தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்தோராம் அதிகாரம்
மனித சீவான்மா.
|
1. |
அண்டச் சிரநடு ஆரும் பரனின்று பிண்டத் துயிர்நிறைக்கும்பெய்து. |
401 |
குறள் விளக்கம்.
பரமான்மாவின் அனுபவம் வெளிப்பட்டு விளங்கற்கு உரிய இடம் ஆன்ம சிற்றணு என அறிவோம். அந்த ஆன்ம சிற்றணுவும் இம்மனித சீவ தேகத்தில் விளங்கும்போதுதான் அனுபவப்படுவதாய் உள்ளது. இந்த அதிகாரம் மனித சீவான்மாவை துலக்க வந்துள்ளதாம்.
மனித தேகத்தில் தலை ‘அண்டம்’ ஆகும். கீழ்ப்பாகம் ‘பிண்டம்’ ஆகும். தலையாகிய அண்டத்தையும், கீழ்ப் பிண்டத்தையும் சேர்க்கும் கழுத்து ‘கண்டம்’ எனப்படும்.
இதுவன்றி, உலகம் அண்டமாகவும், அதினின்று உருவாகிய இத்தேகம் பிண்டமாகவும் உரைப்பர். பிண்டம் என்றால் பிள்ளப்பட்டது. ஒரு கூறு பிய்த்து எடுக்கப்பட்டது என்றே பொருளாம்.
நமது அண்டச் சிரநடு பரமான்மாவில் இருந்து பிள்ளப்பட்டு உயிர்ச்சக்தி இப்பிண்ட தேகத்தில் நிறைக்கப்பட்டுள்ளது அறியலாகும். இவ்வுயிர்ச் சக்தியோடு கூடிய ஆன்ம உணர்வே சீவான்ம அறிவைத் தருகின்றதாம்.