தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்து நான்காம் அதிகாரம்.
மண்ணாசை விலக்கு.
|
1. |
தேகப்பற் றற்றார்க்குச் சேருமோ மண்ணாசை யேகப்போ ரிவ்வுலகி லேது. |
631 |
குறள் விளக்கம்
உலகத்தைத் துறவாது உலகத்தோடு ஒத்து வாழ வேண்டிய சன்மார்க்கி, மண்ணாலான தேகத்தினிடத்து, பற்று வைத்தல் கூடாது. ஆதலின், அம்மண்ணாசை விலக்க வேண்டி இவ்வதிகாரம் இணைந்து வருகின்றதாம்.
மண் பூதத்தின் கூறால் உருவாகியுள்ள தூல தேகத்தினிடத்து பற்றுதல் அற்றவர்கள், தயா வொளியாம் சுத்த தேகத்தில் பற்று கொண்டவர்கள் மண்ணாசை கொள்ள மாட்டார்கள். இதனால், இவர்கள் உலகினருடன் போர் பகையின்றி ஒட்டி வாழ நேரும். இன்பமும் சேரும்.
இன்று இவ்வுலகில் போரும் துன்பமும் மிகுந்துள்ளன எனில், இவற்றிற்கு முதற்காரணம், சுத்த சன்மார்க்க இல்லாததால் உண்டான தேகப்பற்றும், மண்ணான தேசப்பற்றுமேயாம். ஆகையால், மூவாசையில், முதலாசையான மண்ணாசையை விலக்கிடல் வேண்டும்.