தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
எழுபதாம் அதிகாரம்.
சுத்த இன்ப நிலை.
|
3. |
அம்பலவன் சோதி அருளைந் தொழினடமே நம்பகத்தே காண்க நலம். |
693 |
குறள் விளக்கம்
ஆன்மாலயமாகிய அம்பலத்திலே அருட் சோதிப் பெரும்பதி விளங்கிக் கொண்டே உள்ளார். அந்த ஒளிக்கதிரே அகண்ட வெளி எல்லாம் நிரம்பி, அண்ட பிண்டங்கள் எல்லாமாய்த் தோன்றி ஐந்தொழிற்படக் காரணமாய் உள்ளதாம்.
இப்பிரபஞ்ச காரியம், நமது அம்பலவன் அருள் நடனமாகக் கூறப்படுகின்றது. அகத்தின் கண் இருந்து, அருள் உணர்வு பெருக, அருட் செயல் வெளிப்பட, புறத்தே அருள் விளக்க இன்பம் செய்து கொண்டு அகமகிழ்ந்து இருப்பதுவே, பதியோடுற்று வாழும் அம்பல இன்ப வாழ்வாகும்.
அருள் ஐந்தொழில் நடமே நம்பகத்தே காண்க நலம் – என்றதில், நம்பகத்தே என்பதற்கு நம்பு அகத்தே எனப் பிரித்துப் பொருள் கொள்ளலாம். அன்றியும், நம்-பகத்தே (அதாவது, நமது பகர வடிவ ஆன்மக் கடவுளிடத்து) எனவும் கொள்ளலாம்.