தயவு
பரமான்மபதி
Universal Soul.
(எங்கும் நிறை இறை)
தயாஜோதியில் கண்ட விளக்கம்
சுவாமி சரவணானந்தா.
3. ஆன்மாவும் சூழ் தேகங்களும்
கடவுள் உண்மை, அகத்தில் கொண்டுள்ள ஆன்ம சிற்றணுக்கள் இல்லாத இடமே இல்லை எனக்கண்டு கொண்டுள்ளோம். எல்லாமும், ஆன்ம அணு மயம் என்றே கூறிவிடலாம். சாதாரண பூத அணு மையத்தில் விளங்கும் புரோடான் துணுக்குகளுக்கு ஆதார காரணமாயுள்ளதே நம் ஆன்மாணுக்களாகும். இந்தப் புரோடான் மட்டும் நிறைந்திருக்குமாயின் அகண்ட வெளி முற்றும் பெருஞ் ஜோதி மயமாகவே திகழும். அருள் உண்மை கண்டார்க்குத் தோற்றும் அருட்பெருஞ் ஜோதிக் காட்சி ஆகத்திகழுவது இதுவாம்.
“ஈற்றறியேன் இருந்திருந்திங்கு அதிசயிப்ப தென்னீ
என்கின்றாய் நீயெனைவிட்டேகு தொறு நான்றான்
காற்றறியாத் தீபம்போல் இருந்திடும் அத் தருணம்
கண்டபரிசு என்புகல்வேன் அண்டபகிர் அண்டம்
தோற்றறியாப் பெருஞ்ஜோதி மலைபரநா தத்தே
தோன்றியதாங்கு அதனடுவே தோன்றியதொன்று அதுதான்
மாற்றறியாப் பொன்னொளியோ அவ்வொளிக்குள் ஆடும்
வள்ளல்அருள் ஒளியோஈது அதிசயிக்கும் வகையே”
இது நம் திருவருட்பிரகாச வள்ளலார் கண்டோதிய வியன் ஜோதிக்காட்சி விளக்கமாகும். ஒவ்வொரு சுத்த ஆன்மாவும் இக்காட்சி அனுபவத்திற்கு உரியதேயாம்.
இது அனுபவப்படற்காகவேதான், ஒவ்வொரு ஆன்மாவைச் சூழவும் பிரபஞ்ச காரியங்கள் யாவும் நடந்து கொண்டே இருக்கின்றனவாம். ஆன்மாவைச் சூழ்ந்த ஜட பூத அணுவும் கூட அதற்கோர் ஒளியுடம்பேயாகும். ஜீவான்ம நிலை சூழக்கொள்ளும் உயிருடம்பும் ஒளி கொண்டதே ஆம். இதனால் தான் ஆன்மாவை சூழ்ந்த இவ்வுருவங்களுக்கு, ஒளிவுடமையைக் குறிக்கும், தேகம் (தகிப்பது எரிப்பது) உடல் (உடற்றல், சுடுதல்) என்று மொழியப்பட்டுள்ளனவாம். ஒரு ஆன்மாவைச் சூழ்ந்து ஏதாவது ஒரு தேகம் இல்லாமல் இருக்காது எப்போதும். சூரியனுக்குக் கதிரொளி இயற்கையாய் விளங்குதல் போல் ஆன்மாவுக்குத் தேகம் விளங்குவதுமாம்.
ஓர் ஆன்மா, ஜடபூத அணுவில் ஒடுங்கி மறைந்து எத்தனையோ கோடி காலமாகக் கல்லொடு கல்லாய், மண்ணொடு மண்ணாய்க் கிடந்துள்ளது. அந்நிலையில் உள்மறைந்து கிடக்கின்ற அது பிரித்துக் காணக்கூடாது இருக்கின்றதாம். அதன் இருப்பே விளங்குகின்றதில்லை.
திருவருள் வலத்தால் அந்நிலையினின்று பிரித்தெடுக்கப் பட்டு உயிர்ச்சக்தி வெளிப்பட ஒரு சிறு தாவர உருவச்சூழலில் ஏற்றப்படுகின்றதாம். இந்நிலையில்தான் ஆன்மாவுக்கு உயிர் உடம்பின் இருப்பு நமக்குப் புலனாகின்றதாம். இதற்குக் கீழ் நிலைகளில் அணு ஜீவர்கள் உள. அந்த நுண்ணுயிர்கள் ஓர் ஊசி முனையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாய் அடங்கும் என்றால் அதன் வடிவம் எவ்வளவு சிறியதாக இருக்கும் என்பதை நாம் யூகித்து அறியலாம். அவற்றை ஆற்றல் மிக்க அணு தரிசனி என்ற பூதக்கண்ணாடியால் விஞ்ஞானிகள் கண்டுள்ளனர்.
இன்னுஞ் சிலவோ பலரும் அறிந்தனவேயாம். அவை Amoeba (அமீபா) Bacteria (பாக்டீரியா) Virus (வைரஸ்) முதலியனவாம். இவைகளில் எல்லாம் ஆன்மாவுக்கு அறிவு விளக்கம் உண்டாக வகையேயில்லையாம். இவற்றிலிருந்து கொடிய நச்சுச் சக்திகள் வெளியாகி பிரபஞ்ச சிருஷ்டியின் ஆக்கல், காத்தல் செயல்கள் அதிகரிக்காமலும், குறைவுபடாமலும் சமநிலைப்படுத்தப் படுகின்றனவாம். இவைகள் ஒரே ஜீவ தேகத்திற்குள் ஆயிரம் ஆயிரமாகத் தோன்றி மறைகின்றனவாம். ஆகவே, இவற்றை யெல்லாம் நுணுகி ஆய்ந்து கொண்டிருக்காது, ஓரறிவு முதலான அனுபவம் ஏற்படவுள்ள புல்லாதி தேகங்கள் சூழ்ந்த ஆன்மாக்களையே முதலாகக் கொண்டு காண்போம்.
முதலாவது ஓர் ஆன்மாவுக்கு உயிர்ச்சக்தி வெளிப்பட்டு உருவேற்கப்பட்ட காலத்தில் ஆனது ஒரு சிறு தாவர வடிவாம் தேகமே எனக் கொள்ளப்படும். அது ஒரு குறிப்பிட்ட காலம் வரை வளர்ந்து முடிந்ததும் உயிரானது உள் ஆன்மாவில் ஒடுங்க தேகம் சிதைந்து போகின்றது. ஆன்மாவில் உயிர் ஒடுங்குவதும், பின்னர் வெளிப்படுவதும் தொடர்ந்தே நடக்கின்றன. இடையும் தடையும் ஏதும் இல்லையாம்.
இதனால் ஓர் ஆன்மாவுக்கு முதல் பிறப்புருவில் ஏற்பட்ட ஓர் அறிவு முதலாய அகவிளக்கம், அடுத்த பிறப்புருவில் தொடர்ந்து வளருகின்றதாம். அந்த ஓரறிவு வளர்ச்சி நிறைவு பெறும் வரை பலவாகிய தாவர யோனிப் பிறப்புகளில் ஓர் ஆன்மா வாழ நேருகின்றதாம். இதற்கு இவ்வுலகக் கணக்குப் படி எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிடுகின்றனவாம். இங்ஙனம் இவ்வோரறிவு நிறைவேறவே இவ்வளவு காலமாகின்றதென்றால், ஆறறிவு நிலைகளும் நிறைவு கொண்டிருக்கும் இம்மனிதப் பிறப்பு வந்து அடைய எத்தனை கோடி காலமாகி இருக்குமோ! யாரே கணித்து அறிய வல்லார்! ஒவ்வொரு தேகச் சூழலாலும், உயிரில் அணுவணுவாக அறிவு விளக்கம் பெருகி வந்துள்ளது. அவ்விளக்கம் இம் மனித தேகத்தில் மனவறிவாய்த் திகழ்கின்றது.
