அருட்பெருஞ்ஜோதி மருந்து - நம்
அறிவினை ஊக்கிடும் கல்விமருந்து!
தெருப் பெரும் நீதி மருந்து - நம்
தெளியாத உள்ளத்தைத் திருத்தும் மருந்து.
அருட்பெருஞ்ஜோதி
நல்லன ஆற்றும் மருந்து - இது
நாட்டிற்கும் வீட்டிற்கும் நடுவாம் மருந்து
வல்லமை கூட்டும் மருந்து - இது
வன்முறை நன்முறை ஆக்கும் மருந்து!
அருட்பெருஞ்ஜோதி
உண்மையைச் சொல்லும் மருந்து - ஆன்ம
ஒருமையை நல்கிடும் மருந்து
கண்ணியம் காக்கும் மருந்து - நம்
கடமையில் எப்போதும் கலக்கும் மருந்து
அருட்பெருஞ்ஜோதி
அன்பினில் ஓங்கும் மருந்து - நம்
அன்னையைப் போன்று நல் தாய்மை மருந்து
நன்றியைக் காட்டும் மருந்து - நம்
நம்பிக்கை ஊட்டிடும் அருமை மருந்து
அருட்பெருஞ்ஜோதி
கற்பனை இல்லா மருந்து - நம்
கண்முன்னே நின்றொளிர் கருணை மருந்து
பொற்புறும் ஞானமருந்து - இந்தப்
பூமியில் மானுட நேய மருந்து
அருட்பெருஞ்ஜோதி
கடைகளில் இல்லா மருந்து - நம்
கைகளில் ஆடிடும் உதவி மருந்து
நடைமுறை வாழ்க்கை மருந்து - நம்
நட்பினை வளர்த்திடும் புனித மருந்து
அருட்பெருஞ்ஜோதி
பொல்லாங்கு சொல்லா மருந்து - உலகில்
புறம் பேசும் நாவினை அடக்கும் மருந்து
எல்லார்க்கும் நல்ல மருந்து இது எளிய மருந்து
எளியர்க்கும் எளிய மருந்து.
அருட்பெருஞ்ஜோதி
உடைகளில் வெண்மை மருந்து - இது
உம்மையும் எம்மையும் இணைக்கும் மருந்து
மடமையை வெளுக்கும் மருந்து - மனதில்
மடங்களைக் கட்டாத புதுமை மருந்து.
அருட்பெருஞ்ஜோதி
- அருட் கவியரசு . கவிஞர் அருள்நம்பி
(தலைவர், வள்ளலார் தமிழ் சங்கம் வில்லிவாக்கம்)
கவிதைக்கு வாழ்த்துக்கள்
முயிசிக்கு தொடரட்டும்
அருள் இயகம் வளரட்டும்
அருட்பெரும்ஜோதி நிலைய அன்பர் சுங்கை பெட்டாணி