Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் 141-150 மூலமும் உரையும்.

தயவுக் குறள்.
சுவாமி சரவணானந்தா.
பதினைந்தாம் அதிகாரம்.

1.
கற்பனையா னன்றிக் கருத்தோங்கி யுண்மையின்
பொற்பறிய மாட்டாப் புரிந்து.
141.

குறிப்பு விளக்கம்
மனோ சிந்தனை கற்பனா சக்தியினால்தான் வளர்ச்சி பெறுகின்றது. அகத்தும் புறத்தும் நிறைந்துள்ள பொருள்களின், செயல்களின் தத்துவ உண்மைகளை எல்லாம் அறிந்து கொள்ள மனத்திற்கு, நல்ல வளர்ச்சி பெற்ற கற்பனா சக்தி வேண்டியுள்ளது.
முன் குறிப்பிட்ட மனோ கரண நானிலை ஒழுக்கத்தால், உள்ள அம்பலத்தில் தெய்வப் பொற்பு ஒளிவிடுகின்றது. இதனை வெளிப்படுத்திப் பிறர்க்கு உயர்த்தவே இக் கற்பனை நமக்குப் பயன்படுகிறது.

2.
பகுத்தறியு மாந்தர்க்கே பார்மீது ஏலும்
தொகுத்தறியுங் கற்பனையின் சூது.
142.

கு.வி.
ஆறாம் அறிவாகிய பகுத்தறியும் ஆற்றல் கொண்டுதான், உண்மை இது, உண்மையல்லவை இவை என்று பிரித்து அறிந்து தெளிதல் கூடும். இப்பகுத்தறிவாற்றல் பக்குவ சீவர்களாகிய மாந்தர்க்கே உள்ளது.
இதனைக் கொண்டு பொய்யானவற்றையும், வேண்டாதவற்றையும் நீக்கி, உண்மையை ஏற்று மேலும் மேலும் தொகுத்து வளர்த்துக் கொண்டே போனால் உண்மைப் பொருளின் அனுபவம் எல்லாம் பெறலாம்.

3.
தூய கரணமில்லார் தோற்றுவித்த கற்பனையால்
ஆய திடரே யறி.
143.

கு. வி.
தயவு நிறைந்த கரண ஒழுக்கம் பெறாதவர்கள், மனப் பயிற்சியால் செய்கின்ற கற்பனைகள் யாவும் உண்மையான இன்பத்தை தோற்றுவிக்க மாட்டா. அவைகளால் வருவது இடரேயாம்.
ஆதலின், கரண ஒழுக்கத்தில் நின்று, சீவ தயவுடன் வாழ்கின்றவர்கள் செய்கின்ற கற்பனையின் உள்ளுறையாக விளங்குவது கடவுள் உண்மையே என்றும், அதுவே யாவருக்கும் இன்பம் தருவதென்றும் தெளிதல் வேண்டும்.

4.
கரணேந் திரியங் களியுறு வண்ணம்
வரநேர்ந்த கற்பனையே மால்.
144.

கு.வி.
மனம் முதலான கரணத்திற்கும், கண் முதலான இந்திரிய புலனுக்கும் இன்பத்தை உண்டு பண்ணும்படியாகச் செய்யப்பட்டுள்ளன புறக் கற்பனைகள். இக் கற்பனையால் வந்துள்ளது ‘மால்’ எனப்படுகின்றது.
மால் என்றால் 1. மயக்கம், 2. திருமால் ஆகிய அரியைக் குறிப்பது. யாதெனில், அபக்குவ மனத்தினர் உண்மை அறியாததினால், கரணேந்திரிய இன்பம் தரவந்த கற்பனைகளை மயக்கத் தோற்றமுடையனவாகக் கொண்டு வெறுக்கின்றார்கள்.
பக்குவ மனத்தினரோ, இக் கற்பனையால் உலகெல்லாம் நிறைந்த உத்தமனையே கரணேந்திரியங்கள் களியுறு வண்ணம் கண்டு கொண்டு ஆனந்தமுறுகின்றார்கள்.

5.
சுத்ததயா மார்க்கம் துலங்காக்காற் கற்பித்தார்
புத்ததயா மார்க்கம் புறத்து.
145.