இவ்வுலகப் படைப்பில், ஆன்மாக்களில் உயிர்ச்சக்தி வெளிப்படத் தொடங்கி அணுஜீவன் முதல், ஆதி மனித வர்க்கம் வரை, உண்டாகவே கோடிக்கணக்கான ஆண்டுகள் கழிந்துள்ளன என்பது மெய்ஞ் ஞானத்தாலும் விஞ்ஞானத்தாலும் இன்று நிரூபிக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆதிமனித இனம், கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த பழங்குடி மக்கள் என்பது நம்முன்னோர்கள் கண்டது உண்மையேயாம். அந்த முதல் மக்களினத்திற்கு மன அறிவு விளங்கித்தான் இருந்தது. அம்மனவறிவினால், அகப்புற உண்மையும் நன்கு பகுத்து அறிந்து கொள்ளவும் முடிந்திருந்தது. உலகில் பிற எவ்விடத்தும் மக்களினம் சென்று வாழத் தகுதி, அற்றிருந்த காலத்திலே, இந்த நம் நாட்டுப் பகுதி, உயர்நல விளக்கத்தோடு திகழ்ந்ததாம். அன்றிருந்த மனித வடிவம், இப்பொழுதை விட ஒரு பங்கு பெரிதாய், நெடுங்கைகளோடும், நெற்றியிற் புடைத்த ஒரு மனோமணிப் பீடத்தோடும் விளங்கினதாகும். அதுவே நெற்றிக்கண்ணாக இருந்தது. அதுகொண்டே மனிதன் காண்டற்கரிய காட்சியைக் கண்டான் என்ப. ஒருமை மனோசக்தியால் அறிவுத் தெளிவு மட்டும் வந்துவிட்டது. அந்த அறிவால்தான், மனிதனில் கடவுள் உண்மை வெளிப்பட்டுள்ள இரகசியமும் கண்டு கொள்ளப்பட்டது.
கடவுள்-எல்லாம் வல்ல பேரொளியாய் எங்கும் நிறைந்திருந்து, தலைநடு ஆன்மாவில் வெளிப்பட்டு, புருவ நடுக்கண்ணில் பிரதிபலிப்பதாகவும் கண்டிருந்தான் அப்பழைய பெருமனிதன். அந்தக் கடவுளர் சர்வ வல்லமை - அவர் தம் தனிப்பெருங் கருணையே எனவும் உணர்ந்து கொள்ளப்பட்டதாம். அந்த உண்மையைக் கண்டு கொண்டவன், அதிலேயே இச்சை வைத்துக் கலந்து ஒன்றிக் கிடக்கவே விரும்பி விட்டான். அதனால், உடம்பைக் கவனியாமலும், உடம்பினால் ஆற்ற வேண்டிய கடவுட் பணியைப் புரியாமலும், உள் அடங்கிப் போய், எல்லாம் இழந்துவிட நேர்ந்துவிட்டதாம். திருவுள்ளம் அதுவன்றே.
மனிதன், கடவுள் அருட்பெருமையை யுணர்ந்து, அவ்வருள் மயமாவதற்கே அறிவு தந்துள்ளார் என்பதுதான் நன்கு விளங்கிக் கொள்ளப்படவில்லை அந்நாள். அக்கடவுள் அருளை, அன்பொடு கூடிய பேரறிவே என்பது முதலில் விளங்கவில்லை. ஆகையால், அந்த அன்பு உண்டாகி, நிறை அறிவால் அருளாய்ப் பழுத்திட வேண்டி திருவருட்பெருஞ் செயல்கள் நிகழலாயினவாம்.
மேல், உலகம், மக்களாதி உயிரின வாழ்வுக்குப் பண்பட்ட பின்னர் வேறு வேறு நிலப்பகுதிகளிற் சென்று குடியேறினர். அப்படிச் சென்றவர்களின் பிற்சந்ததி நெடுங்கால எல்லையில் உருவிலும், தோற்றத்திலும், பழக்க வழக்கங்களிலும் முற்றிலும் மாறிவிட்டனர். மனிதன் முதல் மற்ற உயிரினங்கள் யாவுமே உருவிற் சிறுத்துவிட்டன. மெய்யறிவு சுருங்கிட, மனம் புலன் வழி பாய்ந்து, அகன்று பரவியதாம். மற்ற ஜீவர்களின் உயிர் ஆற்றல் புலன்வழி சென்றபோதும் இயற்கை நியதிக்குட்பட்டே இருந்ததால், அவைகளின் புறவாழ்க்கை முறையில் மாற்றமின்றி நடந்து வருகின்றதாம்.
ஆன்மாக்கள் அவ்வவ்வறிவனுபவம் பெற்றுப் பெற்று மேலே மனிதப் பிறப்பெல்லையை அடைகின்றனவாகக் காண்கின்றோம். இம்மனித தேகம் ஏற்ற ஆன்மாவில் தான் விசேட சக்தி வெளிப்படத் தொடங்குவதால் பலவாகிய நிலைமாற்றங்களும், வாழ்க்கை முறைகளும் நாளுக்கு நாள் வேகங்கொண்டு சூழ்கின்றனவாம்.
அக அறிவினர் கண்ட விளக்க முறையால், நம் நாட்டு வாழ்வில் கடவுட் கொள்கை அதிகம் விளங்கியது. அது, புலனறிவு விருத்தியாக நேர்ந்த காலையில் உட் சுருங்கியது; புறத்தே கற்பனைக் கலைகள் வளர்ந்து, வளைத்துக் கொண்டு விட்டனவாம். இன்று மனிதன் தன் உண்மையை முற்றிலும் மறந்துபோய், தன்னைத் தேக வடிவினனாகவே காண்கின்றான், கருதுகின்றான், கொண்டு வாழ்கின்றான். இந்நிலை நம் நாட்டில் இன்று உள்ளது. மற்றைய நாடுகளில் இதனை விட மோசமானதாகவே இருக்கின்றதாம். புறப் புலன் இன்ப வாழ்வே அவர்களுடைய குறிக்கோளாயிருக்கின்றது. ஆன்ம ஞானம் வெற்றுக் கற்பனை எனக் கூடக் கருதுகின்றனர் பலர். அவர்கள் எல்லாம், அவர் அவர்களுக்கு இயற்கையில் உள்ள பகுத்தறிவுக்கு மேல் ஏறிச் சற்று நிதானித்துப் பார்த்தால் உண்மை நன்கு விளங்கும்.
உடம்பின் தோற்றம்
பகுத்தறிவால் எவ்வளவோ விஷயங்களை அறிந்து கொள்ள முடிகின்றது. ஒருசில முதலில் நம்ப முடியாதவைகளாயிருந்தாலும், ஏற்று பலகால் சிந்திந்து தெளியும்போது, உண்மை கண்டு ஏற்றுக் கொள்ள முடிகின்றனவாம். அப்படித் தான் ஓர் ஆன்மாவைப் பற்றியும், சூழ் தேகத்தைப் பற்றியும் தெளிய வேண்டியுள்ளன. அதற்கு நம் மனிதப் பிறப்புத் தேகமே நிறைபொருத்தத்தோடு வழங்கப் பட்டுள்ளதாம். இம்மானிட தேகத்தின் கருத்தொடக்க நிலையை ஆழ்ந்து நோக்குதல் வேண்டும்.
ஓர் ஆன்ம அணு, முதல் முதலில், தந்தையின் சுக்கிலத்துளியில் உயிர்ச் சக்தி பெற்றுத் திகழ்ந்து இருந்து, தாயின் சுரோணிதத்தோடு முறையாகக் கூடுகின்ற போது, கண்ணிமைப் பொழுதின் (7/60) பாகத்தில் அந்த ஆன்மாவைச் சூழப் பிரணவச் சுழற்சி ஏற்பட்டு, நுண்ணுயிர் உடம்பாக வளரத் தொடங்குகின்றதாம். இவ் வளர்ச்சிக்கு வேண்டிய பூத பெளதிகப் பொருட்களும் சக்திகளும் தாயின் அம்சத்திலிருந்தே வழங்கப் படுகின்றனவாம். அவை கொண்டு செல்லப்படுகின்ற கொடி வழிதான் கருப்பிண்டத்தின் உந்திக் கொடிக் குழலாம். கருப்பிண்டத்திற்கு பொதுவாக ஏழாம் மாதத்தில் தான் உயிர்ப்புக் கருவிகள் வேலை செய்யத் தொடங்குகின்றன. ஆதலின் அது தொடங்கு முன் குறைப்பிரசவமாகப் பிண்டம் வெளிப்படின் பயனின்றாம்.
பின்னர் பிறக்குஞ் சிசுவே உயிரோடு வளரக்கூடும். உலகில் உதித்த பின்பு அந்த ஜீவனுக்கு வேண்டிய பொருட்களும் சக்திகளும் புறத்திலிருந்து ஏற்று அகத்தில் இணைத்துக் கொண்டு வளர்க்கப்பட வேண்டியுள்ளனவாம். தேக வளர்ச்சியில் பக்குவப்படப்பட உயிர்ச்சக்தியில் உணர்வு கூடி அறிவாய் மலர்ச்சி பெறும். இந்த அறிவு மலர்ச்சியில் அன்பு மணப்பதே பக்குவ நிலையாகும். அவ்வன்பு மணம், வேண்டுதல் வேண்டாமை அற்ற சுத்த நிலையில் விளங்கும்போது தான் அருளாய்க் காய்த்து பழுத்து முடிவில் கனியும்.
