சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்
அருட்பெருஞ்ஜோதி
உத்தரஞான சித்திபுரம் என்றும் உத்தரஞான சிதம்பர மென்றும் திருவருளால் ஆக்கப்பட்ட ஆக்கச் சிறப்புப் பெயர்களூம், பார்வதிபுரமென்றும் வடலூரென்றும் உலகியாற் குறிக்கப்பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப்பதியினிடத்தே இயற்கைவிளக்க நிறைவாகியுள்ள ஓர் சுத்த சிவானுபவ ஞானசபையில் இயற்கையுண்மை நிறைவாகிய திருவுருவைத் தரித்து இயற்கையின்ப நிறைவாகிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எவ்வுயிரும் இன்பமடைதற் பொருட்டே செய்து அருளுகின்ற
எல்லாம் வல்ல தனித்தலைமைக் கடவுளாகிய
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே
தேவரீரது திருவருட்சமூகத்தின் யான் செய்து கொள்ளுகின்ற சமரசசுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்:
இவ்வுலகினிடத்து ஆறறிவுள்ள உயர்வுடைத்தாகிய தேகத்தைப்
பெற்ற யான், இத்தேகத்திற்கு இடைக்கிடை நேருகின்ற மரணம், பிணி, மூப்பு, பயம், துன்ப முதலிய அவத்தைகள் , எல்லாவற்றையும் நிவர்த்தி செய்து, இத்தேகத்தையே நித்திய தேகமாக்கிக்கொண்டு எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எத்துணையும் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் வேண்டுமென்பதே, எனது சத்தியமான அதி தீவிர முயற்சியாக இருக்கின்றது.
எனது விருப்ப முயற்சி இங்ஙனமாக, அவத்தைகளெல்லாவற்றையும் நீக்கி இத்தேகத்தி நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் எதனாற் பெறுதல் கூடுமென்று அறியத் தொடங்கியதருணத்து,
வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது எல்லாமுடைய கடவுளது திருவருட்சுதந்தரம் ஒன்றாலே பெறுதல் கூடுமென்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.
பின்னர் திருவருட் சுதந்தரம் நமக்கு எந்த வழியாற் கிடைக்குமென்று அறியத் தொடங்கிய தருணத்து
எனது, யானென்னும், தேக சுதந்தரம், போகசுதந்தரம், ஜீவசுதந்தரம் என்னும் மூவகைச் சுதந்தரங்களும் நீங்கியவிடத்தே கிடைக்குமென்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன், ஆதலின் எனது சுதந்தரமாகக் கொண்டிருந்த தேகசுதந்தரத்தையும், போகசுதந்தரத்தையும், ஜீவசுதந்தரத்தையும், தேவரீர் திருவருட்கே சர்வ சுதந்தரமாகக் கொடுத்துவிட்டேன் கொடுத்த தருணத்தே இத்தேக ஜீவனும், போகப் பொருட்களும் சர்வசுதந்தரராகிய கடவுள் பெருங்கருணையாற் கொடுக்கப் பெற்றனமன்றி, நமது சுதந்தரத்தாற் பெற்றனவல்ல வென்னும் உண்மையை அருளால் அறிவிக்கவும் அறிந்து கொண்டேன், இனித்தேகத்தினிடத்தும் ஜீவனிடத்தும் போகப் பொருள்களிடத்தும் தேவரீர் திருவருள் சாட்சியாக எனக்கு எவ்விதத்தும் யாதோர் சுதந்தரத் தோற்றமும் தோற்றமாட்டாது.
தேவரீர் திருவருட் சுதந்தரத்தை என்னிடத்தே வைத்தருளி மரணம், பிணி, மூப்பு, பயன், துன்ப முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்துமழியாத பேரின்பசித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல் வேண்டும்.
இத்தேகத்தைப் பெற்ற எல்லா சீவர்களும் எனக்கறிவித்த வண்ணமே அறிவித்து அவரவர்களையும் உரிமையுடையவர்களாக்கி வாழ்வித்தல் வேண்டும்.
தேவரீர் பெருங்கருணை ஆட்சிக்கு
வந்தனம் வந்தனம்
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
திருச்சிற்றம்பலம்
தயவுத்திரு
ஜோதிமுருகன் அய்யாவின்
குறிப்புகள்.
Write a comment