வடவேங்கடம் தென்குமரி தமிழ்க் கூறும் நல்லுலகில் தமிழன்னை ஈன்றெடுத்த அருந்தவ புதல்வர் பொமுறைச் செல்வர் உலகப்பேராசான் திருவள்ளுவர்,
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ் வார்
என்னும் குறட்பா மூலமாக, அன்பர்களின் உள்ளமாகிய தாமரை மலரில் வீற்றிருக்கும் இறைவனின் பெருமை பொருந்திய திருவடிகளை இடைவிடாமல் நினைப்பவர் எல்லா உலகங்களுக்கும் மேலானதாகக் கருதப்படும் “முத்தி” எனும் பேரின்ப வாழ்வில் எப்பொழுதும் வாழ்வார் என்று அற்புதமாக குறிப்பிடுகிறார். அய்யன் திருவள்ளுவரைப் போன்றே பேரருளாளர்கள் பலரும் இறைவனின் திருவருளைப் பெற விழைவோர் உள்ளத்தைக் கோயிலாக்கி அங்கு இறைவனை இருத்தி உண்மை அன்புடனும், பக்தியுடனும் வழிபட வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியுள்ளனர்.
பஞ்ச பூதங்கள் என்று அழைக்கப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும் நம் உடம்பில் ஐக்கியம் ஆகியுள்ளது. நம் உடம்பின் உள்ளே, உடம்பு நிலமாகவும், இரத்தம் நீராகவும், உடல்வெப்பம் நெருப்பாகவும், மூச்சு காற்றாகவும், உயிர் ஆகாயமாகவும் உள்ளது. இத்தகைய சிறப்புகளை உள்ளடங்கிய யாக்கையின் அருமை பெருமைகளை நந்தி தேவரிடம் உபதேசம் பெற்ற அருட்சித்தரும் சிவயோகியுமான திருமூலர்,
உடம்பால் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவுமாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
உடம்பை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புள்ளே உத்தமன் கோயில்கொண்டேன் என்று
உடம்பினை யானிருந்தோம்புகின்றேனே.
என்னும் பாடல் மூலம் உடம்பை வளர்த்ததற்கான காரணத்தை, நம் உடம்புள்ளே உத்தமன் கோயில் கொண்டிருப்பதையும் அற்புதமாக படம்பிடித்து காட்டுகிறார்.
உயிர் தனித்து நின்று செயல்படுவது இயலாது. உயிரானது அறம் முதலிய உறுதிப்பொருள்களைப் பெற வேண்டுமாயின் அதற்கான முயற்சிகளை உடம்போடு கூடிநின்றே செய்தல் வேண்டும். உயிர், உடம்பு ஆகிய இரண்டும் இணைந்திருந்தால்தான் இறையனுபவம் பெறமுடியும் எனப்தை வள்ளற்பெருமானும் திருமூலரும் நன்றாகவே உணர்ந்திருந்தனர். வள்ளற்பெருமான் புலன்களின் கூட்டமைப்பான சுத்த தேகத்தைப் பொன்னுடல் என்று குறிப்பிடுகிறார்.
சுத்த வடிவஞ் சுகவடிவாம் ஓம்கார
நித்த வடிவு நிறைந்தோங்கி சித்தனுமோர்
ஞானவடிவுமிங்கே நான் பெற்றேன் எங்கெங்கும்
தான் வினை பாட்டியற்றத்தான் சுத்த உடல்.
வள்ளற்பெருமான் பொன்னுடல் உள்ளே விளங்கும் உள்ளத்தைப் பெரும்கோயிலாக்கி அதன் உள்ளே தணிகையமர் பெருவாழ்வை எழுந்தருளச் செய்தார். உள்ளத்தின் உள்ளே இருந்த அப்பரம்பொருளின் வடிவத்தையே தம் தவ வலிமையினால் கண்ணாடியில் கண்குளிர கண்டு பேரானந்தம் அடைந்தார்.
வள்ளற்பெருமான் பெற்ற அருளனுபவத்தை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை,
“உள்ளத்தின் உள்ளான் அடி அதுநீ உணர வேண்டும் அடி”
உள்ளத்தில் காண்பாய் எனில் – கோயில் உள்ளேயுங் காண்பாய் அடி
எனப் பாடியுள்ளார்.
