இலங்கை வேம்பிராயில் சத்திய தருமச்சாலை மற்றும் சத்திய ஞான கோட்டம் துவக்க விழா இலங்கைப் பயணக் கட்டுரை.
இலங்கை வேம்பிராயில் சத்திய தருமச்சாலை மற்றும் சத்திய ஞான கோட்டம் துவக்க விழா.
பயணக் கட்டுரை.
=0=0=0=0=0
17.8.2010 அன்று பகல் 11.30 மணி அளவில் கொழும்புவிலிருந்து புறப்பட்ட அன்பர்கள் அனைவரும் இரவு சுமார் 8.30 மணி அளவில் திருக்கோணேஸ்வரம் சென்றடைந்தனர். அங்கு இரண்டு பக்கமும் கடல் சூழ்ந்த மிகவும் ஆழமான கடல் பகுதி. ஆனால், மலை உச்சியில் திருக்கோணேஸ்வரம் கோவில் அமைந்திருந்தது. அங்குள்ள மடத்தில் அன்பர்கள் அனைவரும் உணவருந்தினர். பின்னர், சுமார் இரவு 10.45 மணி அளவில் புறப்பட்டு, 18.8.2010 அன்று அதிகாலை சுமார் 6.45 மணி அளவில் திருக்கேத்தீஸ்வரம் வந்தடைந்தனர். திருநிலைக்கண்ணாடியும், அன்பர்களுடன் வந்து கொண்டிருந்தது. திருக்கேத்தீஸ்வரத்திற்கு அருகிலிருந்த சைவ மடத்தில் காலை உணவருந்திய பின் திரு அருட்பா பாராயணம், அங்கிருந்த திருவாசக மடத்தில் சுமார் 11.30 மணி அளவில் அன்பர்களால் பாடப்பட்டது. அருட்பெருஞ் ஜோதி அகவல், ஜோதி வழிபாடு முடிந்த பின்னர், மதிய உணவும் அங்கே உண்டபின் அனைவரும் புறப்பட்டனர்.
மாலை சுமார் 6.15 மணி அளவில், 7 சுடு நீர்க் கிணறுகள் அமைந்த பகுதிக்கு அன்பர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். ஒரு கிணற்றில் உள்ள சூட்டிற்கும், அடுத்த கிணற்றில் உள்ள சூட்டிற்கும் வித்தியாசத்தை அன்பர்கள் உணர்ந்தனர். அங்கு சில அன்பர்கள் குளித்தனர். இரவு சாவகச்சேரியை அடைந்த போது 9.15 மணி. அங்கு, திரு கேத்தீஸ்வரனின் மைத்துனர் திரு ஈசன் களஞ்சியம் வீட்டில் அன்பர்கள் அனைவருக்கும் உணவளிக்கப்பட்டது. அருகில் இருந்த சத்திய ஞானக் கோட்டத்தினை ஒரு சில அன்பர்கள் அந்த இரவிலும் சென்று பார்த்து வந்தனர். அருகில் இருந்த ஒரு பள்ளியில் எல்லா அன்பர்களும் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
19.8.2010 அன்று காலை அங்கிருந்து யாழ்ப்பாணம் சென்று, சைவ மடத்தில் அன்பர்கள் அனைவரும் அமர்ந்து, இந்த திருநிலைக் கண்ணாடியின் மகத்துவம், வள்ளற் பெருமானின் நெறி இலங்கை நாட்டில் பரவ வேண்டும் என்பதனை வலியுறுத்தி இலங்கையைச் சேர்ந்த பேராசிரியை உரையாற்றினார். யாழ்ப்பாணம் நகர் முழுவதும், திரு நிலைக் கண்ணாடியுடன் அன்பர்கள் அனைவரும் வலம் வந்தனர், மழையூர் திரு சதாசிவம் அவர்கள், புதுக்கோட்டை திரு காசிநாதன் அவர்கள், பாண்டிச்சேரி திருமதி அன்னபூரணி ஆகியோர், யாழ்ப்பாணம் நகர் முழுவதும், பிரதான வீதிகளில், திரு அருட்பாக்களைப் பாடி வந்தனர். அதன் பின்னர் சுமார் 12.15 மணி அளவில் சிவதொண்டன் நிலையம் சென்று, அங்கு அன்பர்கள் அனைவரும், சிவ தொண்டன் நிறுவனத்தினருடன் அளவளாவிய பின் சிவ தொண்டன் அவர்கள் வாழ்ந்த இடத்தில் தரிசனம் செய்து திரும்பினர். செல்லும் வழியில், திருநிலைக் கண்ணாடி வேம்பிராய் சத்திய ஞான கோட்டத்திற்குக் கொண்டு செல்வதன் நோக்கம், இந்தியாவில், வடலூரில், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் ஏற்படுத்திய சத்திய ஞான சபை போன்றே வேம்பிராயில் கட்டப்பட்டதன் விவரம் முதலானவற்றை, மதுரை ஏ.ராமானுஜம் ஒலிபெருக்கி மூலம் அனைவருக்கும் தெரிவித்துக் கொண்டே வந்தார். ஆறுமுக நாவலரின் நிலையம் வழியாக, நல்லூர் கந்த சாமி கோவிலுக்கு அன்பர்கள் அனைவரும் திரு நிலைக் கண்ணாடியுடன் சென்றனர். அங்கு உணவருந்தியபின், புறப்பட்டு, மாலை சுமார் 5.05 மணி அளவில் திரு கேத்தீஸ்வரனின் பிறந்த ஊரான அளவெட்டிக்குச் சென்று, அங்கிருந்த பைரவர் கோவிலில் சொற்பொழிவு நடந்தது. இரவு அங்கிருந்த திருமண மண்டபத்தில் அனைவரும் தங்க வைக்கப்பட்டனர்.
(தொடரும்)…