நமது அருட்தந்தை திருவருட்பிரகாச வள்ளலார் இந்த மனித தேகத்தின் உடற்கூறுகளை தமு தூய அறிவால் உற்று நோக்கி, இந்த உடலை சரியான முறையில் பாதுகாப்பதின் அவசியத்தை கூறியுள்ளார். அதாவது இந்த மனித தேகத்தில் தான் இறையருள் முழுமையாக காரியப்பட்டு மனிதன் இறைநிலைக்கு உயர முடியுமென்று உறுதிப்பட கூறுகிறார்.
பொத்திய மலப்பிணி புழுக் குரம்பைதான்
சித்தியில் சுத்த சன்மார்க்க சேர்ப்பினால்
நித்தியமாகியே நிகழும் சத்தியம் சத்தியம் சத்தியம் ஜெயத்துளீர்களே!
இந்த மனித தேகம் மலங்கள் நிறைந்தது. இதை சுத்த சன்மார்க்க வாழ்வியல் மூலம் நித்திய தேகமாக மாற்றலாமென பெருமானார் கூறுகிறார். அதற்காக வகுத்து பெருமான் கொடுத்த உரைநடைப்பகுதி தான் நித்திய கரும விதியாகும்.
இதில் காலை 3.30 மணி முதல் 6.00 மணி வரை அமுத காலமென குறிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் உலக விசாரமின்றி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் சிந்தனையுடன் இருந்தால், கோடி, கோடிப் பங்கு சுத்த உஷ்ணத்தை பெற்றுக் கொள்ளலாமென கூறுகிறார். இதை படிக்கும்போது அனைவராலும் இதை கடைப்பிடிக்க இயலுமா என்ற ஐயப்பாடு எழும்.
“முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என்பது பழமொழி. துவக்க காலத்தில் காலை 3.30 மணியளவில் இந்த பயிற்சியை செய்வது கடினம் தான். ஏனென்றால் காலை 7.00 மணிக்கு மேல் தூங்கி கண்விழிப்பது தான் வழக்கமாயுள்ளது. இந்த பழக்கத்தை சிறிது சிறிதாக மாற்றவேண்டும். முதலில் காலையில் 6.00 மணிக்கு துயில்எழ முயற்சி செய்து, படிப்படியாக 5,00 மணி முதல் 4.30 மணி என்ற அளவில் எழுந்திருந்தால் மேற்க்கண்ட அனுபவ நிலைகளுக்கு செல்ல ஏதுவாய் இருக்கும்.
துவக்க காலத்தில் இந்த தியான முறை சற்று கடினமாக இருக்கும். எனவே துவக்க காலத்தில் உள்ளவர்கள் மெல்லென திருவருட்பா பாடல்கள் அல்லது அருட்பெருஞ்ஜோதி அகவலை படிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். பிறகு படிப்படியாக இந்த அருட்பெருஞ்ஜோதி தியான முறையை மேற்கொள்ள வேண்டும்.
தியான முறை
ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து (எதிரில் தீபம் வைத்து அமர்தல் சிறப்பு) இரண்டு கண்களையும் மேல்நோகிக்கி பார்த்து, பின் நமது எண்ணத்தை நமது புருவமத்தியில் பதிய வைத்து மெல்லென கண்களை மூடி, அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி என மெல்லென உச்சரிக்க வேண்டும். இந்த நிலையில் துவக்க காலத்தில் உலகியல் எண்ணங்கள் மனதில் எழத்தான் செய்யும். நமது தொடர்ந்த முயற்சியில் அது மெல்லென மறைந்து அருள் அனுபவ நிலைக்குச் செல்ல இயலும். இந்த தியான முறையை முதலில் 10 நிமிடம் பின்னர் 15 நிமிடம், 20 நிமிடமென தியான முறையை செய்யலாம்.
அப்படியில்லையெனில், வள்ளற்பெருமான் கூறிய தெய்வ பாவனை முறையை செய்யலாம். இது தியானத்தை விட சற்று எளிய முறை.
