Vallalar Universal Mission Trust   ramnad......
மூலிகை மருத்துவர்

மூலிகை மருத்துவர்
485 வகையான மூலிகைகளையும் அவை எவ்வகையான தன்மையுடையன – என்றும் வள்ளலார் விளக்கியிருக்கிறார். இதைத் தவிர சிரஞ்சீவி மூலிகைகளாக ஐவகை மருந்துகளைக் குறிப்பிடுகிறார்.
வள்ளலார், தேர்ந்த மருத்துவராகத் திகழ்ந்தார். நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் மருத்துவம் கூறி நோயகற்றியிருக்கிறார். 1864ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் நாளன்று இறுக்கம் ரத்தின முதலியாருக்கு வள்ளலார் வரைந்த திருமுகம் அவருடைய மருத்துவத் துறைத் தேர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
“தங்களுக்கு இருமலால் தேகம் அபக்குவமாக இருக்கிறதாக தபாலில் எனக்குத் தெரிவித்தார். அவர் தெரிவித்தது தொடங்கி என் நினைப்பெல்லாம் தங்களிடமாகவே இருக்கிறது.
கடினமான அவுஷதங்களைக் கொள்ள வேண்டாம். முசுமுசுக்கை சமூலங்கொண்டு வந்து பசும்பாலில் ஊறவைத்து உலர்த்தி இடித்துச் சூரணமாக வைத்துக் கொண்டு நித்தியம் காலையில் தேயிலைத் தண்ணீர் காய்ச்சி சாப்பிடுவது போல சலத்தில் போட்டு சுண்ட வைத்து பசும்பால், சர்க்கரை, மிளகுப்பொடி கலந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டு வர வேண்டும். உத்தியோகம் தடையாயிருந்தால் அதை விடுத்து தேகத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள். தேகம் பக்குவமான பிறகு சிவானுகிரகத்தால் உத்யோகம் சம்பாதித்துக் கொள்ளலாம்.”
மேலும் ஒரு சில செய்திகளை எழுதியபின்பு ‘தாங்கள் சிவாயநமவென்று சிந்தித்திருப்பார்க்கு அபாயம் ஒருநாளுமில்லை’ என்பதை ‘சத்தியமாகக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று முடிக்கிறார்.
அன்பர் தேகசுகமின்றி அல்லல்படுகிறார் என்பதை அறிந்ததுமே, அவருடைய நோயகற்றும் மருத்துவத்தை உடனே எழுதியனுப்பினார். தேக ஆரோக்யத்தைப் பேணுவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று அனைவருக்கும் உபதேசம் செய்வார். பிறவிப் பிணிக்கு மருந்தை அளிப்பவராக உடற்பிணிக்கு மருந்து தருபவராக, தேர்ந்த மருத்துவராகவும் திகழ்ந்த வள்ளலார் வாழ்வு நிகழ்ச்சிகள் ஏராளம்! ஏராளம்!.
தயவு
மரணமிலாப் பெருவாழ்வு
“வனைந்துவனைந் தேத்தும்நாம் வன்மின் உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே”.
‘என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம்’ என்று வள்ளல்பெருமான் ‘மரணமிலாப் பெருவாழ்வு’ என்ற தலைப்பிலே 28 பாடல்களில் (176 வரிகள்) விவரிக்கின்றார்.
வள்ளல் பெருமான் பல அரிய உபதேசங்களை மக்கள் உய்வதற்காக வாரி வழங்கினார்கள். மக்கள் அதனை ஏற்றார்கள். ஆனால் அதன் வழிநடக்கத் தவறினார்கள். பெருமான் இதையுணர்ந்து வருந்தி, ‘கொள்வாரில்லையே’ என்று கூறியிருக்கிறார். இவ்வுலகில் வாழ்ந்திருக்க விருப்பமின்றி வள்ளலார் சித்தி வளாகத்தில் சில நாட்கள் மறைந்து வாழ்ந்து வந்தார். பின்னர் வெளிப்பட்டு சீடர்களை அழைத்தார்.
1874 ஆம் வருஷம் (ஜனவரி மாதம் முப்பதாம் நாள்) தைப்பூச நன்னாள் பத்தொன்பதாந் தேதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு பதினைந்து நாழிகையளவில் பெருமான் அன்பர்களிடம் ஒருவார்த்தை மொழிந்தார்.
“நான் சித்தி வளாகத்தினுள்ளே பத்து பதினைந்து தினங்கள் இருக்கப் போகிறேன். எவரும் அவநம்பிக்கையடைய வேண்டாம். ஒருகால் எவரேனும் உள்ளே பார்க்க நேர்ந்தால், எதுவும் தெரியாது. இறைவன் என்னைக் காட்டிக் கொடுக்கமாட்டார்”….. இவ்விதம் கூறிவிட்டு வள்ளலார் சித்தி வளாகத்தினுள்ளே சென்றுவிட்டார்கள். அதை திருக்காப்பிடப்பட்டது. நாட்கள் பல சென்றன. வள்ளலார் பல தினங்கள் உண்ணாமலே உயிர் வாழும் சித்தி பெற்றவர் என்பதை அனைவரும் அறிந்திருந்தார்கள். அணுக்கத் தொண்டர்களான வேலாயுத முதலியார் போன்றோர் வள்ளலார் மரணமிலாப் பெருவாழ்வு பெற்றிருப்பார் என்றே எண்ணினார்கள்.
