Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.699.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

எழுபதாம் அதிகாரம்.

சுத்த இன்ப நிலை.

9.

அனுமோனத் துள்ளான் அகண்டவெளி யாடும்

எணலரிய இன்பம் இது.

699


குறள் விளக்கம்


கருத்தால் எண்ணி அறிவதற்குக் கூடாத பெரிய இன்ப நிலை, அருளனுபவத்தால் மாத்திரம் கூடுவதாம். இவ்வனுபவம் வழங்குகின்ற அருட்பெருஞ்சக்தி, ஆன்ம அணுவின் அகத்தே மகா மௌன நிலையில் முகிழ்த்து நின்று அகண்ட பெருவெளியில் பேரியக்க சக்தியொடு விளங்குவதாம்.


இவ்வகம், புறமாகிய இரு நிலைகளே, மெளனானந்தத் தென்முகக் கடவுளாகவும், மகா பிரபஞ்ச ஆனந்த நடன மூர்த்தியாகவும் கற்பனை செய்து சிற்ப வடிவில் ஆக்கித் தந்தனர் ஆன்றோர்.


இவ்வணு மோன நிலையும், அகண்ட இயக்க நிலையும் ஒருவாறு இப்பூஉலக நிலையைக் கொண்டும் யூகிக்கலாம். இதாவது, இப்பூகோள அகநடு அணுவையும், மேற்பரப்பையும் நோக்கும்போது, இம்மேற்பரப்பு 25,000 மைல் சுற்றி வரும் ஒரு தினத்தில், அக அணுவும் ஒரு சுற்றுதான் வரும். அவ்வணு நிலை மிகச் சிறியதாதலின் அதன் இயக்கம் தோற்றாது அசைவற உள்ளதே போல் விளங்கும்.


இது போன்று நம் ஆன்ம சிற்றணுவகத்தே மோன நிலையில் மன்னியுள்ள பதி, அகண்டப் பெரு வெளியில் பேரியக்கத்தோடு, பொங்கெழிற் பிரபஞ்ச நடனம் புரிவதாக யூகம் செய்யலாம்.


மனிதன், உள் அழுந்திய தவ நிட்டையால், ஆன்ம ஞானம் பெற்று, மோன நிலை என்ற ஞான வரம்பை அவ்வான்மாவில் காண்கின்றான். இன்றைய மனிதனோ விஞ்ஞான ஆட்சியாலே புறத்தே அண்ட வெளி இயக்கத்தை அறிய முயல்கின்றான். இவ்விரு நிலைக்கண்ணும் அருட்பெருஞ்சோதி பதியின் மெய்யின்ப வாழ்வு சித்திக்காது.


இவ்விரு பெரும் முயற்சிகளும், சோதி பதியின் அடிமுடி காணச் சென்ற ஏன, எகினம் (பன்றியும், அன்னமும்) ஆன, அரி, அயன் முயற்சியில் தோல்வியுற்ற கதையாகக் கற்பனை செய்யலாகும்.


இந்த அகங்கார, அருளில்லாத வீண் முயற்சிகளை விட்டு, அருள் மயமாகி நின்று வேண்டிச் சன்மார்க்க வாழ்வு வாழ வாழ நம் அருட்பெருஞ்சோதி பதியின் துணை அடி அனுபவம் கைவரப் பெற்று பேரின்பில் வாழலாம் என்பது சுத்த சன்மார்க்க முடிபாகும்.