மனம் பழுக்க, ஒரு ஆன்மாவுக்கு மனிதப் பிறவி பல தேவைப்படுகின்றன. ஒவ்வொரு பிறவியிலும், அறத்தாலும் பாவத்தாலும், இன்ப துன்பச் சூழல்கள் வந்து வந்து தாக்குகின்றன. அந்த இன்பமும் துன்பமும் பலகாலும் பட்டுப்பட்டு உழலும்போது, முதலில் இன்பத்தில் விருப்பும், துன்பத்தில் வெறுப்பும் உண்டாகின்றன. அப்படியே துன்பத்தை வெறுத்து ஒதுக்கிவிட்டு, இன்பத்தை முயன்று அடைந்தாலும் கூட அதுவும் சிறிது கால எல்லையில் நீங்கிப் போவதால், அப்படி அடைந்தும் பெரும் பயன் இல்லை என்ற முடிவுக்கே வர நேருகின்றது.
ஆகவே, அந்த இன்பமும் துன்பமும் நிலையற்றனவையாகத் தேர்ந்து தெளிந்து, அவற்றை விரும்பிக் கொள்ளாமலும், வெறுத்துத் தள்ளாமலும், திருவருள் நன்முயற்சி செய்து கொண்டு வாழ வாழ மனத்தில் அருள் பழுக்கின்றதாம். இவ்வருள் விளைவுக்காக வேண்டியே இம்மனிதப் பிறவிகள் தொடர்கின்றனவாக அறிகின்றோம்.
ஓர் ஆன்மாவுக்கு ஒரு பிறப்பில் ஏற்பட்ட அறிவு வளர்ச்சி அடுத்த பிறப்புருவில் பக்குவ காலத்தில் தான் மேல் ஓங்கும். அக்காலம் உண்டாகும் வரை புதையுற்றே கிடக்கும். ஒரு பிறப்பில் ஒரு மனித ஆன்மாவுக்கு ஏற்பட்ட அறிவு வளர்ச்சி, மறுபடியும் அவ்வான்மா ஒரு மனித உடம்பே ஏற்று அறிவு மலரும் போதுதான் விட்ட இடத்திலிருந்து தொடுத்துக் கொள்ளும். பாவ வினை வசத்தால், அவ்வான்மாவுக்கு, மனிதன் அல்லாத கீழ்ப்பிறவி உண்டாகி விடுமாயின், முன் மனித தேக வாழ்வில் ஈட்டிய அறிவு அனுபவம், அப்பிறப்பில் வெளிப்படுவதேயில்லை. பாவ வினையால் தண்டிக்கப்பட்ட கீழ்ப்பிறவி கடந்த பின்பு மனித தேகத்தில் அனுபவத்தொடர்ச்சி காணப்படுகின்றதாம். எந்த விதத்திலும் அந்த அக ஞானம் பழுத்துப் பயன் தராதவரை பிறவித் தொடர் நீங்கவே நீங்காது.
இந்த விதி முறையை அறியாமலும், விருப்பு வெறுப்பு காரணமாகவும், அபக்குவ அவாமதி கொண்டு ஊழை வெல்ல முனைகின்றவர்கள் அடைகின்ற பயன் அற்பமேயாம். இவர்களுடைய முயற்சியால் விரும்பும் பயன் ஓரளவு அடைந்து விட்டாலும் கூட, அதில் வரும் இன்பமும் பயனும் விரைவில் கெடுகின்றதால் என்ன நன்மையோ! அவ் விதி வகுத்த பதியின் திருவுள்ளம், அம்மனிதன் அருள் வண்ணமாய்ப் பழுக்க வேண்டு மென்றிருக்க, அப்படி, ஆக முயல்வதன்றோ அறிவுடமை. அதை விடுத்து,மருள் மதி முயற்சியால் முயங்கலும் கயங்கலும் அறிவுடைமையாகுமா? ஒருக்காலும் ஆகாது.
மனிதர்களாய்ப் பிறந்து பக்தி உள்ளம் படைத்த சில ஆன்மாக்கள், தம் இஷ்ட தெய்வத்தினிடத்து தாம் இனி பரம பத வாழ்வில் விளங்கிடவும், இவ்வுலகில் வந்து பிறவி ஒன்றும் எடுக்காமல் இருக்கவும் வேண்டிக் கொள்ளுகின்றார்கள். இவ் வேண்டுகோள் திருவருளால் ஏற்றுக் கொள்ளப்படுமா என்று உள்ளுணர்ந்து விசாரித்துப் பார்த்தல் நல்லது.
நம் பரமான்மபதி, மனிதனுக்கு அருள் ஞானம் வழங்கித் தன்மய வாழ்வில் விளங்கச் செய்ய உள்ளதுதானே உண்மை. அந்த அருள் ஞானானுபவம் இந்த மனிதப் பிறப்புருவில் வாழ்வதால் தானே நிலைத்து விளங்கும். இதனையே வேண்டாம் என மறுத்து, உள்ளழுந்தி விடுவதால், அருளாணைக்கு மாறாகப் போக நேருதல் கூடும். அதனால் இப்படிப் பிறவி வேண்டாமென்று வேண்டிக் கொள்ளுகின்ற பக்த சிகாமணிகளை அவர்களின் இஷ்டப்படி தன்னில் ஐக்கியப்படுத்திக் கொள்ளுகின்றார். இதனால் என்ன நன்மையுண்டாகிறது? எப்பொழுதும் பூரணமாய் உள்ள பதி, அந்த ஆன்மா வந்து ஐக்கியப் படுவதாலோ, ஐக்கியப்படாமல் இருப்பதாலோ சிறிதும் மாற்றமில்லாது இருக்கின்றார். இதனால் அந்த குறிப்பிட்ட ஆன்மாதான் நஷ்டப்பட்டு சூனியமாய்ப் போய் விடுகின்றதாம்.
அவ்வான்ம நஷ்டத்தைப் புற உலகம் பரமபத வாழ்வாகக் கருதிக் கொண்டாடுகின்றது. உண்மையில் அவ்வான்மாவுக்குத் தனித்த ஒரு இருப்புமில்லை. ஆகையால் வாழ்வும் இல்லையாம். இப்படிப்பட்ட பல ஆன்மாக்களைத் தன்னில் ஐக்கியப் படுத்திக் கொண்டும் தனித்திலங்கும் நம் பரமான்மபதி இப்பொழுது, ஆன்ம நஷ்டம் உண்டாகாத படிக்கு, அனகமுற்று விரிகின்றார். இதனால், ஓர் ஆன்மா, பரமான்மத் தொடர்புடன், ஒன்றி விளங்க ஆனந்த வாழ்வில் என்றுமோங்க வல்லதாகின்றதாம். இதுவே தனியொரு ஆன்மாவுக்குரிய பேரின்ப லாபமாகும். இப்பேரின்பப் பெருவாழ்வு நிலையை அறியாத அந்த பக்த மணிகள் மறைவுற்றது திருவருட் சம்மதமல்லவாம்.
அதுபோல், திருத்தொண்டு புரிந்து கொண்டே இருக்கவும், திருவடியை மறவாது போற்றவும், மேலும் மேலும் பிறவியே வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்ற தொண்டர் குழாத்திற்கும், அப்படியே கருணை பாலிக்கின்றார் நம்பதி! ஆனால் இதிலும் ஓர் ஆன்மாவுக்கு ஒரு நிலையான தேகவாழ்வு ஏற்படாததாலும், பல்வேறு அவத்தைகளுடைய பிறப்பு இறப்புகள் உண்டாவதாலும், ஒவ்வொரு பிறப்பிலும் அறியாப்பருவத்திலும், விளைவு இல்லாக் காலத்திலும், திருத்தொண்டுக்கும் தியான வழிபாட்டிற்கும் தடைகள் நேர்ந்து விடுகின்றனவாம். ஆகையால், ஆண்டவரிடத்து வேண்டிப் பெறுகின்ற இப்பிறப்புகளாலும் ஓர் ஆன்மாவுக்கு நிலையான ஆன்ம இன்ப லாபம் உண்டாகின்றதில்லை என்பதே உண்மையாம்.
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா! உன்றன் இணையார் திருவடி மறவாதிருக்க வரம் தரல் வேண்டும் என வேண்டுகின்றார் அப்பர் அடிகள். என்றும் திருவடியை மறவாதிருக்க வேண்டுமென்பதே அவருடைய விருப்பம். அப்படியே மறவாதிருக்க வேண்டுமானால், தான் கொண்டுள்ள மனித தேகத்தை இழக்காமல் இருந்தால்தானே முடியும்?
