Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் 111-120 மூலமும் உரையும்

தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா, திண்டுக்கல்
பன்னிரண்டாம் அத்தியாயம்
5. மெய் இந்திரிய ஒழுக்கம்

1.
ஐம்பொறியி னான்குமுயர் அண்டத் தலையிடத்தாய்ப்
பம்புமொரு பிண்டப் பரிசு.
111

குறள் விளக்கம் – மெய்யாகிய உடம்பு தொட்டறி உணர்ச்சிக்கு இடமாக உள்ளது. இந்த உடலில் அண்டம் தலையாம். மற்ற பகுதி பிண்டம் எனப்படும்.
அண்டமாகிய தலைப்பகுதியில், கண், நாக்கு, மூக்கு, செவி, ஆகிய நான்கு இந்திரியங்களும் பொருந்தியுள்ளன. அன்றியும் இந் நாற்பொறிக்கும் மற்ற தேக முழுவதற்குமே ஆதாரமாய்ப் பரிச உணர்வுக்குக் காரணமாய்ச் சிரநடு மெய்யொளி திகழ்கின்றது.
எனவே அறிவு அனுபவங்கட்கு எல்லாம் இடமாகிய சிரப்பகுதியே சிறப்பும் உயர்வும் உடையதாம்.
பம்புதல் = செறிந்திருத்தல்.
தயவோடு கூடிய மெய் இந்திரிய ஒழுக்கத்தால், அசுத்த அநித்திய தேகத்தை சுத்த நித்திய தேகமாக மாற்றிக் கொள்ள வேண்டுவதே அறிவுடைய மாந்தர்க்கு அழகு.

2
உருகண் டுருகாதே யுட்பெருகும் அன்பால்
வருமுயிர் காத்து மகிழ்
112

கு.வி- புறத் தோற்றத்தைக் கண்டு உள் மயங்கி முயங்காதும், வெறுத்து மறுக்காதும், உளநிறை தயவோடிரங்கி, சூழ்நர்க்கு உயிர் விளக்கமும், அறிவு விளக்கமும் உண்டாக்கி உவந்திருத்தல் வேண்டும்.
அகத்திருக்கும் அன்புருவத் தாண்டவர் ஆணையால்தான் எவ்வுயிரும் எப்பொருளும் நமைச் சூழ்கின்றன.
ஆதலின். உண்மை உணர்ந்து அன்பால் வருமுயிர்களைக் காத்து மகிழ்வு செய்தலே இம்மனிதப் பிறப்பின் பயன்.

3
கையறவில் லாது கருணைவளர் நற்பணியே
வையமிதி லென்றும் வளர்.
113

கு.வி- கையறவு = செயலறச் சோம்பி இருத்தல். ஆகையால் கையறவில்லாது என்பது, சோம்பலின்றி விழிப்போடு செயல்புரிந்து கொண்டு இருத்தல் வேண்டும் என்பதாம்.
அந்தச் செயலும், உலகில் எப்பொழுதும் தயை வளர் நல்ல செயலாகவே இருக்க வேண்டும். இவ்வுடல் சுறுசுறுப்போடு தயா பணியில் ஈடுபட்டிருந்தால்தான் அகத்திலிருந்து திருவருள் உணர்வு பெருகி வளர்ந்து தேகமெல்லாம் பரவி சுத்த இன்ப நிலை ஏற்கச் செய்யும்.

4.
பேரூண் மடிமை பெருந்துயி லும்மூன்றும்
சேரூன் உடல்நரகத் தீ.
114.

கு.வி – பேரூண் = அதிக உணவு கொள்ளுதல்
மடிமை = சோம்பிக் கிடத்தல்
பெருந்துயில் – அதிகமான தூக்கம்.
இவை மூன்றும் சேர்ந்த புலையுடம்பு இம் மனிதப் பிறப்பைக் கீழான நரகத் தீயிடை உய்க்கும்.
இவ்வூனுடல் பற்றே பந்தம், நரகம், பிணி எல்லாம். பற்று அறுதலே விடுதலை, வீடு, மோட்சம், பேரின்ப நிலையுமாம்.
அகம் உணர்ந்து கூடி, உண்டியும், உறக்கமும் சுருங்கி மடிமை இல்லாது தயவுப் பணி புரிந்து கொண்டிருத்தல் திருவடியைப் பெறும் உபாயமாகும்.

5.
தெய்வதயா தேகமிதைச் செம்மையுற வேபேணில்
மெய்யொளியே மெய்யாய் விடும்.
115.

கு.வி – அகத்தே உள்ள கடவுட் பெருஞ் சக்தியின் தயவே, உயிர், உடல், உலகு எல்லாவற்றிற்கும் மூலகாரணமாய் இருப்பதால், அச் செம்பொருளின் தயா அனுபவம் நாம் பெற ஒழுகினால், இது காறும் அகத்தே மூல காரணமாய் மறைந்து நின்ற தயா ஜோதியாகிய மெய்யொளிதானே விரிந்து நிறைந்து இத் தேகத்தையே தன் வண்ணமாக்கிக் கொள்ளும்.
பொய்யான தேகமிது மெய்யாதல் ஒன்றே தயாபெருஞ் செயல்.