தெய்வ பாவனை செய்யும் முறை
வள்ளற்பெருமான் அறிமுகப்படுத்திய கூண்டுதீபத்தின் முன் அமர்ந்து, அந்த தீப ஒளியிலிருந்து வரும் ஒளியானது நமது உடலெங்கும் பரவுவது போல பாவனை செய்தல் வேண்டும். இதில் கண்களை மூடியும் செய்யலாம். கண்களை திறந்தும் செய்யலாம். இது முதல்நிலை. சிறிது காலம் இப்படி செய்த பிறகு இரண்டாம் நிலையில் – தீபஒளியிலிருந்து புறப்படும் ஒளியானது நமது புருவ மையத்தை அடைந்து, உள்ளூடாக “சிற்சபை” என்னும் இடத்தில் உள்ள ஆன்மாவை அடைந்து, ஆன்ம ஒளியானது விரிவடைந்து நமது உடல் முழுவதும் பரவுவதுபோல் பாவிப்பது, இதுதான் அகநிலை அனகநிலையாக மாறும அனுபவமாகும்.
இந்த இரண்டு நிலை அனுபவங்களும் ஏற்பட்டால் உடலில் சுத்த உஷ்ணம் ஏற்படும். அதன் பயனாக உ ணவில் இச்சை குறையும், பெண்ணாசை குறையும், மனம் ஒருநிலைப்படும். நிதானமாக சிந்தித்து செயல்படும் ஆற்றல்மிகும். உலகியல் வாழ்வில் வெறுப்பும், அருளியல் வாழ்வில் நிறைந்த ஆர்வமும் உண்டாகும். புகழ் விரும்பாமை, வீண் பகட்டு கௌரவத்தை எண்ணி செயல்படும் தன்மையும் மாறும். உண்மையான சன்மாரக்க வழியில் வாழ மனமும் ஆன்மாவும், உடலும் தயராகும். இந்த நிலையில் இச்சா சக்தி, கிரியா சக்தி, நமது வசப்படும்.
மூன்றாம் நிலைப்பயிற்சி செய்ய விரும்புவோர் அடியேனை நேரில் தொடர்பு கொள்ளலாம். ஏனெனில், இந்த இருநிலை அனுபவங்களும் முழுமையான நிலையில் தான் மூன்றாம் நிலைப் பயிற்சியை செய்ய வேண்டும். மேற்கண்ட அனுபவம் கைகூடினால் வள்ளற் பெருமானே நமக்கு சத்குருவாய் வந்து மூன்றாம் அனுபவத்தைக் கொடுப்பார். இது சத்தியம்.
இந்த மூன்றாம் நிலை அனுபவத்தில் உள்ளவர் மிகவும் அமைதியான வாழ்வியலை வாழ தயாராகி விடுவர். (குறிப்பு: உலகியலில் இருந்தபடியே)
இதற்கு மேல் 4, 5, 6, 7 நிலைகள் வரை அனுபவ நிலைகள் உள்ளன. எனவே அன்பர்கள் அவசரப்படாமல் இந்த அனுபவ நிலைகளை மேற்கொள்வது அவசியம். இதே போன்ற அனுபவ நிலைகள் தியான முறையிலும் உண்டு. உண்மையான ஜீவகாருண்யப் பணியாலும் கிடைக்கும்.
மேலும், மேற்கண்ட அனுபவங்களை நாம் பெறவேண்டுமாயின் உணவு முறைகளில் ஒரு சரியான முறையை கையாள வேண்டும்.
1. காலையில் வெள்ளை கரிசாலை அல்லது மஞ்சல் கரிசாலை கொண்டு உள்நாக்கின் மேல்புறம் (அண்ணாக்கின் பின்புறம்) லேசாக தேய்த்து கபம் நீக்க வேண்டியது மிக மிக அவசியம். ஏனெனில், ஒளி அனுபவத்திற்கு முன் அனுபவம் “ஒலி” அனுபவம். அதாவது நாத அனுபவம். இந்த நாத அனுபவம் பெற்றல் மட்டுமே உலகியலில் மனம் செல்லாது. பச்சை கீரை கிடைக்காதபட்சத்தில், மேற்கண்ட மூலிகையின் காய்ந்த சூரணம் (தூள்) ஒருதுளி நெய்யில் கலந்து தர்சினி விரல் (கட்டை விரலுக்கு அடுத்த விரலால் தேய்க்க வேண்டும். விரல்களில் நகங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், நகங்கள் நீண்டு இருந்தால் தொண்டைப்பகுதியில் குத்தி புண் உண்டாகும்.
