Vallalar Varugai - வள்ளலார் வருகை பத்திரிக்கை
சன்மார்க்க சங்கங்களின் வளர்ச்சி

ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன்
மாளாத ஆக்கை பெற்றேன்
கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே
நடுவிருந்து குலாவு கின்றேன்.

என வள்ளற்பெருமானை, ஒற்றுமை உணர்வுடன் கூடும் சங்கங்களின் நடுவிலிருந்து மகிழ்வதாக ஒரு பாடலில் தெளிவாக்குகிறார். அப்பேர்ப்பட்ட சங்கங்களின் இன்றைய நிலை என்ன? அவற்றின் செயல்பாடுகளில் எத்துணை உண்மைநிலை உள்ளது, எத்துணை கலப்புகள் உள்ளன என்று சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம்.

பொதுவாக சங்கங்கள் அவரவர்கள் செய்வது சரியென்று நினைத்து தனித்தே இயங்குகின்றன. ஆனால், பெருமானின் திருவுளப் பாங்கின்படி சிந்தித்து ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான், பெருமானின் திருவருட்பா கருத்துக்களை நாம் உள்வாங்கிக் கொண்டதற்கான உண்மைநிலை வெளிப்படும். எனவே மாவட்டம் தோறும் தனித்தனியாக இயங்கும் சங்கங்கள் அவரவர்களது தனித்த சங்கச் செயல்பாடுகளுடன் இருந்துவிடாமல், வள்ளற்பெருமான் வருவிக்கவுற்ற அக்டோபர் 5 மற்றும் தைப்பூச விழாவை அனைவரும் சேர்ந்து விழா எடுத்து பெருந்திரளான உறுப்பினர்களை இந்த உலகத்திற்கு வெளிக்காட்ட வேண்டும். அப்படி ஏற்பாடு செய்யப்படும் “பொது விழா” செய்தித்தாள்களில் வரும்படி செய்தாமல் மேலும் நலம்.

எனவே சங்கங்கள் தங்களுடைய தனித்தன்மையை மட்டும் கருத்தில் கொள்ளாது, பெருமான் கூறியபடி -

ஒருமையின் உலகெலாம் ஓங்குக. எனவே ஊதின சின்னங்கள், ஊதின சங்கம் பெருமை கொள், சமரச சுத்த சன்மார்க்க பெரும்புகழ்பேசினர். பெரியவர் சூழ்ந்தார் அருமையும் எளிமையும்.

என பெருமான் சன்மார்க்க அன்பர்களை பெருமிதப்படுத்தி பாடுகிறார். இதற்கேற்றாற்போல் செயல்பாடுகளை திருத்தி அமைப்பது தானே சரி! எனவே ஆங்காங்கு செயல்படும் சங்கங்கள் அவ்வப்பொழுது மாவட்டவாரியாக மாதம் ஒருமுறையாவது சந்தித்து பேசவேண்டும். பொதுவிழாக்களை நடத்தினால்தான், உயர்ந்த, ஒழுக்கமான நெறியில் இவ்வளவு அன்பர்கள் உள்ளனர் என உலகம் தெரிந்து கொள்ளும். அப்பேர்ப்பட்ட சூழல் ஏற்பட்டால் சன்மார்க்க சங்கங்களின் வளர்ச்சிக்கு ஒரு தடையும் இல்லை.

இன்றைய சூழலில் சங்கங்களின் செயல்பாடுகளும் எதிர்காலத்தில் அவை ஆற்ற வேண்டிய பணிகளும்

தமிழகத்தில் உள்ள அனைத்து சங்கங்களும் மாதப் பூசம் மற்றும் வருடாவருடம் சிறப்பு விழாக்களை செய்து, அதில் திருவருட்பா ஓதுதல், பசியாற்றுவித்தல், சொற்பொழிவு, திருவருட்பா இசை நிகழ்ச்சியென நடத்துவது வழக்கம். ஆனால், இதுபோன்ற நிகழ்வுகள் மட்டும் தற்போதைய விஞ்ஞான காலத்திற்கு போதாது. சரி, நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சில கருத்தாலோசனைகள் செய்வோம்.

