Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.364.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தாறாம் அதிகாரம்.
கொல்லாமை.

4
புலையுடம்பின் பற்றற்று பூத்தார் தயவா
னிலையுறுவார் கொல்லாமை நேர்ந்து.
364

குறள் விளக்கம்.
கொலை தவிர்த்து வாழ்வது எப்படி ? புலால் மறுத்து விட்டாலும், புலையுணவல்லாத பிற உண்டி ஏற்றாலும், தூல தேகம் வளர்ச்சி அடைந்து ஓங்க, எத்தனை எத்தனையோ கண்ணுக்குத் தெரிவனவும், தெரியாதனவும், ஆன சீவர்கள் கொலை படுகின்றனவே.
இக்கொலை எல்லாம் தவிர்த்து வாழ்வது எவ்விதம் ? அப்படி வாழத்தான் முடியுமா ? என்று உலகியலார் கேட்பார்கள்.
நம் தயா நெறியை அறிந்து கொண்டால், யாவரும் உண்மையை அறிவர்.
புலை உடம்பின் பற்றற்று, அகத்தே தயாவண்ணமாக (இறைவனும் நாமும் பிரிவற்ற ஒன்றாக) இருந்து வாழும் உபாயம் உணர்ந்தோர், தேக இந்திரிய நிலை கடந்துள்ளனர். ஆதலின், புலை உடம்பின் நிகழ்ச்சிகள் ஏதும் தாக்கப்படாது சுத்த தயாமயமாய் நிற்பர். இந்நிலை பொருந்தி இருத்தலே கொல்லாமையுடன் உலகில் வாழ்தலாகும்.