வள்ளல் பெருமான் தம் வாழ்வில் அன்பர்களுக்கு எழுதிய கடிதங்கள் ‘திருமுகங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.
சென்னையிலும், சிதம்பரத்திலும், கருங்குழியிலும் வடலூரிலும் வாழ்ந்த வள்ளலார் அவ்வப்போது கடிதங்கள் எழுதி அன்பர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். கருங்குழியிலும் வடலூரிலும் உறைந்த காலங்களில் வள்ளலார் எழுதியுள்ள பல திருமுகங்களில், அவரது இயல்புகள் பலவற்றை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.
வள்ளலார் மற்றவர்களைக் கொண்டு எழுதச் செய்யாமல் அவரே கடிதங்களை எழுதுவார். தமக்கு வருகின்ற கடிதங்களுக்கும் அவரே பதிலும் எழுதுவார். அந்நாட்களில் கவரில் கடிதத்தைப் போட்டு அனுப்பும் முறை வழக்கில் இல்லை. கடிதங்களையே நான்காக மடித்து பின்புறத்தில் முகவரி எழுதி, தபாலில் சேர்த்து விடுவார். வள்ளலார் சில சமயங்கள் திருமுகங்களை அன்பர்கள் மூலம் அனுப்புவார்.
திருமுகத்தை, முதலில் பிள்ளையார் சுழியிட்டு சிவமயம் என்று எழுதிய பிறகே தொடங்குவார். ‘அருளறிவொழுக்க முதலிய சுபகுணங்களிற் சிறந்த சிரஞ்சீவி ரத்தின முதலியாருக்கு சிவகடாஷத்தினால் தீர்க்காயுளும் சகல சம்பத்தும் உண்டாவதாக’ என்றுதான் தொடங்குவார்.
சில கடிதங்களில் ‘அற்புத குணாகரமாகி எம்முள்ளத் தமர்ந்த சிரஞ்சீவி’ என்றும், ‘அன்பு அறிவு தயவு முதலிய சுபகுணங்களைப் பூண்டு எமது கருத்தினும் கண்ணினும் உவந்து உலாவுகின்ற’ என்றும் தொடங்குவது வழக்கம்.
மேலும், அடிகளார் எழுதும்போது ‘சுபசரித்திர விபரங்களை அடிக்கடி கேட்க விரும்புகிறேன்’ என்று மனம் திறந்து விசாரிப்பார். சேம சரித்திரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வாசகங்களும் கடிதங்களில் இடம்பெறும். உடல்நலன் பற்றி அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிற கருத்தில் ‘தங்களுடைய தேகத்தை சாக்ரதையாக உபசரித்து வரவேண்டும்’ என்ற வாசகங்கள் வள்ளலாரின் திருமுகங்களில் காணப்படும். அன்பர்களை மிகுந்த மரியாதையுடன் மகா…ரா…ரா…ஸ்ரீ என்று குறிப்பிட்டு எழுதுவதே அவரது இயல்பு.
நேரமின்மையால் கடிதத்தை முடிக்கும்பொழுது ‘எனக்கு சாவகாசமின்மையால் இம்மட்டில் நிறுத்தினேன்’ என்று முடித்துவிடுவார். கடிதத்தில் முகவரியில் பெயர், வீட்டு எண், தெரு, ஊர், என்று எழுதுவது வழக்கில் இல்லை போலும். இஃது சென்னப்பட்டிணம். பெத்து நாய்க்கன் பேட்டை ஏழுகிணற்றுக்குக் கீழண்டை வீராசாமி பிள்ளை வீதியில் மகா….ரா…ரா….ஸ்ரீ சுப்பராயப் பிள்ளை வீட்டுக்கு எதிர்வீட்டில் மகா…ரா…..ரா….ஸ்ரீ ரத்தின முதலியார் அவர்கட்கு என்று விலாசம் எழுதுவார்.
இதுபோன்ற பல சுவையான தகவல்களை, அக்கால வழக்கங்களை வள்ளலார் வரைந்த திருமுகங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
தயவு