Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.496.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பதாம் அதிகாரம்.

அகக் கல்வி நிலையம்.

6.

உச்சிக்குக் கீழுண்ணா ஓங்கார மூளைமேல்

நிச்சலுரு மான்ம நிலை.

496

குறள் விளக்கம்.

ஞான விசாரம் செய்து மெய்யனுபவம் பெறுவதற்கு ஆன்மா ஒளிவிட்டு விளங்கும் இடம், தலையாய உச்சியுள் இருக்கின்றது. இது, முன்புறமுள்ள பெருமூளைக்கும், பின்புறமுள்ள சிறு மூளைக்கும் இடைநடுவேயுள்ள ஓங்கார மூளையின் மேல் பகர வடிவக் குழியில் இலங்கும். இதற்கு அடியில் உள்நாக்கு பொருந்தியுள்ளது. இந்நிலையில்தான் ஆன்ம ஒளி வெளிப்பட்டு விளங்கும்.

இந்நிலை நீங்கின், அல்லது சூழ் தேக வடிவம் பிரிவுறின் மேற்படி ஆன்ம தீபம் விளங்காது அடங்கி நிற்கும். பின்னர் மறுபடியும் ஓர் தேகம் சூழும்போது ஒளிவிடலாகும். இதனால் அறியப்படுவது யாதெனில் ஆன்ம விளக்கு நித்தியமாய் இருப்பினும், ஜீவதேகச் சிரநடு உற்றபோது மட்டும் ஒளிவிட்டும் மற்றபோது ஒடுங்கியும் இருப்பதும் அறியப்படுகின்றதாம்.

இது எதுபோன்றதெனில், மின்பொறி கம்பி வழி எப்போதும் பாய்ந்து கொண்டிருப்பினும் தக்க குமிழ் (bulb) ஒன்று படுத்தப்படும் போதுதான் ஒளிவிளக்கு பிரகாசிப்பதும் மற்றபோது, ஒளி ஒளிந்து கொண்டிருப்பதும் போல் ஆகும்.