கரிசலாங்கண்ணியும் தூதுளையும்
கரிசாலையை தினந்தோறும் பச்சையாகவாவது சமையல் செய்தல் முதலிய வகையாலாவது சாப்பிட்டு வரவேண்டும். பிரதம உள்ளுடம்பை நீடிக்கப் பண்ணும். மேற் குறித்த மூலிகையை அலஷியம் செய்யாது ஆசாரியன் திருவடியின் கண்ணே இலக்ஷியம் வைத்து, எவ்வித தந்திரத்தினாலாவது தினம் தினம் உட்கொண்டால், தேகக் கெடுதியாகிய அசக்தம் நீங்கி தேகம் வலுவுள்ளதாகி நெடுநாளைக்கு இருக்கும். முத்தியடைவதற்கு சகாயமாகவும் இருக்கும். மகான்கள் இடத்தில் அனந்த காலம் காத்து இருந்தாலும் மேற் குறித்த மூலிகையின் பிரயோஜனத்தையும் உண்மையையும் அனுபவத்தையும் வெளியிடார்கள். பரம கருணாநிதியாகிய நம் தலைவனால் கிடைத்தது. அசட்டையின்றி உட்கொள்ளல் வேண்டும். மேற்குறித்த மூலிகை ஜலம் இல்லாத இடத்திலுள்ளதில் காரமிராது, தந்தசுத்தி செய்து அண்ணாக்கில் தர்ஜினி விரலால் தேய்க்க மேற்குறித்த மூலிகையால் பித்தநீர் வெளியாகி, கண்ணொளி விசேஷிக்கும். நேராத பட்சத்தில் பொற்றலைக் கையாந்தகரை கூடும். மேற்குறித்த மூலிகை செந்தூரம் செய்வதற்குச் சிறந்தது. உலர்த்திக் குழித்தயிலம் வாங்கியும் செந்தூரம் செய்யலாம். அதுபோலவே, அறிவை விளக்குவதற்கும் கவனசக்தி உண்டுபண்ணுவதற்கும், கரணம் ஓய்வதற்கும், கபத்தை அரிப்பதற்கும் யோக்கியதை உடைய ஓஷிதி தூதுளை. அதை மேற்குறித்தபடி அனுஷ்டித்தால் விசேஷ நன்மை செய்யும். கரிசாலை தந்த சுத்தியால் வசீகரமும் நேரிடும் உண்மை.
Write a comment