Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.536.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்து மூன்றாம் அதிகாரம்.

ஐம்பத்து நான்காம் அதிகாரம்.

சோதிச் சின்னம்.

6

ஆயிரத்தெட் டாநிலையோம் ஆம்முச் சுடராகி

ஓய்விலா தூட்டு முயிர்க்கு.

536

குறள் விளக்கம்.

கடவுட் ஜோதி பிரணவ ஜோதியாய் நிறைந்து நின்று, பரமான்ம பதியாய் சிரநடு சிற்றம்பலத்திலிருந்து ஆட்சி புரிகின்றது. இப்பரஞ்ஜோதியே ஆன்மாக்களுக்கு, ஜீவ தேக போகங்களைத் தடைபடாது ஊட்டி மேல் நிலைக்கு ஏற்ற்கி கொண்டே உள்ளதாம்.96 தத்துவ நிறைவுள்ள, 96 விரற்கடைப் பிரமாண நீளமுள்ள இம்மனிதப் பிறப்புத் தேகத்தில் சுத்தப் பொன்னாக சுடர்விடுகின்றது, கடவுட் ஜோதி.

இவ்வொளியே, புறத்திருக்கும் சூரிய சந்திர அக்கினி ஆகிய முச்சுடர்கட்கும், நட்சத்திரங்களுக்கும் தயா பெருங்காரண சக்தியாயுள்ளதாம். இந்நான்கு புற ஒளிகளின் கலைகளும் (12, 16, 64, 4) 96தான். இவை ஆன்மாகாச நிலையில் அதாவது, சஹஸ்திரம் (1000) ஆகாசம் (8) என்னும் 1008 ஆக விளங்குகின்றன. ஆன்ம ஞான அனுபவத்திற்காகவே இவ்வாயிரத்தெட்டு வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி கடவுட் ஜோதி தத்துவம், பற்றிக் கொண்டோரை தன் வண்ணமாக்கும் தன்மையதென்னும் குறிப்புணர்த்தவே (10 ½) பத்தரை மாற்றுத் தங்கமாகக் கூறப்படுவது, இது (1008/96 = 10 ½) ஆயிரத்தெட்டாம் ஒளியை தத்துவ பூரண சக்தியால் பிரித்துக் கண்டதாகும். பத்தரை மாற்று என்பதின் கருத்து, தனது பத்தரை தன் வண்ணமாக மாற்றும் என்பதாம்.

மேலும், சூரிய கலை 12 திருமால் அம்சமாகும். இது சூரியனின் துவாதச (12) ஆழ்வார்களைக் குறிக்கும். அகத்தேயுள்ள 1008 ஆகிய ஜோதி நிலை வெளிப்படுத்தவே உலகில் பல்வேறு பிறப்புக்களும் தோற்றுவிக்கப்படுகின்றன. இப்பிறப்புக்களின் முடிந்த லட்சியம் கடவுட் ஜோதி நிலையே. இதனால் (1008/12 = 84) எண்பத்து நான்கு லட்ச ஜீவ பேத நிலைத் தோற்றமுண்டானதாம்.

அடுத்து, சந்திரனுக்குரிய கலை 16. சிவ ஜோதி அம்சமாய், சிவஞான சித்தியைத் தருவதற்கு (1008/16 = 63) அறுபத்துமூன்று அடியார்களின் தத்துவக் கதைகள் வழங்கப்பட்டுள்ளனவாம். இவ்வறுபத்து மூவரில் சேர்க்கப்படாத மாணிக்க வாசகரைச் சிவத்தோடு ஒப்பதாகக் கொண்டு, அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவருடன் சேர்ந்த்து, சைவ சமயக் குரவர் நால்வராக ஓதி, சட்சத்திரக்கலை நான்கையும் முறை செய்துள்ளனர்.

அன்றியும், திருவாதிரை, சிவனுக்குரியதாகக் கொண்டு அருளோடு 16 நட்சத்திரங்களையும் சேர்த்துவிட்டு, அடுத்த திருவோணத்தை திருமாலுக்குரியதாக்கி, மேல்வரும் திருவாதிரை முடிய 12 உடுக்களும் மாலோடிசைத்துக் குறித்துள்ளனர். சூரிய நாராயணம் பன்னிருகலையோடு அகத்தே ஆன்மாவாய் இருக்க, அதினின்று ஒரு கலையேற்ற ஜீவ தேகம் பதினாறு கலைச் சந்திர சேகரனாய் புறத்தாடுகின்றதாம். இதனால்தான் நம் தமிழில் இவ்விரு உடுக்களுக்கும் திருவென்ற தெய்வ அடைமொழி சேர்த்துக் காட்டினர்.

சத்விசாரத்தால் அகப்பெருஞ் ஜோதிபதியின் உண்மையைக் காணவும் சுத்த தயவால் அனுபவம் பெறவும், இயற்கை ஜோதிகளை புறத்தே காட்டி அவற்றைக் கொண்டு நம்மை வளர்த்து பக்குவ மூட்டிக் கொண்டுள்ளார் நம் தயாபெருஞ்ஜோதி பதி.