திருநாவுக்கரசரும், ஐம்புலனும் அகத்தடக்கி எப்போதும் இனியானை என் மனத்தே வைத்தேனே என்றும் திருவே என் செல்வமே தேனே வானோர் செழுஞ்சுடரே செழுஞ்சுடர் நற்சோதி மிக்க உருவே என்ற உறவே என் ஊனே உள்ளமே உள்ளத்தின் உள்ளே நிறை கருவே என் கற்பகமே என்று மாசற்ற கொள்கை மனதை அடைந்தக்கால் இறைவனைக் காட்டும் உடம்பின் திறத்தை அழகுறப்பாடியுள்ளார்.
வாயிலார் நாயனார் தம் உள்ளத்திலே திருக்கோயில் எழுப்பி நற்றவத்தவர் உள்ளிருந்து ஓங்கும் இறைவனை அங்கு எழுந்தருளச் செய்து அகழசை செய்த அற்புத நிகழ்வைத் திருத்தொண்டர் புராணம் விளக்குகிறது. சமரச வானில் சிறகடித்துப் பறந்த தாயுமானவர்
நெஞ்சமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே
மஞ்சன நீர் பூசை கொள்ள வாராய் பராபரமே
என்று வேத முதல்வனை விரும்பி அழைத்தார்.
வள்ளற்பெருமானும் மகாதேவ மாலையில் ஊனேறும் உயிர்க்குள் நிறையொளியே என்னும் அன்பர் திருஉளம் கோயில் ஆகக் கொண்டே அற்புதச் சிற்சபை ஓங்கும் அரசே என்றும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப் பெருங்கருணையை வியந்து போற்றுகின்றார்.
ஆறாம் திருமுறை
பொன்வடிப்பேற்றில், உள்ளத்தை உறைவிடமாகக் கொண்டு
விளங்கும் இறைவன், இருள் வடிவம் கொண்ட மாயை
கன்மம், மலம் ஆகிய மூன்றும் நில்லாது தன்னைவிட்டு
நீங்குமாறு தன் உள்ளத்தில் நிலையாய் விளங்குகின்றான் என்கிறார்.
துன்பம் கெடுத்துச் சுகம் கொடுத்தான் என் தனக்கே
அன்பகத்தில் வாழும் சிற்றம்பலத்தான் – இன்புருவம்
தாங்கினேன் சாகாத் தனிவடிவாம் பொற்றொளியால்
ஓங்கினேன் உண்மை வரை.
அன்பு நிறைந்த உள்ளம் உடைய மெய்யன்பர்களின் உள்ளத்தில் எழுந்தருளும் அழகிய சிற்றம்பலமுடையான் தனக்கு எய்திய துன்பங்களைப் போக்கி சுகபோக வாழ்வு தந்ததையும், அதனால் இன்ப உருவமும் பிரணவ தேகம் என்னும் ஒளியுடம்பு பெற்று அருளொளியால் உயர்ந்திருப்பதாகவும் மேற்காணும் பாடலில் குறிப்பிடுகின்றார்.
உள்ளம் என்று சொல்லப்படுவது நெஞ்சமோ அதற்குள் இருக்கும் இதயமோ அல்ல. ஒளி பொருந்திய சூரிய சந்திரராக விளங்கும் இரு கண்களும் மேல் நோக்கிப் பார்க்கும் இடமாகிய புருவ நடுவே உள்ளம். அவ்விடத்தில் தான் ஆன்ம ஒளி பிரகாசித்துக் கொண்டு இருக்கிறது. அவ்விடத்தைத்தான் கோயிலாகக் கொண்டு இறைவன் உறைகின்றான் என்று கூறும் வள்ளற்பெருமான். அதன் சுருக்கமாக, “மன்புருவ நடுமுதலா மனம் புதைத்து” என்று கூறுகிறார். மேலும் என் உள்ளத்தே அங்கையில் கனி போன்று அமர்ந்தருள் புரிந்த அருட்பெருஞ்ஜோதி, வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம், அன்புளோர் தம் தெருளுடைய உளமுழுதும் கோயில் கொண்ட சிவம், இகத்தினும் பரத்தினும் என்கிடர் சாராது அகத்தினும புறத்தினும் அமர்ந்த மெய்த்துணை என்னும் அருட்பாவரிகள் உள்ளமெனும் கோயிலில் உறைகின்ற இறைவனின் சிறப்பை உணர்த்துகின்றன.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப்புலனைத்துங் காளா மணி விளக்கே
- திருமந்திரம்
உள்ளத்தை கோயிலாக்கி அங்கு இறைவனை விளங்கச் செய்து உண்மை பக்தியுடனும், அன்புடனும் வழிபட்டால் நல்லுடலும், நல்லறிவும் வாய்க்கப் பெற்று மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.
- சு. வீரபத்திரன், M.A. B.Ed. திருவண்ணாமலை