Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.365.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தாறாம் அதிகாரம்.
கொல்லாமை.

5
அகத்தோங்கு மொன்றுக் கழிவில்லை யென்றும்
இகத்துற் றவைபோம் இறந்து.
365

குறள் விளக்கம்.
இவ்வுலகிடை தோன்றுபவை யாவும் நிலைப்பனவல்ல. அழிந்துபோம். ஆனால், இப்படி தோற்றுகின்றவைகளுக்கு உள்ளீடாய் நின்று நிலவும் ஒன்று என்றும் அழியாததாம். அது வளரொளியாய் நிறைந்தோங்கி விளங்க உள்ளதாம்.
இறப்பும் ஒரு விதத்தில் கொலையே. கொலையால், உயிரும், உடம்பும் பிரிவு பட்டு சீவ விளக்கம் குன்றி ஒழிகின்றது. பிற உயிர்க்கொலை ஆனாலும், தற்கொலை ஆனாலும் கேடே உண்டாகின்றது. இதுபோன்றே, இறப்பாலும் உயிரும் உடம்பும் பிரிவுபட்டுக் கெடுவதால், இதுவும் ஒரு வகையில் கொலையே. கூற்றுவனால் செய்யப்பட்ட கொலையே.
அகத்தே விளங்கும், அழிவற்ற ஒன்றைச் சார்ந்து அதுவானோர் இறவா நிலை பெறுவர். இவர்களே கொலை நீங்கினவர் ஆவர்.