Srilanka Gnana Sabai Temple
இலங்கை வேம்பிராயில் சத்திய தருமச்சாலை மற்றும் சத்திய ஞான கோட்டம் துவக்க விழா. இலங்கைப் பயணம் கட்டுரை (தொடர்ச்சி)

இலங்கை வேம்பிராயில் சத்திய தருமச்சாலை மற்றும்

சத்திய ஞான கோட்டம் துவக்க விழா.

இலங்கைப் பயணம் கட்டுரை (தொடர்ச்சி)

=0=0=0=0=


மறுநாள் காலை (20.8.2010) அங்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெற்றது. அதன் முடிவில் திரு கேத்தீஸ்வரன் பேசினார். அவர் ஒவ்வொரு சன்மார்க்க அன்பரும் திரு அருளின் துணை கொண்டே தமது வாழ்வினை நடத்த முன்வரவேண்டும் என்றார். தாம் பல ஊர்களில், பல நாடுகளில் சென்று பார்த்து வருவதாகவும், ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு நாட்டிலும், வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க தத்துவத்தை தத்தம் வகைக்கேற்ப புரிந்து கொண்டுள்ளதாகவும், உள்ளுருக்கத்துடன் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை வேண்டினால், ஒவ்வொருவரிடமும் தாய்மை உணர்ச்சி பெருகும் எனவும் அத்தாய்மை உணர்ச்சி பெருகும்போது, பின்னர் இவ்வுலகிலுள்ள அனைத்தின் பாலும் கருணை செய்யும் நோக்கம் நம்மிடம் வரும் எனவும் தெரிவித்தார். இந்நிலை ஏற்பட்ட பின்னர், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கருணையினால், அவரே நமக்குத் தந்தையாகி வேண்டியனவற்றை அருளுவார் எனவும் தெரிவித்தார்.

சன்மார்க்கிகள் என்பவர்கள் கூட, காய்ச்சல் தலைவலி போன்ற உடலுக்கு ஏற்படும் சிறு சிறு உபாதைகளை தீர்ப்பதற்கு மருந்து மாத்திரைகளைத்தான் உண்கின்றனர். சாதாரண உடல் உபாதைகளைத் தீர்ப்பதற்கே, மருந்து மாத்திரை உண்ணும் பழக்கம் உண்ணும் நிலை இருந்தால் எங்ஙனம், இறவாப் பெரு நிலையினை அடைவதை நாம் யோசிக்க முடியும் என அனைவரையும் அவர் வினவினார். திருவருளே துணை நிற்கும்போது, இவை எல்லாம் தேவைப்படாது. தீர்க்கமாக நம்பி, திருவருளை வேண்டினால், ஆண்டவரே நமக்கு இவ்வித துன்பங்களிலிருந்து பாதுகாக்கும் வல்லமையை அருளுவார் எனத் தெரிவித்தார்.

அவ்வித நிலை வரும்போது, நம்மில், ஆண்டவரின் கருணையினால் மேல்நிலைச் சுக்கிலம் கிடைக்கப் பெறும் எனவும், தமக்கு, மேல் நிலைச் சுக்கிலத்தை ஆண்டவர் அருளுகின்றார் எனத் தெரிவித்தார். இந்த நிலையினை ஒவ்வொரு சன்மார்க்கியும் பெற வேண்டும் எனவும், இது குறித்து யாரும் விளக்கம் வேண்டினால், தாம் விளக்கம் அளிக்கத் தயாராய் உள்ளதாயும் திரு கேத்தீஸ்வரன் தெரிவித்தார். அதன் பின்னர், அளவெட்டி கிராமத்தில் உள்ள எல்லா ஆலயங்களுக்கும் திரு நிலைக் கண்ணாடியுடன் அன்பர்கள் அனைவரும் சென்று வந்தனர்.

அன்றைய மதிய உணவினை முடித்துக் கொண்டு அன்பர்கள் அனைவரும் செல்வச் சந்நிதி நோக்கிப் புறப்பட்டனர். கடற்கரையில் அமைந்துள்ள அந்த ஆலயத்திற்கு அன்பர்கள் அனைவரும் திருநிலைக் கண்ணாடியுடன் சென்று அன்று மாலை சாவகச் சேரியில் அமைந்துள்ள திரு சிவசேகரம் பிள்ளையின் வீட்டிற்குச் சென்றனர். இந்த திரு சிவ சேகரம் பிள்ளை ஒரு கட்டிடம் கட்டும் கான்ட்ராக்டராகப் பணியாற்றுகின்றார் அந்நிறுவனத்தின் பெயர் ரூபின்ஸ் நிறுவனம் ஆகும். இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள பல கோவில்கள், இவர் மூலம் கட்டப்பட்டுள்ளன. அவ்விதத்தில், திரு கேத்தீஸ்வரன், கட்டிடக் கலை வல்லுனரான திரு சிவசேகரம் பிள்ளையிடன், சத்திய தருமச் சாலை மற்றும் சத்திய ஞானக் கோட்டம் கட்டும் பணியினை ஒப்படைத்துள்ளார். அவரது வீட்டில், அன்பர்கள் அனைவரும் திரு அருட்பா பாடல்கள் பாடினர். மழையூர் திரு சதாசிவம் மற்றும் அவரது சிஷ்யர் புதுக்கோட்டை திரு காசிநாதன், பாண்டிச்சேரி திருமதி அன்னபூரணி அம்மையார் மற்றும் அன்பர்கள் அனைவரும் அங்கு திரு அருட்பா இசைத்தனர். இரவு உணவை முடித்துக் கொண்டு, அங்கிருந்து சாவகச்சேரி பள்ளியில் அன்பர்கள் அனைவரும் வந்து தங்கினர்.


….தொடரும்…..