Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.691.


தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

எழுபதாம் அதிகாரம்.

சுத்த இன்ப நிலை.


1.

யாதொன்றும் வேண்டா அருட்செல்வன் தாள்சேர்ந்து

வாதின்றி யின்பில் வளர்.

691


குறள் விளக்கம்


சுத்த சன்மார்க்கத்தின் குறிக்கோளும் அதனால் உண்டாம் இன்பமும் ஒன்றையொன்று சார்ந்து வருதலின், அதிகார முறையினும் அங்ஙனமே தொடரப் பெற்றுள்ளதாம்.


குறைவற்ற நிரம்பிய வாழ்வருள்வது, தயா பெருஞ்சோதி வள்ளல் திருவடியே ஆகும். பூரணனுக்கு வேண்டுவது ஒன்றுமே இல்லை. வேண்டாமை என்னும் நிறை செல்வம் படைத்துள்ளான். அப்படியுள்ள செல்வன் சேவடி சேர்ந்தவர்களே வேண்டாமை என்னும் நிறைவெய்தியவர் ஆவர். இவர்கள் தான் எதனையும் வேண்டும் என்று விரும்பார்கள்.


அதாவது, நல்லனவற்றை வேண்டும் என்று விரும்ப மாட்டார்கள். அது போல், தீயனவற்றையும் விரும்பியோ வெறுத்தோ வேண்டுமென்றுங் கொள்ளார்கள், வேண்டாமென்றுந் தள்ளார்கள். இவர்கள்தான் அருட் செல்வன் திருவடியில், யாவும் அருளொடு விளங்கக்கண்டு, வாதனையற்ற இன்பில் வாழ்வார்கள்.