Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் - எண்.271.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தெட்டாம் அதிகாரம்
மனோ சக்தி

1.
ஒருமைமன சக்திக்கு ஒப்புவமை கூறில்
அருமையிலை யீசனல் லால்.
271.

குறள் விளக்கம்.
மனத்தை ஒறுத்து துடுக்கடக்கி, நம் வசமாக்கினால் சாதாரண நிலையில் விளங்காத அதன் ஆற்றல் சிறிது சிறிதாக வெளிப்படும். இதனை அறிந்து பெறற்கரிய பெரிய இன்பத்தைப் பெறவே, இவ் வதிகாரத்தில் மனோ சக்தி விளக்கப் படுகின்றது.
உலகில் கடவுள் சக்திக்கு இணையானது வேறில்லை. ஆனால் நம் சுத்த சன்மார்க்கத்தில் கடவுளுண்மை ‘சுத்த தயாவாகி’ நின்று சகல கேவலமற்ற சுத்த மனமாய் அனுபவப்படுகின்றது. அதனால் இம் மனோசக்தி, கடவுட் சக்தியேயன்றி வேறல்ல. மேலும் மனோ சக்திக்கு ஒப்புவமையாக உள்ளது கடவுட் சக்தியே அன்றி வேறில்லை.
சுத்த மனத்தை அனுமன் என்னும் குரங்காக உருவகம் செய்தவர்களும்
“நாட்படா மறைகளாலும் நவைபடா ஞானத்தாலு
கோட்படா பதமேஐய குரக்குரு கொண்ட தென்றான்”
என்றும் அறிதற்கரிய கடவுள் திருவடியே,. இக்குரங்கினது உருவானதாகக் கூறியுள்ளனர்.