அத்தேக இழப்பில், கடவுட் சிந்தனையும் மறைந்தன்றோ போகும்? அன்றியும், மனிதப் பிறப்புத் தேகம் அல்லாது, மற்றப் புழுவடிவமோ, வேறு எந்த ஒரு பிறவித் தேகமோ சூழ்ந்திட்டாலும், அந்த ஆன்மாவுக்குத் திருவடியை நினைக்கும் ஆற்றல் ஏது? ஆகையால், அதனை மறவாதிருக்க, மனிதப் பிறவி தேகத்திலேயே, நம் பதி வாழச் செய்வார் என்ற திடநம்பிக்கையோடுதான் அக்கோரிக்கை விடுத்தார் எனக் கொள்ள வேண்டும்.
புழுவாய்ப் பிறக்கினும், மறவாதிருக்க வேண்டுமாம். மறவாதிருக்கச் செய்ய வேண்டுவது பதியின் கடமையாய் ஆகிவிடுகின்றதால், எவ்விதத்தும் அவ்வான்மாவைக் கீழான பிறவித் தேகத்தில் செலுத்தமாட்டார் என்பது திண்ணமாம். ஆகையால், அந்தப் பரமபதி, அவ்வாகீசராய் விளங்கிய ஆன்மாவின் வேண்டுகோளை ஏற்று அருள் செய்தாரா எனத் தெளிதல் நன்றாம். ஆம். அவரது விழைவின் வண்ணமே, அத்தேகத்தில் இருக்கும் வரை தம் திருவடியை மறக்காமல் இருக்கச் செய்திருந்தார். அந்த மறவாமையோடே தன்னில் ஐக்கியப்படுத்திக் கொண்ட போது அந்த மறவா எண்ண அலையும் அதிசூக்குமமாய் ஒடுங்கிட உட்பதிவாகிப் போய் விட்டதாம். அப்படி மறைந்து கிடந்த சூக்கும எண்ண அலை, பிறிதொரு ஆன்ம அணுவில் தக்க காலத்தில் வெளிப்பட்டு விளங்கி வரலானது. அப்படி ஒவ்வொரு பிறப்பிலும் அம்மறவாமை ஒடுங்குவதும், விரிவதுமாய் இருந்து, இது சமயம்தான் என்றும் ஒடுங்கி மறையாது விளங்கற்கான சுத்த சன்மார்க்கத் திருவுருவம் கொள்ளுகின்றதாம்.
திருநாவுக்கரசர் அந்நாள் வேண்டிய வரம், அன்றே கொடுக்கப்பட்டு விட்டதென்றாலும், இந்நாள் வரை, அது விரிவதும், மறைவதுமாகவேயிருந்தது என்றும், இப்பொழுது முதலே, மறைத்தலின்றி எப்பொழுதும் விளங்கற்கான சுத்த சன்மார்க்க அருள் ஒளி உடம்பு வழங்கப்பட்டு, அவ்வேண்டுகோள் பூர்த்தி செய்யப்படுகின்றது என்றும் அறிந்து கொள்ளுவோமாக. இத் தருணத்திலிருந்து ஒவ்வொரு ஆன்மாவும், ஆண்டவர் திருவடியை மறவாதிருக்க, இறவாதிருக்க, மேற் பிறவாதிருக்க சுத்த உடம்பு வழங்கப்படுவது சத்தியமேயாம்.
ஆன்மாவுக்கு அழியா உடம்பு
“புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு”
(திருக்குறள்)
இவ்வளவு நாட்களாக இம்மனித உடம்பாகிய சிதையுஞ் சிற்றில்லில், ஒரு மூலையில் ஒளிந்து வாழ்ந்திருந்தது. மேலும் மேலும் இது போன்ற அழி உடம்பை நாடிச்சென்று பிழைத்து வந்த ஆன்மாவுக்கு இன்னும் ஒரு நிலையான இல்லம், சொந்தமாகக் கிடைக்கவில்லையே அந்தோ! என்று இரங்கி உரைத்துள்ளார் திருவள்ளுவர். அவர் லட்சியமாகக் கொண்டிருந்த அழியா வீடு, ஆண்டவர் திருவடியே. அதில் கலந்தொன்றி மேல் ஒரு தேகம் எடாது போதலே நிலையான வீடுபேறாகக் கருதப்பட்டது அன்று.
இது இன்று சுத்த சன்மார்க்க விசேட அருளால் அந்தக் கடவுட் கலப்புடன் புற உடம்பையே சுத்த சுகஞான சொந்த உடம்பாக மாற்றிக் கொண்டு நித்தியானந்தமாய் வாழ நேருகின்றதாம். இந்த அருட்ஜோதிப் புக்ககத்தில் நம் அகமுடையானோடு இரண்டறக் கலந்து அழியாப் பேரின்பில் இனி வாழ்வோமாக.
ஆன்மா ஏகமே, அநேகம்
பரமான்மபதி ஒருவரே நித்தியமாக, சத்தியமாக உள்ளவர். ஆதலின், அவர் ஏகம் என்பது எல்லோரும் அறிவர். அந்த ஏக நாயகனே, எங்கும் எக்காலத்தும், ஒவ்வொரு ஆன்மாவாயும் இருந்து கொண்டு, பலப்பலவாகிய தேகங்களை ஏற்பதும், விடுப்பதுமாயிருக்கின்றார் என்பதும் உண்மையே. ஆகையால் ஆன்மாக்கள் அனந்தமாய்த் தோற்றுகின்றன.
திருவருட் பூரணத்தாலே ஓர் ஆன்மா, பரமான்மாவோடு இரண்டற்றிலங்கும் சுத்ததேக வாழ்வு பெறுகின்றபோது, ஏகபரானந்த நிலையே அனுபவிக்கின்றதாகும். அதாவது தானே எங்குமாய் உண்ணின்று அனகானந்த வாழ்வு கொண்டு விளங்குவதாய் அனுபவிக்கப்படுகின்றதாம். அவ்வான்மா, இந்நிலையில் ஏகானுபவங் கொண்டு திகழலால், தானே எல்லா ஆன்மாவாயும், தன்னை அன்றி அயலாகப் பிறிதொன்று இல்லாததாகவும் அறிகின்றதாம். இதனால், இதுவரை தோன்றி இருந்து மறைந்து போன எல்லா ஆன்மாக்களும், இப்பொழுது உலகில் வாழுகின்ற ஆன்ம கோடிகளும் இனியும் அளவு கடந்த நெடுங்காலத்தில் தோன்றுகின்ற எண்ணிலி கோடி ஆன்மாக்களும் தன்னை அன்றி மற்ற ஒன்றாக இல்லை எனத் தெளிந்து கொண்டு விளங்குகின்றான் சுத்த சன்மார்க்கி. முன் வந்த பலவாகிய ஆன்மாக்களில், தானே அது அதுவாய் வாழ்ந்து பெற்றுத் திரட்டிக் கொண்ட அருளனுபவத்தால் இன்று அழியாத சுத்த தேகம் ஏற்படுகின்றது.
இராமலிங்க அடிகள் என்று விளங்கிய ஓர் ஆன்மாதான், இந்தச் சுத்ததேக அனுபவம் பெற்று திருவருட் பிரகாச வள்ளலார் என்றாகி விளங்கிக் கொண்டிருக்கின்றதாம். நம் பரமான்ம பதியே, இராமலிங்க ஆன்மாவாய்த் தோன்றி, திருவருட் பிரகாச வள்ளலாராகித் தன்னையே எங்கும் வழங்கிக் கொண்டிருக்கின்றதாம். திருவருட் பிரகாச வள்ளல் வடிவம் சுத்த தேகநிலை. இனி, ஒவ்வொரு ஆன்மாவும் இச் சுத்த தேக நிலை பெற்றுத் திகழப்போவது திருவருட் பெருஞ்ஜோதி பதியின் பேராணையாகும்.
ஆகவே, நம் சுத்த சன்மார்க்கத்தில் விளங்குகின்ற அருட் பெருஞ்ஜோதிபதி ஏகராய் இருந்து கொண்டு, அநேகமாம் சுத்த சன்மார்க்கிகளாய் வெளிப்பட்டுத் திகழப்போகின்றது சத்தியமாம். இவ்வுண்மையை அறிந்து, இந்நெறியை மேற்கொண்டு எல்லோரும் ஒத்து வாழ்ந்தால் உலகெல்லாம் பெரு நன்மையும் பேரின்பமும் பெறும். பெற்றுத்தான் ஆக வேண்டும். இது திருவருள் ஆணை.
4. முத்தேகங்கள்
முன் தலைப்பில், ஆன்மாவுக்கு, அது விளங்கி வாழற்குத் தேகம் ஒன்று இன்றியமையாதது எனக் கூறப்பட்டது.. ஆம், ஒரு தேகம் இல்லாமல் ஓர் ஆன்மா விளங்க முடியாதுதான். ஆன்மாவைச் சூழ தேகம் ஒன்று தோன்றி வளர்ந்து பெருகுவதும், பின்னர் அழிந்து போவதும் நாம் தினமும் காண்கின்றோம். இந்தத் தோற்றமும், வளர்ச்சியும், ஒடுக்கமும் ஆன்மாவின் மீது எப்படி நடக்கின்றன என்பது பற்றி சற்று ஆராய்தல் நல்லது.
