1. பசி என்கிற நெருப்பானது ஏழைகள் தேகத்தினுள் பற்றி எரிகின்றபோது ஆகாரத்தால், நாம் அதனை அவிக்க வேண்டும். அப்படி ஆகாரத்தால் அவிக்கின்றதுதான் ஜீவகாருண்யம்.
2. பசி என்கிற விஷக்காற்றானது ஏழைகள் அறிவாகிய விளக்கை அவிக்கின்ற தருணத்தில் நாம், ஆகாரம் கொடுத்து அவியாமல் ஏற்ற வேண்டும். அப்படி ஆகாரம் கொடுத்து அவியாமல் ஏற்றுவதே ஜீவகாருண்யம்.
3. கடவுள் இயற்கை விளக்கத்திற்கு இடமாகிய ஜீவதேகங்கள் என்கிற ஆலயங்கள் பசியினால் பாழாகுந் தருணத்தில் நாம், ஆகாரம் கொடுத்து அந்த ஆலயங்களை விளக்கம் செய்விக்க வேண்டும். அப்படி ஆகாரம் கொடுத்து அந்த ஆலயங்களை விளக்கம் செய்விப்பதே ஜீவகாருண்யம்.
4. கடவுள் இன்பத்தைப் பெறுகின்ற நிமித்தம் தேகங்களிலிருந்து குடித்தனம் செய்கின்ற ஜீவரது தத்துவக் குடும்பம் முழுதும் பசியினால் நிலை தடுமாறி அழியுந் தருணத்தில் நாம், ஆகாரம் கொடுத்து அக்குடும்பம் முழுவதையும் நிலைபெறச் செய்ய வேண்டும். அப்படி நிலைபெறச் செய்வதே ஜீவகாருண்யம்.
5. பசி என்கிற புலியானது ஏழை உயிர்களைப் பாயந்து கொல்லத் தொடங்குந் தருணத்தில் நாம், அப்புலியைக் கொண்று அவ்வுயிரை இரட்சிக்க வேண்டும். அப்படி இரட்சிப்பதே ஜீவகாருண்யம்.
6. பசி என்கிற விஷம் தலைக்கேறி ஜீவர் மயங்குந் தருணத்தில் நாம், ஆகாரத்தால் அவ்விஷத்தை இறக்கி மயக்கம் தெளியச் செய்ய வேண்டும். அப்படி மயக்கம் தெளியச் செய்வதே ஜீவகாருண்யம்.
7. பசி என்கிற கொடுமையாகிய தேள் வயிற்றில் புகுந்து கொட்டுகின்ற போது கடுப்பேறிக் கலங்குகின்ற ஏழைகளூக்கு நாம், ஆகாரத்தால் அக்கடுப்பை மாற்றிக் கலக்கத்தைத் தீர்க்க வேண்டும். அப்படிக் கலக்கத்தைத் தீர்ப்பதே ஜீவகாருண்யம்ல்.
8. நேற்று இராப்பகல் முழுதும் நாம் அரைப் பங்கு கொன்று தின்ற பசி என்கிற் அபாபி இன்னும் வருமே இதற்கு என்ன செவோம்? என்று ஏக்கம் கொல்கின்ற ஏழை ஜீவர்களது ஏக்கத்தை நாம் நீக்க வேண்டும். அப்படி ஏழை ஜீவர்களது ஏக்கத்தை நீக்குவதே ஜீவகாருண்யம்.
9. வெயிலேறிப் போகின்றெதே! இனி பசி என்கிற வேதனை வந்து சம்பவிக்குமே! இந்த விதி வசத்திற்கு என்ன செய்வது? என்று தேனில் விழுந்த ஈயைப் போல், திகைக்கின்ற ஏழை ஜீவர்களுடைய திகைப்பை நீக்குவதே ஜீவகாருண்யம்.
10. இருட்டிப் போகின்றதே! இனி ஆகாரம் குறித்து எங்கே போவோம்! யாரைக் கேட்போம்! என்ன செய்வோம்! என்ற விசாரத்தில் அழுந்திய ஏழை ஜீவர்களது விசாரத்தை நாம் மாற்ற வேண்டும். அப்படி ஏழை ஜீவர்களது விசாரத்தை மாற்றுவதே ஜீவகாருண்யம்.
Write a comment