தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்தைந்தாம் அதிகாரம்.
விசாரமும் சூழ்நிலையும்.
|
1 |
சின்னம் பிடித்தலையா சிற்றம் பலந்தங்கிக் கின்னமறச் சூழெவர்க்குங் கேழ் |
541 |
குறள் விளக்கம்.
முன்னோர் கண்ட ஜோதிச் சின்னங்களை ஏற்றும், அவற்றின் உண்மையை அறியாது, உலக வாழ்வுக்கும் உதவாது பயனற்றுப் போதல் திருவுளச் சம்மதமன்று. ஆதலின் புறச் சின்னங்கள் உணர்த்த வந்த அகவுண்மையை விசாரித்து அறிந்து கொண்டு, அதன் பயன் சூழுலக வாழ்வில் அடைவதற்காக இந்த ‘விசாரமும் சூழ்நிலையும்’ என்ற அதிகாரம் இங்கே இணைக்கப்படுகிறது.
(சின்னம் = சிறுமை, அற்பம், புற அடையாளம்)
விசாரத்தால் அக ஞான சபையிலிருந்து கொண்டு, சூழ் உலகத்து மக்களுக்கு உண்டாகும் துன்பம் துடைத்து, அகத்தும் முகத்தும் ஞான ஒளியும், ஜீவகளையும் தோற்றுவித்தால் வேண்டும். அப்படிச் செய்யாது, விசாரமின்றி சமயமதக் கொள்கைகளால் சிறு நெறி பிடித்து உலக வாழ்வில் உழன்று கெடுதல் அறியாமை.
கின்னம் = துன்பம், கேழ் = ஒளி.
சிற்றம்பலம் = சிறு அம்பலம் அல்லது (சித் + அம்பலம்=) ஞானக் கோயில்.