கு.வி.
விசாரத்தால் கற்பனை கடந்த தயா பெருஞ்ஜோதி பதியைக் கண்டு, உட்கலந்து நின்று உலக வாழ்வை தயா இன்ப வாழ்வாக்கி எல்லோருக்கும் நற்பயன் வழங்குவதே நம் சுத்த சன்மார்க்கம்.
இதற்கு முன்பு தோற்றுவிக்கப்பட்ட புத்த நெறி, கரண இந்திரிய நெகிழ்ச்சியால் ஏற்பட்ட விருப்பு வெறுப்போடு கூடிய உயிரிரக்கமும் புறத்துறவும் கொண்டதாகும்.
புலனெறியுலகு புத்த நெறியை மதிக்கும், துதிக்கும், சுத்த சன்மார்க்க தயாபெருஞ்ஜோதி உதயமாகாத வரை !
பேரொளி உதயமானபோது, மற்ற புலன் மயக்கிய சிறு நெறிகள் யாவும் மங்கி மறையும்.
ஆதலின், மாயாகாரிகள் கற்பித்த புறநெறிகளை விரும்பிக் கொள்ளவும் வேண்டாம். வெறுத்துத் தள்ளவும் வேண்டாம். சுத்த தயவைக் கற்பிக்கும் சன்மார்க்கத்தை யுறுவதே யாவருக்கும் நலம்.

6.
அருளுண்மை காணாதே யாடுமத மெல்லாம்
மருளுறச் செய்யும் மகற்கு.
146.

கு.வி.
மதி என்பது மனோ கரண அறிவாம். மதியின் சத்தான மெய்யறிவே மதமாகக் கொள்ளப்படும். சுத்த சன்மார்க்கம் விளங்காத காலத்தே மனோ அறிவினால் கற்பிக்கப்பட்ட பல மதங்களும், மனிதனை உலக வாழ்வில் மருளுறச் செய்தனவே அன்றி, அருளுண்மைப் பெரும் பதியைக் கண்டு கொள்ளச் செய்யவில்லை.
அருள் உண்மைப் பெரு நெறியே உண்மை மதம், சன்மார்க்கம் நித்தியமாய் நிலைத்து பேரின்பம் வழங்குவது. மற்ற கற்பனா மதங்கள் அநித்தியம், நிலையற்றவை, உலகில் சிலகாலம் ஆடிக் கொண்டிருந்து ஒழிபவையாம்.
மகற்கு = (மகன்+கு) மனிதனுக்கு.

7.
கற்பனையாற் கண்ட கலையனைத்துந் தீண்டரிய
சொற்பொருளை மேவஅருள் சூழு.
147.

கு.வி.
ஒரு பொருளை விளக்கவே சொல் கற்பனை செய்யப்படுகின்றது. உலகில் உள்ள பொருள் பல. அப்பொருள்களை சுட்ட கற்பிக்கப்பட்ட சொற்களும் பல.
மெய்ப் பொருளாகிய கடவுள், மனோ கற்பனைக்கு அப்பாற்பட்டுள்ளது. ஆகையால், அம் மெய்ப்பொருளைக் குறிக்க வரும் சொல்லும் மனோ கற்பனையில் சிக்காது. அப்பாற்பட்டு நின்று சுத்த அருள் உணர்விலே அனுபவப்படக்கூடியதாக உள்ளதாம்.
ஆகவே, திருவருளாலே உணரப்படுகின்ற மெய்ப்பொருளே பொருளாகவும் அதுவே சொல்லாகவும் இருப்பதாகக் கண்டு கொள்ளப்படுகின்றதால், கடவுள் – சொல்லும் பொருளுமானவர் என மெய்யுணர்ந்தோர் ஓதி உள்ளனர்.
ஆகவே, சொற் பொருளாய் உள்ள கடவுளைக் கண்டு கொள்ள அருள் அறிவையே துணை கொள்ளல் வேண்டும்.
இதை விடுத்து புறத்தே ஒலியாயும் ஒளியாயுமுள்ள சொற் பிரபஞ்சத்தே கற்பிக்கப்படும் அனைத்துக் கலைகளின் துணை நாடி, பல காலம் பயின்று தேடினும் நலம் உண்டாகாது.
அருள் அனுபவம், கற்பனைக்கலா உணர்வுக்கு அப்பாற்பட்டதாம்.

8.
எந்நெறிசெய் கற்பனைசேர் எக்குறியும் ஒவ்வாதே
நந்தயவுச் சோதியென நாட்டு.
148.