உயிர்ச் சக்தி வெளிப்பட ஆரம்பித்த ஓர் ஆன்மாவுக்கு முதலாவது ஓர் அறிவுத் தாவர தேகம் ஒன்று தோன்றி விளைவு கொள்ளுகின்றதாம். இதில், அந்த உயிர்ச்சக்தி காரணமாய் இருக்க, காரண காரிய சூக்கும சக்தி விரிவதால், தனக்குத் தேவையான பூதாணுக்களைக் கிரகித்துக் கொண்டு வளருகின்றதாம். இதனால் காரிய ரூபமாக அத் தாவரம் தோற்றி விளங்குகின்றதாம். இந்நிலை மூன்றுமே ஓர் ஆன்மாவுக்கு, காரண, சூக்கும, தூல வெளியீடுகளுக்கு ஆதாரமாம்.
ஆன்மாவின் கண் உயிர்ச்சக்தி விரிகின்றபோது இப்படிச் சூக்கும, தூல வண்ண வடிவங்கள் தோற்றி குறிப்பிட்ட காலம் வரை யிருந்து விட்டுப் பின்னர் உயிர்சக்தி யொடுங்கும் போது, அதில் சூக்குமத்தின் காரணசக்தியும் உட்சுருங்கி உயிரோடு ஒடுங்குகின்றதாம். அப்போது சூக்குமத்தின் காரிய தோற்றம் தூலத்தில் ஜடமாகி விடுகின்றது. தூலத்தில் விளங்கிக் கொண்டிருந்த சூக்கும சக்திநிலை வெளிப்பட்டுக் கால எல்லையில் கரைந்து போகின்றதாம். இப்படித்தான் ஒவ்வொரு ஆன்மாவுக்கும், காரண, சூக்கும, தூல அருவுருவங்கள் உண்டாகி விளங்குகின்றன என்பதை நன்கு ஆய்ந்து தெளிவுறல் வேண்டும்.
இம்மூன்றும் மனித ஆன்மாவுக்கு ஏற்பட்டு விளங்குகின்ற நிலையுண்மைகளை நன்கு விரிவாக ஆராய்ந்து உண்மை கண்டு கொண்டால் பலவாகிய ஐயங்கள் நீங்கி பரமான்மபதியை அடைய ஏதுவாகும். பரமான்மா தரித்துள்ளதே நம் ஜீவான்மாவாகிய உண்மை வடிவம். இதுவே, சூக்கும தூல தேகங்களுக்குக் காரணமாயுள்ளதால் காரண தேகம் எனப்படுவது. இக்காரண தேக ஆன்மக்கரு, உயிர்ச்சக்திக்கு அழியாக் கலனாய், அருளோடு நிறைந்த பரமாகாச வண்ணமாயிருக்கின்றதாம். இது உலகிடை பிறவி எடுக்க வரும்போது, ஓர் ஆணினது சுக்கில அணுவிலே, ஆன்ம வுணர்ச்சி, பிரகிருதி, பூதாகாசம் என முத்தன்மை கொண்டு விளங்கி நின்று பெண்ணின் சுரோணிதத்தில் கலக்கும்போது பூதாகாசத்தில் பஞ்சீகரணம் ஏற்படுகின்றது. அதாவது, ஆகாச பூதத்தில் சுழன்று எழுந்த வாயுவும், தீயும், நீரும், மண்ணும் விரிந்து விளங்க அச்சுரோணிதம் உதவி நிற்கின்றதாம். மேற்படி ஆணின் சத்தில் கண்ட மூன்றும், பெண்ணில் தோற்றப்பட்ட வாயுவாதி நான்கும், தேகபிண்ட சிருஷ்டிக்கான சப்த தாதுக்களுக்குக் காரணமாகி உதவுகின்றனவாம்.
இதிலிருந்து, முன்னவையான ஆன்ம சம்பந்தப்பட்ட மூன்றும் ஆண் கூறு எனவும், பின்னவை நான்கும் புற உடல் உருவாகக் காரணமாய் பெண் கூறாய் உள்ளன எனவும் தெளியலாம். இதனால்தான், ஆன்மாவை ஆண் என்றும், தேகத்தைப் பெண் என்றும் கூறும் மரபு உண்டாகியுள்ளது. மேலும் பரமான்மாவோடு வைத்து நோக்கும் போது சுத்த ஞானத்தில் அறிவுமயமான பரமான்மாவே ஆண் ஆகவும், மனித ஜீவ உணர்வு சக்தி சம்பந்தத்தால் விளங்குகின்ற மனம் பெண்ணாகவும் கூறுவர்.
ஆன்மாவின், அறிவுமயமான அம்சம், காரண தேகமாய் விளங்கும். பிரகிருதியின் கூறே சூக்கும தேகமாய் அமைய, பூதாகாச சக்தியிலிருந்து தூல தேகம் பிறக்கின்றதாம். நாம் பொறி புலனால் காண்கின்றது தூல தேகம். மனோகரணத்தால் காண்கின்றது சூக்கும தேகம். சுத்த அறிவால் உணர்கின்றது காரண தேகமாம். புறத்தினின்று இவை ஒவ்வொன்றையும் ஆய்ந்து பார்ப்போம்.
1. தூலதேகம் அல்லது பருவுடல்.
இதனைத்தான் யாவரும் முதலில் காண்கின்றதும், இதன் இயல், செயல், ஆற்றல், அனுபவம் பற்றி ஆய்ந்து அறிந்து தெளிதலும் கூடும். ஆகையால் இங்கு முதற் கண் இவ்வுருவ தேகத்தைப் பற்றி விளக்கம் செய்ய நேருகின்றது. இது கருவில் உருவாகி வளர்ந்து வெளிப்பட்டு இவ்வுலகில் உயிர் அறிவு ஆற்றல்கள் கொண்டு உலாவுகின்றதாம். இதில், அகப்புறக் கருவிகரணங்கள் வளர்ச்சியுற்று உலக வாழ்வில் விளங்குகின்றதாகக் காண்கின்றோம்.
இத்தூல உடம்பு சதா மாற்ற தோற்றங் கொண்டதாய், குண சக்திச் செயல்களோடு சில காலம் இருந்து, இறந்து ஒழிகின்றதாம். ஆகையால் இந்தப் புற வடிவம் அநித்தியம், மாயா கன்ம தேகம் எனவும் மொழியப்படும். இதன் உடற்கூறு தத்துவங்கள் பற்றி இங்கு விளக்கற்கில்லை. அதற்கு ஏராளமான நூல்கள் உலகில் கிடைக்கின்றன; காணலாம். பரவிசார வாழ்வுக்கு வேண்டியவை மட்டும்தான் ஈண்டு விரித்துரைக்கப்படுகின்றதை நினைவிற் கொள்ள வேண்டும். எனவே, அனந்த வண்ண பேதத்தோடு விளங்குகின்ற மன்பதையைப் பொதுப்பட நோக்கி, வாழ்க்கை வரலாற்றில், அக அனுபவத்திற்காம் செய்திகளை மட்டும் திரட்டிக் கொள்ளுவோமாக.
நாம் இதுகாறும், இவ்வுலகில் கண்டும் கேட்டும் இருக்கின்ற, ஆண், பெண், சிறியோர், பெரியோர் முதலியவர்களின் உருவங்கள் எத்தனை எத்தனையோ ஆகும். அவைகள் யாவும் நம் கண்ணில் தோன்றி மனத்திரையில் வந்து வந்து போயினவே ஆம். அவற்றில் ஒரு சில, அடி மனதில் பதிவுற்று, சமய சந்தர்ப்பங்களில் தோன்றித் தோன்றி மறைந்து போகின்றன.
ஒரு காலத்தில் கண்ட, ஒருவரின் வடிவ தோற்றம் உள் மனத்தில் மாற்றமில்லாதிருந்து பிரதிபலிக்கும். ஆனால் அத் தோற்றத்திற்குக் காரணமாயிருந்த புறத் தூல வடிவமோ எவ்வளவோ மாறிவிட்டிருக்கக் காண்போம். இக்காட்சிகளின் சூழலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது சரியாக அறிந்து கொள்ளாததால் கவலையும் துன்பமும், அநித்திய இன்பமும் பட்டுப்பட்டு, பட்டுப்போகின்றோம். இந்த நிலையற்ற வேற்றுமைத் தோற்றங்களுக்குள்ளீடாயிருக்கும், நிலையான பரமபதியைக் கண்டடைய வேண்டியே, இங்கு வந்துள்ளோம் என்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.
