Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.370.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தாறாம் அதிகாரம்.
கொல்லாமை.

10
கொலைபுலை யர்று குவலயத் தின்ப
நிலையுறச் சுத்ததயை நீட்டு.
370

குறள் விளக்கம்.
கொலையின்மையின் குறிக்கோளாகிய சுத்த இன்ப நிலையை இவ்வுலகின் கண்ணே அடைவதற்கு அக அம்பலத்தின் உட்பொருந்தி எங்கும் தயை வளர்த்தல் வேண்டும்.
சுத்த தயவு என்பது உண்ணின்று தடைபடாது படர்கின்ற தயாசக்தியை, தயவுச் செயலாக மறப்பு நினைப்பு அற்று புரிந்து கொண்டிருக்கும் பணியாம்.
இந்நிலைத் தயவை சகல கேவலம் அற்றது என்பர். அதாவது, அகத்தே உள்ள தயா ஒளி நித்தியமானது. இதனைச் சூழ்ந்த சொரூப, ரூப, சுபாவத் தோற்றங்கள் அநித்தியம்.
இவ்வநித்தியத் தோற்றத்தை நினைத்தல் சகலம்; நித்தியத்தை, அறியாமையால் நினையாதிருத்தல் அல்லது தெரிந்தும் மறந்து விடுதல் கேவலம்.
ஆகவே நித்தியத்தை அறிந்து தெளிந்து அதுவாகி மறவாது நிலைத்தலே சுத்தமாம்.
அபக்குவ ஆன்மாக்கள் சகல கேலத்தில் சதா உழன்று கொண்டே இருக்கும். பக்குவம் அடைந்து போதுதான் சுத்த நிலையுறும். இச்சகல கேவலமே, பகல், இரவாகவும், சுத்த நிலையே இராப்பகல் அற்ற நிலையாகவும் கூறப்படும்.