Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் 161-170 மூலமும் உரையும்.

தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா.
161 170 உரை விளக்கம்.
பதினேழாம் அதிகாரம்.
முக்குணாவத்தை.

1.
சத்துவம் ராசதம் தாமதம் இம்மூன்றும்
பற்றிடும் நெஞ்சிற் படர்ந்து
161

கு.வி. அருள் நிலையுறாது மந்திர தந்திர மார்க்கத்தில் சென்ற மனம் முக்குண அவத்தையினின்று விடுபடுவதில்லை. ஆதலின் இவற்றால் உறும் நன்மை தீமைகளைத் தெளிந்து அருள் வழியிற் செல்லவே இவ் வதிகாரம் தொடர்கின்றது.
மனதை சதா சூழ்ந்து ஆட்டி வைத்துக் கொண்டிருப்பவை முக்குணங்கள். அவை சத்துவ குணம், இரசோ குணம், தாமத குணம் ஆம்.
சாந்தம், அன்பு, விழிப்பொடு நன்முயற்சி இவை சாத்வீகத் தன்மையனவாம். வேகம் படபடப்பு வீண் பிரயாசை அமைதியின்மை இவை ராசதத் தன்மையனவாம். சோம்பல், சோர்வு, துயில், மயக்கம், மோகம் இவை தாமதத் தன்மையனவாம்.
இவை யாவும் கடவுள் விதித்த நியதிப்படி ஆகாரம், பழக்க வழக்கம் சூழ்நிலைக் கொப்பத் தோன்றித் தோன்றி ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கும்.
மன அறிவு காரியப்படும் இடம் இதயத் தானம் ஆதலின் நெஞ்சினில்தான் முக்குண அவத்தை முளைத்து, உடற்பிரதேசம் முற்றும் படர்ந்து கொண்டே உள்ளனவாம்.

2.
அறங்கண் டமையா அலைமனம் வீணிற்
கறங்கும் உறங்கும் களைத்து.
162.

கு.வி. மனமானது அமைதியான அற நெறியில் தழைத்து சத்துவ மயமாய் விளங்காத போது உண்மையான பெரும்பயன் அடையாது. இரசோ குணத்தால் கறங்கும். (சுழன்றலையும்). தாமத குணத்தால் களைப்புற்று சோம்பி மயங்கித் துயிலும்.
ஆகையால் சத்துவ குண சம்பந்த சன்மார்க்கமாம் அறநெறியில் நன்முயற்சியோடு இருத்தல் மனோ அமைதியும் நல்லறிவும் இன்பமும் ஓங்கும்.

3.
அவாசினம் உள்மயக்கம் ஆட்டும் மனத்தை
தவாஅப் பிறப்பினை சார்ந்து
163.

கு. வி ஒவ்வொரு பிறப்பிலும் ஆவல், கோபம் அறியா(மை) மயக்கம் ஆகிய இவை மூன்றும் மனத்தினை சூழ்ந்து ஆட்டி வைக்கின்றன. மேலும் இவைகளே தொடரும் பிறவிகளுக்கும் காரணமாகி வந்து சேர்ந்து ஆட்டி வைப்பதுவாம்.
தவாஅப் பிறப்பு என்பதில் தவா = நீங்காத ‘அ’ என்ற உயிர் அளபெடை தவாஅ என்பதை நீட்டி முழக்கி, நீங்காது மேலும் மேலும் தொடர்கின்ற பிறப்பை உணர்த்துகின்றதாம்.
சினம் = மனத்தின் உள் வேக்காடு,. கோபத்தின் அக நிலை இது. கோபத்தின் புறப்பகுதி வெகுளி எனப்படும்.
இதே போல் அவாவும் மயக்கமும் மனத்தின் உள் நிகச்சிகளையே சுட்ட வந்தனவாம்.

4.
கொலைவழி வாராத கோதில் உணவே
தலையான சத்துவம் தான்
164.

கு. வி. சத்துவ ஆகாரத்தில் முதன்மையானது குற்றமற்ற தயா வழியில் பெற்ற சுத்த உணவேயாம். அதுவன்றி கொலை வழியாற் பெறும் புலை உணவு சத்துவமுடையதாகாது.
பிற சீவர்களை வதைத்து அல்லது பிறரை துன்புறுத்தி சேகரிக்கப்பட்ட வாரிக் குவிக்கப்பட்ட ஊன் உடலைப் பெருக்கும் உணவு அன்பறிவு ஒழுக்கம் வளர்க்காத உணவு முதலியனவும் கோதுடையனவேயாம்.

5.
அதிகார சாரத்தோ டட்டுண் ணசனம்
கொதிகொள் ளிராசதமே கூறு.
165.

கு.வி இரசோ குண விருத்தி செய்து கொதிப்படையச் செய்வது மிகக் கார சாரத்துடன் பாகஞ் செய்து உண்ணும் ஆகாரமேயாம். (அசனம் = அன்னம், சோறு)
அதிகாரம் = மிக காரச் சுவை அல்லது அகங்காரத்தால் உயர்பதவி காரணத்தால் வந்த மனோ எழுச்சியால் பிறரை அட்டு (வருத்தி) யுண்ணும் ஆகாரமும் அதிகார சாரத்தோடு கூடியதாம். இவ் வாகாரங்கள் எல்லாம் இராசத உணவே.