ஆகையால் சத்விசாரம் செய்து செய்து அவ்வகப் பெரும்பதியை, உள்ளத்தளியில் கண்டு கலந்து நிலை நிற்கப் பழகிக் கொள்ளல் வேண்டும். அந்நிலை நின்றே., அப்பதி ஆணையால் சூழும் எல்லா வடிவங்களையும், விருப்பு வெறுப்பின்றி நோக்கி, அன்பு செய்யப் பழகுதல் வேண்டும். இச் செயலால் அன்பு மயம் ஆகும்போது, அகம் கண்ட அவ்வன்பு ஒளியே, அனகமுற்று நம் வடிவில் பூர்ணமாய்க் கலந்து கொள்ளும் என்பது சுத்த சன்மார்க்க அனுபவமாம்.
மற்ற மற்ற மார்க்கங்களினால், புற வடிவங்களினிடத்தும் அவற்றின் தோற்றச் செயல்களினிடத்தும், மனம், விருப்பாலும் வெறுப்பாலும், பற்றாலும் பற்றின்மையாலும் உழன்று கொண்டேதான் இருக்கும். அல்லது புறத்துறவினால் அகத்திற் சென்று கூடி மெய்ப்பயன் பெறக் கூடாது போய்விடும். புறத்தேக வடிவங்களில் விருப்பு வெறுப்பு கொண்டு மயங்கிடவோ, விலகி ஓடிடவோ நம்மை நம்பதி இச்சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கவில்லை. சுத்த தயாவொழுக்க வாழ்க்கை நடத்தவே யாவும் வழங்கிக் கொண்டிருக்கின்றார். ஆகையால், அவரது ஆணைப்படி தயவுடன் வாழ்வோமாக.
இந்த நேரம் வரை, உலகில் பலவாகிய நாம ரூபங் கொண்ட மக்கள், தேவர், நரகர் முதலியவர்களையும், பூத, பிரேத, பைசாசங்களையும் கண்ணாலும், மனக்கண்ணாலும் கண்டும், கற்பித்துக் கொண்டும் இருக்கின்றோம். இந்தப் புற வடிவங்களில் மனம் பற்றி நிற்கின்றதால் உள் மலர்ந்து ஒளிருகின்ற ஒன்றான பதியைக் காண்கின்றோமில்லை. சுத்த சத்விசாரத்தால் உள்ளொளி பெற்றுக் கொள்ளுவோம் இப்பொழுதே. அவ் ஒளிவடிவாம் பதியுள்ளிருந்து ஒளிருவதாலே, அதுவே ஒவ்வொன்றுமாகி மலர்ச்சி பெற்று ஒர் ஒரு நாம ரூபத்துடன் விளங்குவதாகவும் மெய்யாகவே கண்டு கொள்ளுகின்றோம். இப்படி அனகமாக நிறை அனுபவம் பெற வேண்டியதே திருவருள் ஆணை.
அகம் மறைந்திருந்த தயாபெருஞ் ஜோதி ஜீவதயவாக அரும்பி மலர்ந்து விரிந்து நிறைந்து கொள்ளுகின்றபோது, புற தூலதேகமே, சுத்த தயா ஜோதி வடிவமாக மாறி அமைவதாம். இக் காரணத்தால், நமக்குச் சுத்த சன்மார்க்கம் வழங்க வந்த திருவருட் பிரகாச வள்ளலார், தன்னைத், தன் தூல ரூபத்தை வழிபட வேண்டாம் என்றும், உள்ளமாகிய சத்திய ஞான சபையில் விளங்கும் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரையே கண்டு வழிபாடுகள் செய்யுங்கள் என்றும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
நம்முள் கண்டு கொள்ளப்படுகின்ற அருள் வள்ளல் தானே தன்னருளால், நம்மை சூழ பலவாகிய வண்ணமாய்ச் சூழ்கின்றபோது, ஒவ்வொன்றிலும் அது அதுவாகத் தோற்றிடுவது நாயகனின் ஒவ்வொன்றின் அகத்திருக்கும் பதியின், மிக மிகச் சிறிய அம்சமாக வெளிப்பட்டிருக்கக் காண்கின்றோம். ஆகையால், தோன்றுகின்ற எதுவும், அகப்பெரும்பதியின் பூர்ணவண்ணம் ஆகாது, அற்பமேயாம். அதுவும் நிலைக்காது மறைவதேயாம். ஆகையால், எந்த ஒரு தூல வடிவத்தையும் பற்றாகப் பிடித்துக் கொள்ளக் கூடாது.
இதுவரை தேவ, மனிதர்களைப் புறவடிவப் பற்றால் உளத்திற் கொண்டு, வந்தனை வழிபாடாற்றியவர்களும், பாவனையால் மனதிற் பதித்துக் கொண்டிருக்கின்றவர்களும் பெறுகின்ற பயன், அருட்பெரும் பதியிடத்திருந்து பெறுகின்ற பயனில் மிக மிகச் சிறு கூறே என்றும் அறிந்து கொள்வார்களாக. உண்மைப் பதியைக் கண்டு, நேரடித் தொடர்பு கொண்டு அன்பு வாழ்வில் ஓங்கும் போது, அந்த ஒன்றே தனித்தனி வடிவிலிருந்து, சிறு சிறு அணுக்களாக ஆற்றலும் பயனும் தருவதை விட்டு, முழுமையாய் வெளிப்பட்டு பூர்ணானந்தம் வழங்குவார் என்பது சத்தியம். ஆகையால், புறத் தெய்வ வழிபாட்டின் பற்றால், அமைதியிழந்து அல்லலுற்று அழிய வேண்டாம். உண்மைக் கடவுள் வழி பாட்டால் எல்லாரும் ஒத்து வாழுங்கள்.
நம் நாட்டுத் தெய்வங்கள் எல்லாம் தத்துவங்களை உருவகம் செய்து ஆக்கப்பட்டவைகளேயாம். ஆதலால், அவைகளைச் சாதாரண மனித வடிவங்களோடும், வாழ்க்கை முறைகளோடும் சம்பந்தப் படுத்திப் பார்த்தால் பொருத்தம் இருக்காது. அத்தெய்வ வடிவங்களில், இரண்டிற்கும் மேற்பட்ட கரங்களும், சிரங்களும், மற்ற நூதனத் தோற்றங்களும், ஆண் பெண் கலந்த வடிவங்களும், குடும்ப முறைகளும் இருக்கும். அவைகளை எல்லாம் புற நோக்காகப் பார்த்துவிட்டு இளிவரல் செய்தல் முற்றும் அறியாமையே ஆகும். அவற்றின் உண்மை அறிய வேண்டிச் சத்விசாரம் செய்தல் முறையாம்.
பதி உண்மையை அறியாத புற நாட்டத்தவர்களின் தெய்வங்கள், அநேகமாக சாதாரண மனித வடிவத்தோடே., ஓரளவு அற்புத தெய்வீக ஆற்றலைப் புகுத்தித் தொழப்படுவதாக அறியலாம். அவற்றாலும், இவற்றாலும் எல்லாம் உண்மையைக் காணவும், கண்டு அடையவும் கூடாதாம். ஆதலின், புறத்தோற்றங்களைக் கொண்டு மயங்காது, அகவுண்மை கொண்டு விளங்குவோமாக.
முடிவாக, மனிதனுக்கு இத்தத்துவ நிறைவாகிய தூல உடல் திருவருளால் வழங்கப்பட்டுள்ளதன் கருத்து, அத்திருவருளாலே நன்கு தெளிந்து கொள்ளுவோமானால், இத்தேகத்தினிடத்து விருப்பு, வெறுப்பு கொள்ளாமல் தயவுச் செயல் புரிந்து கடவுள் தயவை அடைந்திடப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதுவே, திருவுள்ளச் சம்மதமுமாம்.
ஞாயிறானது சதா ஒளிக்கதிர்களைப் பரப்பிக் கொண்டேயிருக்கின்றது. அதில் ஒவ்வொரு கதிரும், ஒவ்வொரு கணமும் புதுமை ஆற்றலோடு பாய்ந்து கொண்டேயிருக்கின்றதாம். இதனால், அக்கதிர்க் கற்றையால் உருவாகின்ற எப்பொருளும், எவ்வுயிரும் சதா மாற்றமடைந்து கொண்டே யிருக்கின்றதாம். இவ்வுண்மையை அறியும் ஆற்றல் இந்த மனித வடிவில் தான் வெளிப்படுகின்றது. இந்தத் தேகம் கொள்ளப்படாத வரை, இந்த உண்மையும் விளங்குவதில்லை. இதனை இழந்து விட்டாலும் உண்மை விளங்காது. ஆகையால், இந்த உடலைத் துறந்து விடாது, காலமுள்ள போதே உண்மையைக் கண்டு அடைந்து விட வேண்டும். அவ்வுண்மையை அடையாது போனால், தேகப்பற்றாலும், துறவாலும் பயன் உண்டாகாது. ஆகவே, நித்தியஜோதி ஆகிய பதிவடிவில் பிரிவற கலந்து நின்று தயாவண்ண வடிவமாக, அனகமுற வாழப்பழகிக் கொள்ள வேண்டும்.
