அனைவரும் எழுந்து நின்றனர்
மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர், இராமலிங்க வள்ளலார் தம்மை அவமதித்துவிட்டார் என்று வழக்குத் தொடர்ந்தார்.
நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக இராமலிங்க வள்ளலார் வந்தார். தூய வெள்ளாடை உடம்பு முழுவதும் போர்த்தியிருந்தார். இத்தகைய இடங்களுக்கு வர நேர்ந்ததே என்ற கவலைக்குறி முகத்தில் தோன்றியது. கண்கள் சினத்தில் சிவந்திருந்தன. அவருடைய வருகையால் நீதிமன்றத்தில் அமைதி ஏற்பட்டது. அனைவரும் எழுந்து நின்று வள்ளல் பெருமானுக்கு மரியாதை அளித்தார்கள்.
வழக்கைத் தொடுத்திருந்த யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரும் தம்மை அறியாமலே எழுந்து நின்றதை நீதிபதி கண்டார். வியப்படைந்தார். விசாரணை துவங்கியது.
ஆறுமுக நாவலர், வள்ளலார் தம்மை அவதூறாகப் பேசினார் என்றும் பெயரும் புகழும் பெற்றிருக்கும் தம்மை நாடறிய ‘நாவன்மையற்றவர்’ என்று பறை சாற்றினார் என்றும் குற்றம் சாட்டினார். நாவலரின், குற்றச்சாட்டுக்கு வள்ளல் பெருமானே வழக்கு மன்றத்தில் பதிலளித்தார். அழகாக, தெளிவாக, சுருக்கமாக அனைவருக்கும் புரியும்வண்ணம் இனிய குரலில் மென்மையாகவும் அழுத்தமாகவும் எடுத்துரைத்தார்கள்.
இராமலிங்க வள்லலாரின் வாதம் ஏற்கப்பட்டது. நீதிபதி தமது தீர்ப்பைக் கூறினார். மக்கள் ஆவலுடன் கேட்கலானார்கள்.
“நாவலர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை. நீதிமன்றத்துக்கு பிரதிவாதியான இராமலிங்கர் வந்ததும் அனைவரும் மரியாதையுடன் எழுந்து நின்றபோது வாதியான நாவலரும் எழுந்து நின்றார். அனைவரும் போற்றி வணங்கி வழிபடுகின்ற ஒருவர், அவதூறாகப் பேசியிருக்க முடியாது என்றே நீதிமன்றம் கருதுகிறது. நீதிமன்றம், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறது”.
நாவலர், இராமலிங்க வள்ளலார் மீது அவதூறு வழக்குத் தொடுத்தார் எனினும், வள்ளலரிடம் பிற்காலத்தில் அன்பும் பெருமதிப்பும் வைக்கலானார். இந்த வழக்கு வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
தயவு
Write a comment