவகாருண்யம் என்கின்ற மோட்ச வீட்டுத் திறவுகோலைக் காலம் உள்ளபோதே சம்பாதித்துக் கொண்ட சமுசாரிகள் எக்காலத்தும் அடையாத இன்பவீடாகிய மோட்ச வீட்டுக் கதவை திறந்து கொண்டு, உள்ளே புகுந்து நித்திய முத்தர்களாய் வாழ்வார்கள்.

14.4.

ஜீவகாருண்யம் என்கின்ற மோட்ச வீட்டின் திறவுகோலைச் சம்பாதிக்காத 1. விரதிகள் 2. பக்தர்கள் 3. இருடிகள் 4. யோகிகள் 5. சித்தர்கள் 6. ஞானிகள் ஆகியவர்களின் நிலைகள் யாவை?

ஜீவகாருண்யம் என்கின்ற மோட்ச வீட்டின் திறவுகோலைச் சம்பாதிக்காத 1. விரதிகள் 2. பக்தர்கள் 3. இருடிகள் 4. யோகிகள் 5. சித்தர்கள் 6. ஞானிகள் ஆகியோர்கள் மோட்சம் என்கிற மேல் வீட்டிற்கு முன்னும் பின்னுமாக ஏறிச் சமீபத்தில் காத்திருந்து மீளவும் அத்திறவுகோலைச் சம்பாதிக்கத் திரும்புவார்கள் அல்லது கதவைத் திறந்து உள்ளே புகுந்து இன்பத்தை அடைந்து வாழமாட்டார்கள்.

28/10/07

விளக்க உரை

15.1.

ஞான வழி என்பது யாது?

ஜீவகாருண்ய ஒழுக்கமே ஞான வழியாகும்.

15.2.

சன்மார்க்கம் என்பது யாது?

ஜீவகாருண்ய ஒழுக்கமே சன்மார்க்கம் ஆகும்.

15.3.

புண்ணியம் என்பது யாது?

புண்ணியம் - என்பது ஜீவகாருண்யமே ஆகும்.

15.4.

ஜீவன் முத்தர்கள் என்பவர் எவர்?

ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால் வரும் விளக்கத்தையும், கடவுள் இன்பத்ததயும், பலகால் கண்டு அனுபவித்துப் பூர்த்தி அடைந்த சாத்தியர்களே ஜீவன் முத்தர்களாவர்.

15.5.

தெய்வ வழிபாடு செய்து வாழ்தல் எங்ஙனம்?

ஜீவர்களுக்கு ஜீவர்கள் விஷயமாக உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக் கொண்டு தெய்வ வழிபாடு செய்து வாழ்தல் வேண்டும்.

15.6.

சகோதர உரிமை என்பது எது?

சகோதரர்களுள் ஒருவர் ஒரு ஆபத்தால் துக்கப்படுகின்ற போதும் துக்கப்படுவார் என்று அறிந்த போதும் அவரைத் தமது சகோதரர் என்று கண்ட மற்றொரு சகோதரருக்கு உருக்கம் உண்டாவது சகோதர உரிமையாகும்.

15.7,

உற்பாதங்கள் என்பவை எவை?

பெருமழை, பெருங்காற்று, பெரும்பனி, பேரிடி, பெருநெருப்பு முதலியவை உற்பாதங்கள் எனப்படும்.

15.8.

கொலை என்பது யாது?

கொலை என்பது தேகத்தின் அகத்தும் புறத்தும் உள்ள கருவி கரணங்களைப் பல்வேறு கருவிகரணப் புடைப்பெயர்ச்சிகளால் பதைப்புண்டாகக் கலகஞ் செய்து அறிவை மெலிவித்து ஆன்மாவை வெளிப்படுத்துவித்தற்கு நிமித்தமாகிய விகற்ப பூத காரிய கொடுந்தொழில்.

15.9.

பிணி என்பது யாது?

வாத, பித்த, சிலேத்தும விகற்பங்களால் மாறுபட்டு தேகத்தின் அகத்தும், புறத்தும் உள்ள கருவி கரணங்களை நலிவு செய்து, அறிவை மெலிவித்து, ஆன்மா வெளிப்படுத்துவித்தற்கு நிமித்தமாக நின்ற விகற்ப மாயாகாரியப் பிண்டப் பகுதி வேற்றுமை விளைவு.

15.10.

ஆபத்து என்பது யாது?

ஆபத்து என்பது அகங்காரத்தாலும் மறதியாலும் கரும வேறுபாட்டாலும் தேகபோக அனுபவங்களைத் தடுக்கின்ற விக்னங்கள் ஆகும்.

15.11.

பயம் என்பது யாது?

பயம் என்பது தேகம் முதலிய கருவிகளுக்கு நட்டம் செய்வதாகிய விடயங்கள் நேரிட்டபோது கரணங்களுக்கும் அறிவுக்கும் உண்டாகின்ற நடுக்கமாகும்.

15.12.

இன்மை என்பது யாது?

இன்மை என்பது கல்வி, செல்வம் முதலிய கருவிகளைத் தற்சுதந்திரத்திற் பெறாமை ஆகும்.

15.13.

இச்சை என்பது யாது?

இச்சை என்பது அடையக் கருதிய விடயங்களின் அருமை குறித்து அவற்றை மேன்மேலும் கருதச்செய்கின்ற சித்த விருத்தி என்று அறிய வேண்டும்.

* * * **** * * * * *