1. பள்ளிக் குழந்தைகளிடத்தில் சன்மார்க்க கருத்துக்கள் பரவ வேண்டியது மிக மிக அவசியம். அதற்கான சரியான தேர்வு செய்த பாடத்திட்டங்களை தமிழக அரசிடம் கொடுத்து 1 முதல் 5ஆம் வகுப்பு, 5 தல் 8ஆம் வகுப்பு, 9 முதல் 12ஆம் வகுப்பு என வகைப்படுத்தப்பட வேண்டும். மேலும் கல்லூரிகளிலும் இந்த பாடத்திட்டம் கொண்டு வரவேண்டியது அவசியம். இதற்கான முன்னோடி முயற்சிகளை பல ஆண்டுகாலமாக தனித்தனியாக பற்பற சங்கங்கள் முயற்சிகளை செய்து எந்த பலனும் இல்லாமல் இருக்கிறது.

தற்போது பன்னாட்டு சன்மார்க்க சங்கம் என்ற ஒரு அமைப்பு இதற்கான சரியான கல்வி வரைமுறை திட்டத்தை உருவாக்க முயற்சித்துள்ளது. இந்த திட்டத்திற்கு உலகம் முழுவதும் உள்ள சன்மார்க்க சங்கங்கள் மற்றும் அன்பர்கள் தங்களது ஒத்துழைப்பை தரவேண்டும்.

மேலும், எதிர்காலத்தில் வடலூர் பெருவெளி ஒரு சிறந்த சாதி, சமயமற்ற “ஜோதி தரிசனம்” செய்யும் புனித நகரம் என போற்றப்படும் அளவிற்கு சிறந்த வரைமுறை திட்டத்தையும் உருவாக்கி தந்துள்ளனர். எனவே பன்னாட்டு சன்மார்க்க சங்கம் எடுக்கும் நல்ல முயற்சிகளுக்கு நமது ஆதரவை நல்குவோம்.

2. உலகெங்கும் உள்ள சன்மார்க்க சங்கங்களின் விவரங்களை நல்லன்பர் அருட்திரு. செந்தில் மருதையப்பன் மற்றும் சிங்கப்பூர் சிவகுமார் இணைந்து ஒரு இணைய தளத்தை உருவாக்கி, அதில் இலவசமாக சங்க விவரங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நல்லதொரு வாய்ப்பை அனைத்து சங்கங்களும் பயன்படுத்திக் கொள்வது இந்த காலகட்டத்தில் மிக மிக அவசியம்.

ஏனெனில், வெளிநாட்டவர் ஒரு மிகப்பெரிய இயக்கம் என்றால் அதன் கிளைகளின் எண்ணிக்கையை வைத்தே அளவிடுவார்கள். அப்பொழுது அவர்களும் நமது அமைப்பில் இணைந்து செயல்பட வாய்ப்பாகும்.

3. நன்கொடை கொடுக்கும் பெரிய செல்வந்தர்கள், வெளிநாட்டவர்கள் சங்கங்களின் செயல்பாட்டை கருத்தில் கொள்ளாமல் வெறுமனே விளம்பர நோக்கத்துடன் செயல்படும் சங்கங்களுக்கு பெருவாரியாக பொருளுதவி செய்கின்றனர். அவர்கள் அருள்கூர்ந்து சங்கங்களின் உண்மையான செயல்பாட்டை தெரிந்து கொண்டு அவர்களுக்கு பொருளுதவி செய்ய வேண்டும். மேலும், வடலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் செய்வதனால் பிற பகுதிகளில் சன்மார்க்கம் பரவாது.

எனவே, கிராமப்புறங்களில் இயங்கும் சங்கங்கள் சரியான பொருளாதார வசதியில்லாமல் இருக்கின்றன. அவைகளை கண்டறிந்து அவர்களுக்கு திருவருட்பா நூல்களை வழங்குவது மற்றும் பசியாற்றுவித்தலுக்கு உதவுதல், சன்மார்க்க கருத்துக்கள் அடங்கிய பிரசுரங்களை தயார் செய்து கொடுத்தல், போன்றவற்றை செய்து கொடுத்தால் கிராமப்புறங்களில் சன்மார்க்கம் பரவ வசதியாக இருக்கும்.

மேலும், சன்மார்க்கத்தில் உள்ள ஏழை எளியோரை கண்டறிந்து அவர்களது வாழ்க்கை நிலை உயர உதவுதல் போன்ற பணிகளைச் செய்வது நலம்.

