Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்.எண்.501

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்தோராம் அதிகாரம்.

தெய்வ நூற் சாரம்.

1.

ஆதியாய் நின்ற அருளே யெழுத்தெல்லாம்

ஓதிய நூற்பொரு ளொன்று.

501

குறள் விளக்கம்.

அகக் கல்வி கழகத்தில் கற்றுத் துறை போய, அருட்பட்டம் பெற்றவர்கள்தான் அருள் விளக்க மெய்ந்நூல் ஆக்கித் தருபவர் ஆவர். ஆதலின், அப்படிப்பட்ட தெய்வநூற் சாரத்தை உணர இவ்வதிகாரம், அகக் கல்வி நிலையத்திற்கு அடுத்து வைக்கப்பட்டுள்ளதாம்.

எல்லாவற்றிற்கும் முதலாய் உள்ளது கடவுள் அருளே. அந்த அருளே கற்கப்படும் பொருள்களில் தலையாயதாம். இவ்வுண்மையை அடிப்படையாய்க் கொண்டு இவ்வுலகத்திலுள்ள எல்லாமும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

இவ்வருளை ஆதாரமாய்க் கொண்டே அகரமுதலான எழுத்துக்களும், சொல்லும், இலக்கண இலக்கியங்களும் ஆக்கப்பட்டன. இப்படி உருவாகிய இலக்கிய நூல்கள் எல்லாம் கடவுளை அடைய வழி கூறும் நூல்களாகும். இவையே தெய்வ நூல். இவற்றின் சாரம் ஒன்றாம் கடவுளே.

அருளே, எழுத்து எல்லாம் என்றது. அருள் தான் எழுத்துக்கள். அருள்தான் மற்ற எல்லாமும் என்று விரித்துப் பொருள் கொள்ள நிற்பதாம்.