2. இரவு படுக்கும் முன் மலமிலக்கியாகிய திரிபலா சூரணம் அல்லது சுத்தப்படுத்திய கடுக்காய்த்தூள் மிதமான சுடுநீரில் ஒருகரண்டி அளவு உண்ண வேண்டும். அதிகாலையில் சிரமமின்றி மலமும், அபான வாயுவும் வெளியேறி விட்டால் மேற்கண்ட பயிற்சியை செய்ய ஏதுவாய் இருக்கும்.
3. இரவில் தயிர் மற்றும் உடலிற்கு குளிர்ச்சியூட்டும் உணவு வகைகளை அவசியம் உண்ணக் கூடாது. இரவில் மிகக் குறைந்த அளவே உண்ணுதல் நலம்.
4. தேவையற்ற உடல் உழைப்பு அதீதமான உடல் உறவு அவசியம் தவிர்க்க வேண்டும்.
5. காலையில் டீ, காபி போன்ற பானங்கள் குடிப்பதை தவிர்த்து வள்ளற் பெருமான் அருளிய நித்திய ஆகார சூரணம் காபி போல கலந்து சாப்பிடுதல் நலம்.
6. உணவு முறைகளில் அதிக காரம், புளி, உப்பு தவிர்த்து, சீரகம், மிளகு அதிகமாக சேரும்படி உணவு முறைகளை மாற்றி அமைத்தல் நலம்.
7. இரவில் அதிக காலதாமதமாக உண்பதை தவிர்க்க வேண்டும். அதேபோல், வெங்காயம், பூண்டு போன்றவைகளை உணவில் அதிகம் சேர்க்கக் கூடாது. (வெங்காயம் உண்டால் சோம்பேறித்தனம் உருவாகும். பூண்டு காம உணர்வைத் தூண்டும்).
8. தியானம் அல்லது தெய்வ பாவனை செய்தவுடன் அனுதினமும் பிரணாயாமம் செய்து பழகுவது மேலும் நலம்.
பிரணாயாமம்
எந்த நாசியில் காற்று அடைப்பின்றி செல்கிறதோ அதற்கு எதிர் நாசியை கை கட்டை விரல் அல்லது ஆள்காட்டி விரலால் மெல்லென மூடி மூச்சுக்காற்றை நன்றாக உள்ளே இழுத்து, சிறிது நேரம் உள்ளடக்கி பின்னர் எதிர் நாசியின் வழியாக காற்றை மெல்லென விடுதல் வேண்டும். மூச்சுக்காற்றை அதிகநேரம் அடக்குதல் கூடாது. முடிந்தவரை யோகாசன பயிற்சியாளர் எவரேனும் இருப்பின் அவர்களிடம் நேரில் செய்து கற்றுக் கொண்டு செய்வது நலம் பயக்கும்.
9. அதிகமாக கொழுப்பு நிறைந்த உணவை உண்பது கூடாது. புலால் உணவு அசைவ உணவு அனைத்தும் தவிர்க்க வேண்டும். மேலும், குளிர்ந்த நீர் குடிப்பதை முற்றிலும் தவிர்த்தல் நலம்.
எனவே மேற்கண்ட உணவு முறைகளை கடைப்பிடித்தால் நிச்சயமாக சன்மார்க்க அனுபவம் பெறுவது உறுதி.
மூலிகைத் தூள்கள் பெறவேண்டுவோர், வடலூரில் வாங்கலாம்; இயலாத பட்சத்தில் எங்களை தொடர்புக் கொண்டு தபால்மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
குறிப்பு: பிரணாயாமம் செய்வதால் உடலுக்கு அதிகமான ஆக்ஸிஜன் கிடைத்து உடலில் உள்ள அனைத்து செல்களும் புத்துணர்வு பெறும்.
(தொடரும்.)
- ஆசிரியர்