தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்து நான்காம் அதிகாரம்.
மண்ணாசை விலக்கு.
|
9. |
நாய்காணிற் கல்லினை நாங்காணோம் கற்கண்டால் நாய்காண்ப தில்லை நமக்கு. |
639 |
குறள் விளக்கம்
“நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்” என்பது பழமொழி. இதில் வந்துள்ள நாயும், கல்லும், நமது கடமாகிய தேகத்தையும் இதற்கு உள்ளிருக்கும் கடவுள் ஒளியையும் குறிப்பனவாம்.
எவ்வாறெனில், இத்தேகம் “நமசிவய’ என்னும் தூல பஞ்சாக்கர வடிவமாய் உள்ளது. இதில் ந வ்விரண்டு காலதாய், ந வின்ற ம வ்வயிறதாய்த் சி வ்விரண்டு தோளதாய்ச் சிறந்த வ வ்வாயதாய் ய வ்விரண்டு கண்ணதாய் அமமந்துள்ளன.
மேலும் இத்தேகத்தில் ந-மண் கூறு, ம-நீரின் கூறு, சி-தீயின் கூறு, வ – காற்றின் கூறு, ய – ஆகாயத்தின் கூறு ஆம். இவற்றின் யகரமாகிய இரு கண்ணுக்கு நடுமலர் ஞானக் கண்ணால் தான் யகர ஆன்மாகாச உண்மை விளங்குவது.
அபக்குவத்தில் இக்கண் திறக்கப்படாதபோது இவ் யகரத்தின் (ய – அ = ய்) என்ற மெய் மாத்திரமாய் நிற்கும். இது ஆன்ம அறிவு உண்டாகாத நிலையாம். தேகம்தான் என்ற உணர்வோடு கூடிய நிலையே இது. ‘அ’ உயிர்ச்சக்தி ‘ய’ கரத்தினின்று நீங்கி ‘ந’ கரத்தோடு (ந=மண் கூறு) சேர்ந்து (ந+அ=நா) ‘நா’ என்றாகி மண் தேகத்தடிப்பை உணர்த்துகின்றதாம். இப்பொழுது இத் தேகம் ‘நாமசிவய்’ என்றே புலப்படும். இதனைத் தலை கடைப் பூட்டு ஞாயப்படி, ‘நாய்’ எனச் சுருக்கிக் கூறப்படும். ஆகவே நாய் என்பது கடவுள் ஞானம் வெளிப்படாத தூல பஞ்சாக்கரத் தேகமேயாம்.
மாணிக்கவாசகர் “நாயான நந்தம்மை யாட் கொண்ட நாயகனை” எனக் கூறி நாயும், நாயகனுமான இத்தேக கடத்தையும், இதற்குள்ளான நம் கடவுளாம் பதியையும் (நாஹ் + அகன் = நாயகன்) உணர்த்தியுள்ளார். இதுவன்றி சுமார் 67 இடங்களில் இந்நாய்க் குறிப்பு திருவாசகத்தில் வந்துள்ளன. மற்ற பெரியோர்களும் தம்மை, நாயேன், நாயடியேன் எனப் பலவாறு கூறியுள்ளனர்.
இத்தேகத்திற்குள்ளான தேகி, நாயகன், கடவுள் ‘கல்’ எனக்கூறப்படுவது, கடவுள் அனுபவ உண்மை கொண்டதாம். இது திரயோத சாந்த நிலை என்ப. அதாவது, ‘க்’ முதலாவது மெய் நிலை உயிர்மெய் எழுத்து, ‘ல்’ பதின்மூன்றாவது மெய்நிலை எழுத்து ஆக நின்று, துவாசாந்த நிலைக்கு மேல் திரயோத சாந்த அருள் அனுபவ நிலையைக் குறிக்கின்றதாம். இவ்வனுபவம் உண்டாவதற்காக வென்றே கடவுட் சிலைகளை கல்லால் ஆக்கிக் கோயில்களின் மூலத்தானத்தில் வைக்கின்றனர்.
புற விசாரத்தால் உண்மையை அறிந்து, அகத்தே உண்மைக் கடவுளனுபவம் பெரற்காகச் செய்துள்ள உபாயத்தைத் தெரிந்து கொள்ளாவிடில் பயனுண்டாகாது.
மேற்குறித்த அக அனுபவம் பெறற்கு மண்ணான நாயுடம்பின் ஆசையை அறுத்தல் வேண்டும். இம்மண்ணாசையாம் நாய் இருக்கும் வரை ‘கல்’ ஆகிய கடவுள் ஒளி கிடைப்பதில்லை. அக்கடவுள் ஒளி அனுபவம் பெற்றுக் கொள்ளும்போது, இந்நாய்த் தேக நிலை மறைந்து விடுகிறது. ஆகவே, மண்ணாசை அற்று பேரின்ப வாழ்வு பெற இச்சன்மார்க்கம் கண்ட விளக்கம் மேற்படி பழமொழியில் பொதிந்துள்ளதாம்.