Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.231.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்து நான்காம் அதிகாரம்
வெகுளி

1.
விருப்பு வெறுப்பே வெகுளிக்கு வித்து
நெருப்பருளாற் சுட்டெரித்து நீற்று
231

குறள் விளக்கம்
பெருமிதம் கொண்ட மனதுக்குத் தடையும், இடரும், மாட்டாமையும் உண்டாகும்போது, அப்பெருமித உணர்வு மறைந்து, அவ்விடத்தில் சினம் தோன்றி வெகுளியாக வெளிப்படுகின்றது. இதனால் பெருமிதத்திற்கு அடுத்து, வெகுளி என்னும் இவ்வதிகாரம் வருகின்றது.
வெகுளி என்னும் கோபத்திற்குக் காரணம் விருப்பமும் வெறுப்புமேயாம்.
ஒருவன், ஒரு பொருளை அடைய விரும்புகின்றான். அந்தப் பொருளோ கிடைக்காமல் போகிறது. அப்பொருளின் மேல் இருந்த விருப்பம், அப்பொருள் கிடைக்க வில்லையே என்ற மனக்குறை அதிகரித்த காலத்து மனதில் வெறுப்பு உண்டாகின்றது. வேறொன்றன் மீது மனம் செல்லாது அதையே அடைவேன் என்று, எதிர்ப்பவற்றை எல்லாம் சினந்து வெகுண்டு எழுகின்றது. இதுதான் வெகுளியின் தோற்றம்.
இங்கு, விருப்பும், வெறுப்பும், வெகுளிக்கு விதை என்று சொல்லப்பட்டுள்ளது. ஒரு விதையில், முளைப்பதற்குக் காரணமாய் உள்ளது முளை. விதையில் முளை மறைந்து கிடந்து, வெளிப்பட்டுத் தழைத்து மரமாவது போல, விருப்பிலே இருந்து வெறுப்பு உண்டாகி சின முளையாய் வெளிப்பட்டு வெகுளி மரமாய்த் தழைக்கின்றது.
இவ்வெகுளியாம் மரம் முளைக்காமல் செய்ய வேண்டுமானால், விருப்பு வெறுப்பு என்னும் விதையை அருள் என்னும் நெருப்பினால் சுட்டு எரித்து நீறாக்கி விட வேண்டும்.
உள்ளத்தில் அருள் ஒளி நிலை பெற்றால்தான், வேண்டுதல், வேண்டாமை என்னும் விருப்பும் வெறுப்பும் ஒழியும். அவை ஒழிந்த பின் வெகுளி தோன்றவே இடமில்லையாம்.