சாகாதிருப்பதே சன்மார்க்கத்தின் முடிவு. வள்ளல் பெருமான் சுத்த தேகம், பிரணவ தேகம், ஞானதேகம் என மூவகை தேக சித்தியைப் பெற்றவர். இத்தகைய தேக சித்திகளைப் பெற்றவர்களின் பூதவுடல் நிலத்தில் விழாது. அவை அருளோடு இரண்டறக் கலந்து விடும். அத்தகைய அருளாளருக்குப் பிறப்பு இல்லை. இதுவே நித்திய தேகம் இனி ஒரு தேகம் அவர்களுக்கு இல்லை.
தைப்பூசத் திருநாளில் வடலூர் அருட்பிரகாச வள்ளலார் சித்தி வளாக மாளிகையினுள்ளே புகுந்து இரண்டரை நாழிகையில் இறையருளுடன் ஒன்றினார். அருட்பெருஞ்ஜோதியில் கலந்தார்.
தயவு

ஒரு துறையில் சிறந்து விளங்குபவர், வேறு துறையில் திறமையற்றவராக இருப்பார்கள். சராசரி மனிதரின் இயல்பு இது. ஆனால் வள்ளல் பெருமான் பல துறைகளிலும் சிறந்தோங்கியிருந்தார். தொழுவூர் வேலாயுத முதலியார், இறுக்கம் ரத்தின முதலியார், பொன்னேரி சுந்தரம்பிள்ளை போன்ற பல மாணாக்கர்களுக்கு பாடம் போதித்து சிறந்த போதகாசிரியராக விளங்கினார்.
மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் போன்ற நூல்களை எழுதிய நூலாசிரியராவார்.
தமது 28 ஆவது வயதிலேயே ஒழிவிலொடுக்கம் என்ற நூலையும் 32ஆம் வயதில் தொண்ட மண்டல சதகம் நூலையும் 34 ஆம் வயதில் சின்மய தீபிகை என்ற நூலையும் ஆராய்ந்து பதிப்பித்து பதிப்பாசிரியராவார்.
ஞானச் செல்வத்தை அன்பர்களுக்கு வழங்கிய வள்ளலார் ஞானாசிரியராகத் திகழ்ந்தார்.
சன்மார்க்க விவேக விருத்தி என்ற பெயரில் சன்மார்க்கக் கோட்பாடுகளைப் பரப்பி பத்திரிகை ஒன்றை நடத்தி பத்திரிகையாசிரியராகச் சிறந்தார்.
பலவற்றிற்கு அற்புதமான வியாக்யானங்களை அளித்துள்ளார். சேக்கிழாரின் ‘உலகெலாம்’ என்ற மெய்ம்மொழிப் பொருள் விளக்கமும் தமிழ்’ என்ற சொல்லுக்கு அளித்த விளக்கமும் புகழ்பெற்றவைகள். இவரை வியாக்யான கர்த்தர் என்று போற்றுவதற்கு இவையே சான்றுகளாகும்.
மருத்துவத்திலும் வள்ளல் பெருமான் மாமேதையாகத் திகழ்ந்தார். மருத்துவ மூலிகைகளின் குண அட்டவணை என்றும் அனைவருக்கும் பயனளிப்பதாகும். பல நோய்களுக்கும் தக்க மருந்தினை தமது கைப்படவே தயாரித்து அளித்து நோய் தீர்த்திருக்கிறார். வள்ளலார், நண்பர்களுக்கு கடிதங்களில் மருந்து செய்வதைப் பற்றி எழுதி அனுப்பியதும் உண்டு.
வள்ளல் பெருமான் கல்வெட்டு ஆராய்ச்சியாளர், முதன் முதலில் திருக்குறள் வகுப்பு நடத்தியவர். சங்கம் ஒன்று அமைத்து, அதற்குத் தனியாகக் கொள்கை, கொடி, பாடல் என தனி மார்க்கத்தை உருவாக்கியவர். மனித குலம் அனைத்திற்கும் பயன் தரக்கூடிய ஆன்மநேய ஒருமைப்பாட்டைத் தோற்றுவித்த வள்ளலார், ஒரு சமரச சுத்த சன்மார்க்கவாதியாக விளங்கினார்.
இவ்வாறாக, பல துறைகளிலும் ஈடுபட்ட சமயங்களில் வள்ளலார் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் நடைபெற்றதை எல்லாம் விரித்தால் பெரிதாகும். காவியமாகும்.
அருட்பிரகாச வள்ளலார், ஆம்; அவர் ஒரு சகாப்தம்.
தயவு
2 Comments
siva b
வள்ளலார் பற்றிய சில தகவல்களை இந்த பக்கத்தில் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.
வள்ளல் பெருமானின் வாழ்க்கை வரலாறு பற்றி படிக்க மிகவும் ஆவலாய் உள்ளேன். இணைய தளத்தில் உள்ளதா? தெரிவிக்க வேண்டுகின்றேன். நன்றி.
Friday, August 1, 2008 at 22:37 pm by siva b
rajaveer jothimurugan
தயவு வணக்கம்
வள்ளலார் வாழ்க்கை வரலாறு
vallalar.org, ல்
ebooks, tamil books, (மற்ற ஆசிரியர்கள் என்ற தலைப்பின் உள்ளே சென்றால் வள்ளலார்
வாழ்க்கை வரலாறு உள்ளது) download செய்து கொள்ளலாம்.
தயவு வணக்கம்
Sunday, August 3, 2008 at 18:44 pm by rajaveer jothimurugan