இந்நிலையில் நாம், அருட்ஜோதி ஞாயிறாக விளங்கிக் கொண்டு, தயாகிரணங்களையே பரப்பிக் கொண்டிருப்போம். அப்போது அத்தயா பிரகாசத்தால் நமது புற உடம்பும் புத்தம் புதுமை கொண்டு நித்தம் நிலவும். தூல தேகமே தயாஜோதி தேகமாக மாறினதாக அறியப்படும். இதனால், புறவுருவையே கண்டும், நினைத்துக் கொண்டும் பற்றுவைத்துக் கொண்டும் பற்று வைத்து புறத்தே இருந்து வீண் போகக் கூடாது. மாறாகப் புறத்தையே வெறுத்துத் துறந்து சூனியத்தில் மறைந்து போகவும் கூடாதாம்.
வள்ளலார் நிலை
நமது திருவருட் பிரகாச வள்ளல், இப்பொழுது நம் அருட் ஜோதிபதி ஆகவே. நமது அகத்தில் எழுந்தருளி விளங்கிக் கொண்டுள்ளார். இந்த வடிவைக் கண்டு கொள்ள வேண்டும் ஒவ்வொருவரும். ஈதல்லாது, புறத்தில் இன்று ஆக்கிக் கொள்ளப்பட்டுள்ள, சுவாமிகளின் சித்திர, ஓவிய கற்பனா உருவங்களில் நாட்டம் வைத்து மயங்கி நிற்றல் கூடாது. அருள் ஒளி வள்ளலை உள்ளத்திற் கொண்டு வாழலே நம் வள்ளலார் ஆணையும், கடவுட் சித்தமுமாம்.
இதுபோல், நாம் போற்றும், மற்ற குரு தெய்வ வடிவங்களையும், தெய்வ வடிவங்களையும், ஏனையோர் தூல ரூபங்களையும் புறப்பற்றோடு கருதக் கூடாது. அகத்தில் அனாதி காரணமாயுள்ள அருள் ஒளிப்பதியை மறவாது கண்டிருந்து, அதன் அருள் ஏகதேசத் தோற்றங்களாக யாவையுங் கொண்டு அன்புப் பணி செய்திருத்தல் வேண்டும்.
நாம் அகவடிவிலிருந்து சிந்திப்பதற்குத்தான், நமக்கு இப்புறத்தூல வடிவம் தேவையாயுள்ளது. அது இல்லாமல் ஒரு அனுபவமும் வாழ்வும் ஏற்படாது. மேலும், இதில் இருந்து கொண்டு, பிறர் வடிவங்களில் உள்ள, அருட்பதிக்கு அன்பு செய்ய முடியும். புறத்தே விளங்கும் அன்பு வழிபாட்டில் தான், அனக அனுபவம் உண்டாக வேண்டியிருக்கின்றது. புறவடிவை மறுத்துவிட்டு, முதலில் உருவ வழிபாட்டில் ஈடுபடாமல், அருவுருவாகிய அனக அனுபவ நிலைக்குப் போய்விட முடியாது சாதாரண மக்களால். ஆகையால் தூல வடிவம் அவசியமாகின்றதாம்.
சுத்த சன்மார்கத்தில், தூல வடிவமே சுத்த தேகமாக உள்ளிருந்து மாற்றப்பட வேண்டியுள்ளது. ஆகையால் இப்புற வடிவைக் கேவலமாக நினைத்தும், வெறுத்தும், எரித்துச் சிதைத்தும் விடக்கூடாது.. அபக்குவ வசத்தால் ஓர் ஆன்மாவுக்கு சுத்த வடிவம் கிடைக்கு முன் மரணம் ஏற்பட்டு விட்டால், அவ்வுடம்பைப் புதைத்து வைத்திடல் வேண்டும். இது சுத்த சன்மார்க்க ஏற்பாடு.
இந்த ஏற்பாட்டால் அத்தேக வாழ்வில் உண்டாகியிருந்த அனுபவம், மறுவடிவம் சூழும்போது, ஆன்மாவுக்கு அருள் மலர்ச்சியுண்டாகி சூழ் உடலை சுத்த வடிவாக மாற்றிக் கொள்ள உதவுவதாம். இதனால்தான் இம்மார்க்கத்தில் தேகத்தை எரிப்பது கூடாதென்றும், சமாதி செய்தல் வேண்டுமென்றும் வற்புறுத்தப்பட்டுள்ளதாம்.
அகமிருந்து அனகமுறுகின்ற அருள் வாழ்வில் ஈடுபடாது, கரண இந்திரிய நிலைகளில் இருந்து, தயவில்லாத, பாசவாழ்வில் படர்ந்தால், சறுக்கல்கள் நேர்ந்து துன்புற வேண்டியிருக்கும். அம்மாதிரித் தவறான மார்க்கத்தினாலேதான் பாமர உலகம் சென்று கொண்டேயிருக்கின்றது.
மாசுடைய அவா மனம், கண் முதலான இந்திரியங்களின் வழியாக, ஆவலோடு புறத்தே அணைந்து அணைந்து தேகப் போகப் பற்றை நெடுங்காலமாகவே வளர்த்துக் கொண்டு வந்திருக்கின்றது. அதனால், தேகம் நான் என்ற புலை அகப்பற்றை அறுத்து ஒழிக்கவும், கடவுள் ஆன்மா நான் என்ற உண்மையில் நிலைத்திருக்கவும் இலேசில் முடிகின்றதில்லை. அருள் விசார நெறியில், பிறழாது அடி மேல் அடி எடுத்து முன்னேறினால்தான், தேகப்பற்று அறும், ஆன்ம வாழ்வு வரும்.
அதில் ஆன்ம சக்தி ஓர் அளவு விசேடமாய்க் காரியப்படுவதால் அநேக சித்திச் செயல்கள், அவ்வான்மாவின் சந்நிதியில் நடைபெறும். அவை மனிதனுக்கு அற்புதங்களாகத் திகழும். அவற்றில் மயங்கி, எல்லாம் வல்ல பதி ஆற்றலை அறிந்து கொள்ளாது போய்விடக் கூடாது. தூல தேகத்தால், கர்ம சரீரத்தால் அருள் வாழ்வு பெற வேண்டுமென்பதை எப்பொழுதும் மறவாது முயன்று திருவருள் அடைந்து உய்ய வேண்டும் ஒவ்வொருவரும்.
2. சூக்கும தேகம்
தூல தேகத்தில் வாழும்போதே, அதன் தோற்ற ஆற்றல்களின் சூக்குமப் பகுதி, நுண்ணியதாய் மனோகரணங்களில் காணப்பட்டு, சில அனுபவங்களை விளைவிக்கின்றதாம். புலனோடு கூடிய மனத்திரையில் இந்த சூக்குமக் காட்சிகள் வந்து வந்து போய்க் கொண்டேயிருக்கின்றன. இது விழிப்பு நிலையில் உண்டாவது. இது போன்றே கனவினிடத்தும், அடிமனத்திரையில் சூக்குமக் காட்சிகள் உண்டாகின்றன. ஆனால் இந்நிலையில் இந்திரிய புலன்கள் ஒடுங்கிக் கிடக்கின்றனவாம். இப்புலன் ஒடுங்கிய அகநிலை உள்ளுடம்பாக உரைக்கப்படும்.
மனோவசிய ஒருமைப் பயிற்சியால், இந்தச் சூக்கும உள்ளுடம்பில் இருந்து கொண்டு, பிறர் சிந்தனை அறிதல், ஆழ்ந்த தூய காட்சி காண்டல், பிறர்க்குத் தன் ஆற்றல்களை வழங்கிச் செயல் புரிவித்தல், சூக்கும உண்மைகளை உணர்த்தல், பிறிதொரு இடத்தின் நிகழ்ச்சிகளை அப்படியே கிரகித்து பிரதிபலிக்கச் செய்தல் முதலிய யாவும் கூடும்.