வெளிநாட்டில் இருப்பவர்கள் இவற்றையெல்லாம் எப்படிச் செய்வது என்ற திகைப்பு வரும். இதற்காக எங்களது சன்மார்க்க சாதுக்கள் மையம், இந்த செய்திகளை சரியாக சேகரித்து தர உத்திரவாதம் அளிக்கிறது. மேலும், ஞானதீபம் மாத இதழ் அருள் அறக்கட்டளை போன்ற அமைப்புகளின் மூலமாகவும் இந்தப் பணி மேற்கொள்ளப்படும். எனவே இதுபோன்ற செய்திகளை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அன்பர்களை தொடர்பு கொள்ளலாம்.

“வள்ளலார் வருகை” கி. சத்தியமூர்த்தி (செயலாளர், சன்மார்க்க சாதுக்கள் மையம்), செல்பேசி: 9382872726.

ஞானதீபம் ஆசிரியர் மற்றும் அருள் அறக்கட்டளை நிறுவனர் திரு. முரளீதரன், செல்பேசி: 9865502500.

உதாரணத்திற்காக ஒரு செய்தியை உங்களுக்குத் தருகிறோம். மேட்டுக்குப்பத்தில், வள்ளற்பெருமான் இருந்த காலத்தில் வடலூருக்குச் செல்ல ஒருவழியை உபயோகித்து, அங்கு ஓர் அழகிய மாமரத்தின் கீழ் அமர்ந்து தண்ணீர் அருந்தி, ஓய்வு எடுத்துச் செல்வது வழக்கம். அந்த இடம் “தெய்வீக மாமரத்தடி தண்ணீர்ப்பந்தல்” என அழைக்கப்படுகிறது. அந்த கிராம மக்கள் அனைவருக்கும் இந்த இடம் நன்கு தெரியும். ஏன், பல சன்மார்க்க அமைப்புகளுக்கும் தெரியும். அப்பேர்ப்பட்ட புனிதமான இடம் கடந்த 60 வருடங்களுக்கு முன் தஞ்சையை சார்ந்த சாது கோவிந்தசாமி ஐயா அவர்களின் முயற்சியில் (தனி ஒரு மனிதனாக), அவரால் இயன்ற கஞ்சி வார்த்தல் மற்றும் அன்னதனாப் பணிகளைச் செய்து வந்தார். அவ்விடத்தில் பலர் உதவி செய்த சிறுதொகையைக் கொண்டு 400 சதுர அடியில் சிறிய கட்டிடம் ஒன்று கட்டி அதில் அணையா தீபம் வைத்து பராமரித்து வந்தார்.

ஐயா அவர்கள் இருந்த காலத்தில் அவரது உண்மையான தொண்டு பற்றி கேட்டறிந்து அந்தப் பகுதி மக்கள் சுமார் 1 ¾ ஏக்கர் நிலம் அளித்துள்ளனர். 1996ல் ஐயா அவர்கள் உயிரடக்கம் ஆனார். அந்த இடத்தி்லேயே ஒரு ஓரமாக அவரது சமாதியும் உள்ளது.

ஐயா அவர்கள் இருந்த போதே, மேட்டுக்குப்பத்தை சார்ந்த திரு.ஜீவரத்தினம் ஐயா என்பவரிடம் இந்த பொறுப்புகளை ஒப்படைத்துள்ளார்.

பின்பு இந்த இடத்திற்கு 300 மீட்டருக்கு முன்பாக அமைந்துள்ள சன்மார்க்கச் சோலையில் “நாங்கள் சன்மார்க்க சாதுக்கள் மையம் அமைத்து 2007 திருவறை தரிசனத்தன்று திறப்பு விழா செய்தோம். அப்பொழுதிலிருந்து மாதம்தோறும் எங்களது சாதுக்கள் மையத்தில் செய்ப்பட வேண்டிய பசியாற்றுவித்தலை (அன்னதானத்தை) அந்த தெய்வீக மாமரத்தடியில் உள்ள இடத்தில் செய்து வருகிறோம். ஆனால் மக்கள் அமர்ந்து சாப்பிட மேற்கூரை இல்லாத இடமாகவே உள்ளது. எனவே வடலூர் வரும் அன்பர்கள் இந்த இடத்தை பார்வையிட்டு மேற்படி 750 சதுர அடியில் மேற்கூரை அமைக்க ஆவன செய்யலாம்.

மேற்படி பணிகள் செய்ய எங்களது அமைப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும். இதுபோன்று தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள சங்கங்களுக்கு உதவுவதே சிறந்த சன்மார்க்கமாகும்.