கு.வி.
பலவாகிய சமய மதங்களில் கடவுளைப் பற்றியும் தெய்வீக தத்துவங்களைக் குறித்தும் பற்பல சின்னங்கள் கற்பனை செய்து வழங்கப் பட்டுள்ளன. இக்கற்பனைகளுக்கு எல்லாம் தோற்றுவாய் அண்டச் சோதியாகிய ஞாயிற்றினிடத்திருந்து உதித்துள்ளனவாம்.
ஞாயிற்றினின்று காரியப்பட்டு இலங்கும் நம் பகுதிப் பிரபஞ்சத்தில் அந்த ஞாயிறே காரணமாக உள்ளதைக் கண்டவர்கள், வாழ்க்கையை வளப்படுத்தி இன்ப நிலை எய்த மதக் கொள்கைகள் பல தோற்றுவித்தபோது, ஞாயிற்றின் இயல் உண்மைச் செயல்களை நினைந்து போற்றி வழிபட்டனர்.
இஞ்ஞாயிற்று வழிபாட்டிற்கு வேண்டி அதன் அடையாளமாகப் பல சின்னங்களைக் கற்பனை செய்து கொண்டார்கள். அவைகளே பின்னர் மதச் சின்னங்களாக விளங்கலாயின.
சிவலிங்கம், சுவத்திகம், சிலுவை, பிறையும் நட்சத்திரமும், தீபச்சுடர், வேல், வாள், மழு, சக்ராயுதம், அம்பு, தாமரை முதலியன சோதி தத்துவம் விளக்கவும் இவ்வொளி நிலைக்கு முன்னதாகிய ஒலி நிலையைக் குறிக்க உலகில் நிறைந்த பிரணவ நாதமாகிய ஓங்கார மந்திர மொழி சங்கு, உடுக்கு, மணி, எக்காளம் முதலியனவும் தோற்றுவிக்கப்பட்டன.
மேற்குறிக்கப்பட்ட இவ்வளவு விந்து நாதச் சின்னங்களும் மனோ கற்பனா சக்திக்கு உட்பட்டுத் தோன்றினவைகளே, இன்னும் எத்தனையும் வரலாம். ஆனால், நமது சிற்பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்ட அகண்டாகார மகாபிரபஞ்சத்தில் எண்ணிலிகோடி உடுச் சோதிகள் உள்ளன. அவைகட்கெல்லாம் தாரகமாய் உள்ளது நம் தயாபெருஞ்சோதி ஆகும். இது தயா அனுபவத்தில் அன்றி பிற கற்பனையில் அடங்காதாம்.
கடவுளைத் தயவு சோதியாக இங்கு நாம் குறிப்பதும் ஒரு கற்பனையன்றோ ? எனின்
இத் தயவாகிய சொல்லும் அதன் பொருளும் பயனும், நம் பதியினுடைய சொரூப, ருப, சுபாவ அனுபவத்தை வழங்க உள்ளதால் இத்தயவுச் சோதி தத்துவம் உண்மைக் கற்பனையாகத் தோற்றியும், அதீதத்துற்று மெய்ப் பொருள் தொடர்பு உண்டாக்குவதாயும் உள்ளதாம்.
தயவு – மெய்ப் பொருளனுபவ நிலை.
த – தமனிய (தங்க) மயச் சோதியாய் எங்கும் நிறைந்ததும், நம் தலை நடு அனுபவப் படவும் உள்ள கடவுட் சோதியாகும்.
ய – அந்த கடவுள் ஒளி தங்கியுள்ள அழிவற்ற ஆன்ம அணு, சிரநடு மலர்ந்துள்ள ஆன்ம நிலையமாம்.
வு – அருள் வண்ண வகர மெய்யுடன், ஐந்தாவதாகிய உகர உயிர்ச் சக்தியால், சீவதேகாதி பிரபஞ்சத்தை எல்லாம் அருளிற் கண்ட உண்மையை வழங்கிக் கொண்டிருப்பதாம்.
ஆகவே, நாம் தயவு மயமாகி வாழ்ந்தால் கடவுள் அனுபவம் பெறுவது நிச்சயம்.

9.
கற்பனையின் வெற்றி கடவுள் தயவுகாண்
தற்போதம் நீக்கும் தமிழ்
149.

கு.வி.
இத்தயவு, கடவுள் உண்மையை அறிந்தடைய நமக்கு உதவுவதால், இதன் தோற்றம் சாதாரண கற்பனை மட்டுமல்ல. அதீத உண்மையேயாம்.
இதனால், இத் தமிழ் ஈன்ற தயவு நம் தற்போதத்தை ஒழித்து தன் மயமாகிய கடவுள் அனுபவத்தை வழங்க வந்துள்ளதால், இது கற்பனையின் நினைத்தற்கரிய பெரிய வெற்றியே ஆகும்.

10.
யோகா திசய முறுகற் பனாசித்தில்
மாகாதல் கொள்ளற்கு மயக்கு.
150.

கு.வி. கற்பனை செய்யப்பட்ட யோக சாதனைகளால் அடையும் வியத்தக்க சித்திகளில் பெருமோகங் கொள்ளுதல் மனோ மயக்கமேயாம்.
சத்திய ஞானமாகிய சுத்த தயவில் கடவுள் உண்மை வெளிப்பட்டு, அழியாப்பேரின்ப சித்தி வழங்கப் பெறுவதே நம் பதியின் திருவுள்ளமாகும்.
இதற்கு ஞானத்தில் யோகமாகிய சத்விசார நிலையில் பொருந்தி தயாவண்ணமாக ஆவதே சாதனையாம். இச் சாதனை சாத்திய முறுவது கற்பனை கடந்த சுத்த சன்மார்க்கத்தில் தான்.