6.
மெய்யினைப் பொய்யென்று வேதாந்தம் பேசியருட்
செய்கைவிட்டார் பட்டார் சிதைவு.
116

கு.வி – வேதாந்தம் ‘காயமே இது பொய்யடா’ என்று வாய் வேதாந்தம் பேசி திருவருளை உணராது அவ் வருளாணையைப் புறக்கணித்து, நற்பணி புரியாது, வாழ்நாளை வீணாக்கி, வீண் போவது அறியாமை.
ஆன்மாவே கடவுள், அதுவே, நாம் என்ற வேத மகா வாக்கியத்தை நினைந்து, புற உடலை வெறுத்து, செயலற நின்று, அகத்தே மனத்தால் பொய் பாவனை செய்து, கண்மூடிக் கழிந்து, மண் மூடிப் போவது திருவருட் சம்மதமன்று.

7.
பெருமையுரு பெண்கூறால் பெண்ணாசை பேசும்
இருபாலார்க் கொவ்வா திவண்.
117.

கு. வி – பெருமையுரு = இத் தேகம் பெறுதற்கரிய பெருமை கொண்டது. சிறப்புடையது என்பது ஒரு பொருள். மற்று, இத்தேகம் பெரிய புலன் மயக்கத்தை உண்டு பண்ணுவதென்றும் பொருளாம்.
மேலும், இவ்வுடல் பெண்ணின் சத்தால் உருவாகியுள்ளது. இத் தேகத்தினிடத்துப் பெரும் பற்று வைத்துப் புலனின்ப மயக்கத்தில் ஆழ்ந்தால், திருவருள் உணர்வு விளங்கத் தடையுண்டாம்.
ஆதலால், இத் தேகப்பற்று, பொறிவாயில் துய்க்கு சிறு இன்ப மோகம் என்பதே பெண்ணாசையாம். இச் சிற்றின்பப் பற்றுதலாகிய பெண்ணாசை, ஆணுக்கும், பெண்ணுக்குங் கூட கூடாதாம்.
இதனால் பெண்ணைத் துறந்து வாழ வேண்டும் என்பது கருத்தல்ல. தேகமில்லாது தெய்வ தயா அனுபவமில்லை. ஆதலின், இத் தேகம் வேண்டும். இதற்கு இச்சையின்றி நுகரும், மெய் ஒழுக்கம் ஓங்கும் நல்லற வாழ்வு மேற்கொள்ளல் வேண்டும்.

8.
உடம்பினைப் பெற்ற ஒருபய னாகும்
நடம்புரி ஈசனை நண்ணு.
118

கு.வி – உயருடைய மனிதப் பிறப்புத் தேகத்தைப் பெற்றதின் சிறந்த பயன் யாதெனில், சீவ தேகாதி பிரபஞ்சத்தை முற்றும் சதா ஆட்டி வைத்துக் கொண்டே அருட்பெரும் திரு நடனம் புரிகின்ற ஆண்டவரை அறிந்து அடைவதேயாம்.
இத் தேகம் இருந்தாலன்றி, கடவுளறிவு விளங்காது. மற்ற பிறப்புத் தேகங்களில் கருவி கரணங்கள் குறைவாம். ஆதலின், நிறையறிவு வெளிப்படும் இத் தேகம் இருக்கும்போதே கடவுணிலையைக் கண்டடைதல் வேண்டும்.

9.
வினையுடம்பு மேன்மேல் விளையும் திருத்தா
ளினையடைந்தார்க் கில்லை யிது.
119.

கு.வி- இக் கரும தேகம். நல்வினை, தீவினை காரணமாக மேன்மேலும், ஆன்மாக்களுக்கு, வந்து கொண்டேதான் இருக்கும், இந்த வினையுடம்பின் விளைவுக்குத் தடை, தயா பெருஞ் சக்தியாகிய கடவுள் திருவடியே அன்றி பிறிதெதனாலும் உண்டாகாது.
அருளடி அடைந்தார்க்கு அவ்வருளே உருவாக ஆக்கப்பட்டு விடுவதால், அவர் தம் ஊழுடம்பு, பரிச வேதியால் செம்பு பொன்னாவது போல், அருளொளி உருப்பெற்று நிலவும். அவர்கள், வினையற்ற இறவாப் பிறவா இன்ப வடிவாய் விளங்குவர்.

10.
சிதையுமண் வீட்டைச் சிதையாப்பொன் வீடாய்
இதையே யிசைக்கு மிறை
120

கு.வி – மண்கூறு மிகுந்த இத்தேகம் அழிந்து போகக்கூடியது. அகத்தே மறைந்துள்ள அருட்பெருங்கடவுட் சக்தி, பூரணமாய் மலர்ந்து, அனகமுறும்போது மண்ணான இத் தேகம் பொன்னாக மாறி அழியாதே நிலைத்து நிலவும்.
அதனால், இந்த தேகத்தைக் கேவலம் மண்ணெனவும், புன்புலால் ஆக்கை எனவும் இழித்துக் கூறி அலட்சியம் செய்யாது, அருள் நன் முயற்சியால் அழியாப் பொன்னுருவாக ஆக்கப் பெறுதல் வேண்டும்.
தயா ஒழுக்கத்தில், முதலில் பஞ்சேந்திரிய ஒழுக்கம் வருவதால், சிறுபோதே இருந்து நம் மக்களை நற்பழக்க வழக்கங்களின் பயிற்சி அளித்து, தேக போகத்தில் ஆவல் மீதூரா தயா இன்ப வாழ்வே குறிக் கோளாய்க் கொண்டு ஒழுகச் செய்தல் வேண்டும்.
இவ்விந்திரிய ஒழுக்க நற்பழக்கம் இளமையிலே ஏற்பட்டுவிட்டால், மேல், சுத்த சன்மார்க்க வாழ்வுக்கு நற்றுணையாகும். உலகில் இதுவரை கண்டில்லாத இன்ப வாழ்வு தழைக்கும்.
பஞ்சேந்திரிய ஒழுக்கம் முற்றிற்று.