Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.531.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா

ஐம்பத்து நான்காம் அதிகாரம்.

சோதிச் சின்னம்.

1

ஞாயிற்றுச் சோதி நமதான்மா சுட்டவரு

கோயிற் கடவுட் குறி.

531

குறள் விளக்கம்.

தெய்வத் திருவுருவை வைத்து விசாரஞ் செய்து உண்மை அறிந்து கொள்வதை விட, ஜோதிச் சின்னங்களை அமைத்துக் கொண்டு வணக்க வழிபாடுகள் செய்வது பழமையான முறையாகும். இச்சின்னத்தினின்று நேரடியாக புறச் சோதி இயல்பையும், அதனால் உணர்த்தப்படும் ஆன்ம ஜோதித் தத்துவத்தையும் அறிந்து கொள்ளலாகும். இது உருவ வழிபாட்டின் முடிவில் அடையப் பெறும் அருவுருவ தயா ஜோதி நிலைக்கு அடுத்து உள்ளதால் அப்படியே அதிகார முறையும் வைக்கப்பட்டதாம்.

ஆன்ம உண்மையைச் சத்விசாரஞ் செய்து அடைதற்கு வசதியாகத் திருவருளால் வழங்கப்பட்டுள்ள இயற்கைக் கருவிப் பொருள் வான ஜோதிக் கோளாகும். சூரியனிலிருந்து இந்த உலகமும், பல்வேறு உயிர்பொருள்களும் தோன்றி விளங்கி மறைகின்றன. இம்முச் செயல் கடவுட் சந்நிதியில் நிகழும் ஆக்கல், காத்தல், அழித்தல் ஆக உள்ளன.

இந்த உண்மையை எல்லாம் சுட்டிக்காட்டி அறிவு கொளுத்தவே கோயில்களும் கடவுட் சின்னங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இயற்கை ஞாயிறு வழிபாடுதான் பின்னர் விசாரத்தின் பொருட்டு சிற்பாலயச் சின்னங்களாக ஆக்கிக் கொள்ளப்பட்டன.