சன்மார்க்க வழிபாடு
இத்தகைய இறைவழிபாடு புதுமையானதாக இருக்கிறதே. இது ஆகமங்களுக்குப் புறம்பானதும் ஆயிற்றே பழமை வாதிகள் பலர் வள்ளல் பெருமானின் ஜோதி வழிபாட்டையும் ஞானசபையில் வழிபாடும் முறைகள் பற்றியும் எதிர்க்குரல் கொடுத்தார்கள்.
ஞானசபையில் ஐந்தடி உயரமுள்ள நிலைக்கண்ணாடியைப் பொருத்துவதற்காக சென்னையிலிருந்து வரவழைத்தார் வள்ளலார்.
அந்நிலைக் கண்ணாடியில் இறையருள் தங்க வேண்டும் என்பதற்காக சித்தி வளாகம் எனப்படும் தமது இருப்பிடத்தில் 48 நாட்கள் வைத்திருந்து கண்ணாடி முன் அமர்ந்து வழிபாடுகள் செய்தார்.
பின்பு அந்தக் கண்ணாடி உரிய முறையில் உத்தரஞான சிதம்பரம் எனப்படும் ஞானசபையிலே பொருத்தப் பட்டது. கண்னாடியின் முன்பு அகண்ட தீபமொன்று ஏற்றி வைக்கப்பட்டது. இறைவழிபாடு செய்யும்போது தூய்மையும் அமைதியும் நிறைந்திருக்க வேண்டுமென்பதே அருட்பிரகாச வள்ளலாரின் திருவுள்ளக் கிடக்கையாக இருந்தது.
ஆரவாரமான பக்தியை பெருங்குரலில் கோஷங்கள் இடுவதை அவர் விரும்பவில்லை. எனவே ஞானசபையில் மத்தளம், நாதஸ்வரம், கண்டாமணி, தாளம், போன்ற இசைக்கருவிகள் ஒலிக்க வேண்டாம் என்றார். இது போன்ற வழிபாடு சன்மார்க்கத்துக்குப் புறம்பானது என்று அவர் எண்ணினார்.
அலங்காரம், அபிஷேகம், இவற்றிற்கு ஆகும் செலவில், எளிய மக்களுக்கு உதவலாம் என்றும் அவர் வலியுறுத்தி வந்தார். வள்ளலாரின் கருத்துக்களையெல்லாம் அவருடைய சொற்பொழிவுகளில் கேட்டுக் கொண்டிருந்த சிவாசாரியார் ஒருவர், தமது பழமையான ஆசாரங்களை விடுத்தார்.
அமைதியான, ஆன்மாவிற்கு ஒளிதரவல்ல வழிபாடே சிறந்ததென முடிவுக்கு வந்தார் வள்ளலார். சமரச சுத்த சன்மார்க்கத்தின் நெறி பற்றிய சிவாசாரியாரை ஞானசபையில் வழிபாடு செய்ய வள்ளலார் அமர்த்தினார்.
Write a comment