Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.621.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

அறுபத்து மூன்றாம் அதிகாரம்.

உலகந் துறவாமை.


1

நாமார் நமதிறையே நாளு முலகாளத்

தோமார் துறவென்னோ சொல்.

621

குறள் விளக்கம்

பணிவு வேண்டும் என்று முன் அதிகாரத்தில் சுட்டப்பட்டது. அப்பணிவின் நிமித்தம் உலகைஹ் துறந்து சென்று தனித்திருந்து பழகுகின்ற செயல், முறையன்றாம். உலகோடு ஒட்டி வாழும் வகையிலே அன்பின்ப வாழ்வு தழைக்கச் செய்யவே பணிவோடு பழகுதல் வேண்டும். ஆதலின், இந்த அதிகாரம் துறவா வாழும் உயர் முறையைப் புகட்ட, உலகந் துறவாமை என்னும் தலைப்பொடு கூடி வந்துள்ளது.

இம்மாபிரபஞ்சத்து எல்லாத் தோற்றமும் செயலும் கடவுளிடத்தே இருந்து தோன்றி வெளிப்பட்டுத் திகழ்கின்றன. கடவுள் இவ்வுலகை ஒரு கணமும் நீங்குவதில்லை. துறப்பதுமில்லை. அப்படி துறந்தால் உலகமே அழிந்து இல்லையாகும்.

அவரன்றி நாமென்பதில்லை யாதலின், அக்கடவுள் நிலையை எய்தி இன்ப வாழ்வு வாழற்கு நாமும் அக நின்று தயவால் உலகை ஆளல் வேண்டுமே அல்லாது, உலகைத் துறந்து மறந்து போதல் பெருங்குற்றமாகும்.