6.
கழிமிகு தாமத கையறவு வேண்டார்
அழிமிகு தாழுறு வார்.
166.

கு.வி கழி = மயக்குண்டாக்கி கையறவோடு கிடக்கச் செய்யும் தமோ குண ஆகாரங்கள் நல்லோர் கொள்ளார்.
நல்லவர்கள் அழிமிகு (நிறையன்புடைய) இறைவன் திருவடியை அடையக் கூடியவர்கள் ஆவர். தான் என்பது முயற்சி என்று பொருள் கொள்ளும்போது பேரன்பும், பெரு முயற்சியும் உடையவர்கள். இடைவிடாது த்யா நன்முயற்சி உடையவர்கள். கையறவு (சோம்பிக் கிடத்தலை) எப்பொழுதும் நினையார்கள் என்றாம்.

7.
தெருணிலை நின்று திகழருள் சேர்வார்
மருளிருள் மேவார் மடிந்து
167.

கு. வி தெருள் நிலையாவது உண்மை கண்டு அவ்வுள்ளுணர்வு வளர வளர்த்து அதுவாகி ஓங்கும் தெளிந்த நிலையாம். இது சத்துவ மயமான அருள் நிலையாய் விளங்குவதாம்..
இந்நிலையுற்றோர் மடிந்து (சோம்பி அல்லது அழிந்து) மருள் வளர் மற நெறியிலும் இருள் நிறை கருநெறியிலும் சென்றடையார். ஆதலின் ராசத தாமத குணமேவாது சாத்வீக நிலை நின்று அருளற நெறியில் பயின்று ஆனந்தமுறல் வேண்டும்.

8.
தயைவளர் சத்துவ சற்குண சீலர்
மயல்சின மேவார் வழு.
168.

கு.வி சத்துவ குணத்தில் தான் தயவு வளர்கின்றது. நற்பழக்க ஒழுக்கமுடைய உத்தமர்கள், வழு (குற்றம்) உடைய (தாமதத் தன்மையுள்ள மயலும் ராசதத் தன்மையுடைய சினமும் கொண்ட) நிலைகளை என்றும் சேரார்கள்.

9.
குணமென்னும் சத்துவக் குன்றேறி நின்றார்
கணமேனும் காவார் கதம்.
169.

கு.வி. நிலையான சத்துவ குணமாகிய உயரிடத்தில் இருப்போர் மலை போல் அசைவற நிற்பர். அவர்களைக் கோபம் பற்றுவதில்லை.
(கதம் = கோபம்)
கோபம் சினமாகிய முச்சூட்டை முதலில் உண்டுபண்ணி ரத்தத்தில் வேகமூட்டி வெகுண்டெழச் செய்து கண் சிவத்தல் பல் கடித்தல் படபடத்தல் முதலிய தேகேந்திரிய தீச்செயல்களைத் தோற்றுவிக்கும்.
சத்துவ சாந்தர்கள் கோபத்தின் முளையாகிய சினம் தோன்றும் கணத்திலே அழித்து விடுவார்கள். இமைப்பொழுது நேரமும் அக் கோபத்தை வளர விடக் காத்திருக்க மாட்டார்கள. ஆதலால் அவர்களைக் கோபம் பற்றுவதில்லை எனப்பட்டது.

10.
சுத்ததய வாகார சூழுயிர்க் கின்பருளி
நித்தமகிழ்ந் தோங்குவார் நீடு.
170.

கு. வி சுத்த சன்மார்க்கத்தினால், சுத்த தயவே, தன் வடிவாக ஆக்கப் பெறுவர். ‘ஆகாரம்’ என்பது வடிவம், உணவு என்னும் இரு பொருள் கொண்டதாம். இதனால் இங்கு ‘தயவாகாரர்’ என்பது, தயா வடிவம் ஆனவர் என்றும் தயவே தன் உணவாகக் கொள்கின்றவர் என்றும் அறிய வேண்டும்.
இவர்கள் தம்மைச் சூழ்ந்த பிறர்க்கு உயிர் விளக்கம், அறிவு விளக்கமும் ஈந்து விட்டு, தாம் ஏதும் உண்ணாது, உறங்காது, நிரதிசயானந்த மயமாய் என்றும் வாழ்வார்கள்.
சுத்த தயவில்லாத மற்ற அன்புடைய கற்றோர் பிறர்க்கு இன்பு செய்வதால், தாம் பெரிய இன்பம் அடையலாம் என்ற அவாவால் இதனை காமியக் கர்மமாகச் செய்வார்கள். அல்லது, பற்றில்லாது நிட்காமிய கர்மமாகச் செய்துவிட்டு, உலகவர் போன்றே உண்டு களித்து ஒழிவார்கள். இதனால்தான் அன்று பொய்யாமொழியார்
‘தாமின் புறுவ ருலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றரிந் தார்’