Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.393.

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பதாம் அதிகாரம்.

பரமான்மா.

3. அத்துவித மானபர மான்மாவி ணுண்மையினை

எத்தறியும் சுத்ததய வின்று.

393.


குறள் விளக்கம்.

துவிதம் என்றால் இரண்டானது. அத்துவிதம் எனின் இரண்டாகாதது. பரமான்மா அத்துவிதமானது என்னும் போது, ஒன்றான கடவுள் தானே, அயலறியாது, ஏகமாய், இரண்டுபடாது உள்ளதென அறியலாகும்.

ஏகம் என்றால் ஒன்று என்ப. ஆனால் இந்த ‘ஒன்று’ என்ற தமிழ் மொழிச்சொல்லுக்கு, ஒருமையாதல், பிரிவறக்கூடி நிற்றல் எனப் பொருள் கூறுவர். கடவுள் உண்மை விரவிய காரணம் காட்டவே, ஒன்று என்ற சொல் ஆக்கப்பட்டுள்ளதாம்.

அதாவது, ஒன்று என்பது பரமான்மா ஆகிய ஒப்பற்ற கடவுளைக் குறிப்பதால், அதன் ஒன்றாகிய ஒருமைத் தன்மையையும், அது ஆன்மாக்களோடு பிரவற கூடி நிற்கும் உண்மையையும், அருட் பூரண அனுபவத்தில், அயலறியாது, எங்கும் தானாய் நிற்கும் நிலையையும் கட்டிக் கொண்டுள்ளது உணரப்படும். இவை யாவும் சுத்த சன்மார்க்கத்தில் அனுபவப்படுகின்றன.

மற்ற வேதாந்தம், சித்தாந்தம், வழங்கும் பரமான்ம பாவனையாலும், சிவ தீக்கை பாவனா முறையாலும், கடவுளோடு இரண்டறக் கலந்து அதுவாகி நின்று அனுப வாழ்வு பெறுவது அருமை. ஆகையால், சுத்த தயவினால் தான், பரமான்மாவின் அத்துவித உண்மையை அனுபவ பூர்வமாகக் கொண்டு வாழ முடியும் என்று தெளிதல் வேண்டும்.