தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்தேழாம் அதிகாரம்
மருந்து.
|
8 |
ஆயிரம் பேரைக்கொன் றாவனரை வைத்தியன் தூயருட் பூரணஞ் சூழு. |
668 |
குறள் விளக்கம்
எல்லாப் பிணியையும் போக்கி, இன்பம் தரவல்ல, தயாபெருஞ் சோதிபதியே வைத்தியநாதன் என்றறிய வேண்டும். அப்பதி தனிப்பட்ட ஓர் உருவும். அதற்கான ஒரு பெயரும் இல்லாதிருந்தும் ஆன்ம சிற்றணுவினின்று சீவ விடவொடு தோற்றிய போது ஓர் உருவும், ஒரு பெயரும் ஏற்று விளங்குகின்றது.
ஆதலின், ஆனந்தன் எனப் பெயர் கொண்ட ஒருவன், அகத்தே கடவுட் சோதி ஆன்ம சிற்றணுவே சீவ தேகியாய் மலரப் பெற்றவன் ஆவன். இவ்வான்ம கடவுள் மலர்ச்சி, சிரநடு ஆயிரம் இதழ்க் கமலத்தே உண்டாகி உள்ளதாம்.
நுன்ணணுவாய் நுணுகியுள்ள ஆன்மக் கடவுள் இக்கமல மலர் மீது வெளிப்பட்டு, சித்தியினால், ஆயிரம் ஆயிரம் உருவொடு தோன்றி, ஆயிரம் ஆயிரம் பெயர் கொண்டு விளங்குகின்றது.
தேகம், நான் என்ற நிலை கடந்து, கடவுளும் தானுமாகிய ஆன்மாவே தனது உருவாகப் பெற்றவன், ஒரு பாதி தானும் மறுபாதி கடவுளும் கலந்திருப்பதாக அறிகின்றான். இந்த நிலையில், தான் அரை வைத்தியனாய்க் கடவுளொடு கூடி நிற்பதை உணர்கின்றான். இந்த அனுபவம் நாம ரூபத் தேக நிலை கடந்ததாய் உள்ளது. இதுவே ஆயிரம் பேரைக் கொன்றவன் ஆன நிலை எனப்பட்டது.
இந்நிலையினின்று, பல்வேறு பிணிகளையும் ஒழிப்பவனாகின்றான். முடிவில், அருட் பூரணத்தால், தான் என்ற போதம் போய் ஏகானுபவம் பெறும்போது, தானே பூரண வைத்தியனாய், சுத்த ஞான சித்த ஆனந்தனாய் என்றும் விளங்குவான்.