எங்களது சன்மார்கக சாதுக்கள் மையத்தின் நிர்வாக உறுப்பினர்களே தங்களால் இயன்ற பொருளைக் கொண்டு மேற்படி தருமப் பணியை செய்து வருகிறோம்.

எனவே, பெரிய செல்வந்தர்கள், வெளிநாட்டவர்கள் சற்று முன் யோசனை செய்து செயல்பட்டால் சன்மார்க்க வளர்ச்சிக்கு மிகவும் ஏதுவாய் இருக்கும்.

4. சன்மார்க்க சங்கங்கள் குறைந்தபட்சம் மாதம் ஒரு வழிபாட்டு கூட்டுத்தை ஏற்பாடு செய்து, வள்ளற்பெருமானின் கருத்துக்களை சொல்வதுடன், உலக நலன் வேண்டி கூட்டு வழிபாடு, தியானம் போன்றவற்றை செய்வதுடன், நோயுற்றவர்களை வரவழைத்து சிறப்பு பிரார்த்தனை செய்தல் போன்ற நிகழ்வுகளை செய்ய வேண்டும்.

மேலும், பள்ளிக்குழந்தைகளுக்கு வருடம் ஒரு முறை திருவருட்பா, பாடல், ஓவியம், கட்டுரைப் போட்டிகளை வைத்து பரிசுகள் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும்.

அவரவர் சங்கம் சார்ந்த மிகவும் ஏழை எளிய சன்மார்க்க குடும்பத்தினர்க்கு வருடம் ஒரு முறை ஆடைகொடுப்பது, அவர்களது குழந்தைகளுக்கான கல்விக் கட்டண உதவி செய்வது போன்ற தொண்டுகளைச் செய்ய வேண்டும். இதற்காக பொருளாதார நிலையை உருவாக்க சங்கச்செயல்பாட்டை எளிமைப்படுத்தி, அருகில் உள்ள தயவுள்ளம் கொண்ட அன்பர்களை அணுகிப் பொருள் பெற்றும் கொடுக்கலாம். இதுபோன்ற செயல்பாடுகளை அனைத்து சங்கங்களும் மேற்கொள்ளுமேயானால் நிச்சயமாக சன்மார்க்கப் பொது நெறி உலகெங்கும் விரைவில் பரவுவது உறுதி.

மேலும், புலால் உண்பது குறித்து மிகவும் கடுமையாகக் கூறாமல், புலால் உண்பதால் ஏற்படும் நோய்கள் குறித்த விஞ்ஞான கருத்துக்களை மக்களிடம் தெளிவுப்படுத்தலாம். எடுத்த உடனே ஆன்மநேயம், புலால் மறுததல் என்றால் மக்களால் உடனடியாக ஏற்க முடியாது. எனவே இதுபோன்ற கொள்கை விசயத்தில் அதிக வேகம் காட்டாது செயல்படுவது மிக மிக அவசியம்.

5. சன்மார்க்க சொற்பொழிவாளர்கள் பிற சமயங்களின் கோட்பாடுகளை தாக்கி தரக்குறைவாக பேசுதல் கூடாது. மேலும், புராணங்களிலிருந்து மேற்கோள் காட்டி பேசுதலை தவிர்க்க வேண்டும். திருவருட்பா, திருக்குறள், திருமூல மந்திரங்களிலிருந்து மட்டும் மேற்கோள், விளக்கங்களை எடுத்து காட்ட வேண்டும். அப்பொழுதுதான் சன்மார்க்கமென்பது சமயம் சாராத ஒரு பொதுநெறி என்று உலகமக்கள் உணர இயலும்.

6. சமுதாய நலப் பணிகளாக, கோடைக்காலங்களில் வள்ளற்பெருமானின் பெயரால் ‘தண்ணீர் பந்தல்’ அமைத்து தொண்டு செய்யலாம். அவரவர் சங்கங்களில் குழந்தைகளுக்கு இலவச வகுப்பு (இலவச டியூசன்) சொல்லிக் கொடுக்கலாம். அப்பொழுது அந்த குழந்தைகளுக்கு சில திருவருட்பா மற்றும் தியானப் பயிற்சி போன்றவற்றையும் கற்றுக் கொடுக்கலாம்.

சன்மார்க்க சங்கங்களின் வளர்ச்சிக்கு மேற்கண்ட சில கருத்துரைகளை கூறியுள்ளோம். சிறிய செயல்பாட்டின் மூலம சன்மார்க்கப்பயிர் வளர்ப்போம். வாரீர்!