“கற்கலாம் கேட்கலாம் கண்ணாரக் காணலாம்
முற்றுடம்பால் ஆய பயன்”
என்கின்றார் ஒளவை பிராட்டியார். யோக ஞானியர்கள், தூல தேக நிலை கடந்து இவ்வக உடம்பில் இருந்து கொண்டு அற்புதம் பல நிகழ்த்துகின்றார்கள். சாதாரண மக்களும், மந்திர தந்திர சாதனங்களாலும், நம்பிக்கையோடு கூடிய தீவிர பக்தி வழிபாடுகளாலும் புற உடல் நிலையை மறந்து, ஆவேசங் கொண்டவர்களாய் பல வியத்தகு செயல்கள் புரிகின்றார்கள். இவர்களில் அச்சமயத்தே உள்ளுடம்பின் ஆற்றல் வெளிப்பட்டு அவ்வச் செயல்களுக்கு ஆதாரமாய் விளங்குவதாம். ஆனால், இந்த சூக்கும சக்தியின் துணை கொண்டு மக்கள் மயங்கவும், வியந்து போற்றவும் அற்புதம் பல இயற்றலாமே ஒழிய, ஆன்மானுபவமும், ஆண்டவர் பூர்ண அருளும், இறையின்ப வாழ்வும் பெற முடியாதாம். தூல உடல் ஆற்றலை விட இச் சூக்குமமாகிய நுண்ணுடம்பின் சக்தி ஒருவகையில் அதிகமானதேயாம்.
மனிதன், தன் சூக்கும உள்ளுடம்பின் சக்தியால், பெரிய பெரிய பூதாவேசங்களையும் தனது வசப்படுத்திக் கொண்டு பெருஞ்செயல்களைப் புரியவைத்து விடுகின்றான். அப்படித் தோற்றுவிக்கப் பட்டவைகள் தாம் பழம் பெருஞ் சிற்பாலயங்கள் பலவுமாம். தற்காலம், புறப்புலனெறி அதிகம் விளைவு கொண்டு விட்டிருக்கின்ற காரணத்தால் இந்தச் சூக்கும உடம்பின் உண்மையும், ஆற்றலும், பயனும் வெளிப்பட்டு விளங்குகின்றதில்லை. மாந்தர்கட்கு அவற்றிலெல்லாம் நம்பிக்கையும் குறைந்துவிட்டது ஓரளவுக்கு.
மனித மனம் சுத்த நிலையில், கடவுள் அம்சமாக இருக்கின்ற உண்மையை யார் அறிகின்றார்கள் இன்று? சுத்த மனமே கடவுட் சூக்கும வடிவாயிருந்தும், அசுத்த ஆபாசத்தால் தன்னை அறியாது தாழ்ந்த கதியில் உழன்று கொண்டேயுள்ளதாம். புலபோக இச்சை வசத்தால் உலகில் பிழைக்கின்றவனுக்கு விஞ்ஞானத் துணையும் ஏற்பட்டு பேயாட்டம் போட உதவுகின்றதாம்! இந்த நிலையில், உள்ளுடம்பின் சூக்கும ஆற்றல் அறியப்படாமலும், அவற்றில் பெரு நம்பிக்கை உண்டாகாமலும் இருக்கின்றது கூட நன்மைக்கேயாம்.
ஏனெனில், அந்த சூக்கும ஆற்றலையும் பயன்படுத்தினால் உலகில் இன்னும் பயங்கரமான ஆபத்து நிலையே உருவாகிவிடும். திருவருள், பெருநலவாழ்வு நமக்கு வழங்கவேண்டிய, புலன் அவா அறும் வரை சூக்கும உண்மைகளை மறைத்தே வைத்திருப்பார் போலும்.
இச்சை யொடுங்கியபோது மனத்தில், அன்பு ஒளிவீசும் தருணம், சூக்கும ஆற்றலை மெய்யாக உணர்த்தி, அதற்கும் அப்பாலான காரண நிலைக்கு ஏற்றி வைப்பார் நம்மை நமது ஆண்டவர்.
உருவுலகிற்குத் துணையாய் சூக்கும சக்தி எங்கும் நிரம்பியிருக்கின்றது. இதனை விஞ்ஞான உலகம், மின்காந்த அலைகளாய்க் கண்டுள்ளதாம். இதனால் பூத, பெளதிக உண்மைகள் பல வெளிப்பட்டுள்ளன. இவை ஒன்றும் அறியா மக்கள் தங்கள் தங்கள் மனம்போல் ஏதேதோ வழிகளில் சென்று காலத்தைக் கழித்து விட்டுப் போகின்றார்கள். அது ஆண்டவர் உள்ளம் அல்ல. நல்லறிவைப் பயன்படுத்தி நல்வழியில் நடந்து நலம் பெற்று வாழவேண்டுமென்பதே கடவுட்சித்தம்.
மனிதனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற இந்த மனமாகிய சூக்குமக் கருவியே, புறத்தூல தேகத்தையும், அக ஆன்மாவையும் இணைத்துக் கொண்டுள்ள, ஒரு அருட் சூக்கும இணைப்பாகும். இது மற்ற உயிர் வர்க்கங்களுக்கு இல்லையாம். அவைகளில், இது அறியப்படாத அருளாகவே இருந்து கொண்டு நியதிப்படி ஒவ்வொன்றையும் தடைபடாமல் இயக்கிக் கொண்டிருக்கின்றதாம். ஆகையால், அந்த ஜீவராசிகள் எல்லாம் புறமாற்றம் அதிகமில்லாது, பழமையான முறையில்தான் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றனவாம். இம் மக்களினம் மட்டும் இச்சூக்கும மனத்துணையால், புரட்சிகரமாகப் புறவாழ்வை மாற்றி அமைத்துக் கொண்டேயுள்ளதாம். அருள் மயமான புரட்சியால், இம்மனம் சுத்த நிலை பெற்று நிற்கும் தறுவாயில், அகக்காரண ஆன்ம உண்மையும், ஆண்டவர் அருளும் வெளிப்பட்டு அனக நிறைவு கொண்டு வாழ உதவுவதாம்.
மனப்பக்குவம்
புலனறிவுக்கு மேற்பட்டது மனம். இது புலன் வழியிற் சுழல்வதே தன் போக்காகக் கொண்டிருந்தது முதலில். பின்னர், உடற்பற்றும், இனப்பற்றும், பாசத்தை உண்டாக்கின. அதற்குமேல் பொது நோக்கம் உண்டானபோது தயவு, இரக்கம், அன்பு என்னும் குணம் வளரத் தொடங்கினதாம். இக்குணம், வேண்டுதல் வேண்டாமை அற்ற முறையில் பெருகுகின்ற சமயம் பக்குவம் உண்டாகின்றது மொழியப்படுகின்றதாம். அன்பு நிரம்பிய ஒருமை மனத்தில், ஆண்டவர் உண்மை காணப்படுகின்றது. அந்த இடத்தில் மனம் என்னும் சூக்கும வஸ்து அருளாகவே விளங்கும். இதில் மனம், அருள் ஒளியாக மாறி நிற்கின்றதே அல்லாமல், மனமே நசிந்து ஒழிந்து போனதாகக் கொள்ளப்படாது.
கடவுள் அருட்சக்தியுணர்வே, மனிதனில் நினைப்பு, மறைப்பு எண்ணங்களாக சதா சலித்துக் கொண்டே இருக்கின்றது. சுத்த நிலையில் அருள் வண்ணமாய் நிலவும்போது, சலித்துக் கொண்டிருந்த மனம் அடியோடு ஒடுங்கிப் போகின்றதாம். இந்நிலையே மனம் இறந்த நிலையாம். உண்மையில் மனம் (கடவுள் மயமான மெய்யுணர்வு) இறந்து விடுகின்றதில்லை. சுத்த அருளாக மாறி நின்று விளங்குகின்றதேயாம். அம் மனமாகிய கருவி நசிந்துவிட்டால், கண்ணாடிபோல் உடைந்து ஒழிந்து விட்டால், ஒன்றும் விளங்காது. மனிதப் பிறவியே நஷ்டமாகிவிடும். மனம் சுத்தமாகி அருள் மயமாய் விளங்குவதே பக்குவ நிலையாம்.
மனமும் கனவும்
அருள்நிலை மாறா மனோ பக்குவமுண்டாக்கப்படவே, ஆண்டவர், நமக்கு இப்பிறப்பில், ஒவ்வொரு நொடியிலும் தக்க சூழ்நிலையை அமைத்துக் கொடுத்துக் கொண்டேயிருக்கின்றார். அபக்குவத்தால் நாம், சூழ்நிலையோடு ஒத்துக்கூடி அன்பு செய்வதைவிட்டு, மாறுபட்டு அவஸ்தைப்படுகின்றோம். இப்படிப் பட்டுப்பட்டு, நலம் பெற வேண்டி அன்பு செய்ய முனைகின்றோம். மாறாத அன்பு விளைவு கொள்ளும் போதுதான் மனம் பக்குவம் அடைந்ததாகின்றது. இது நம் தினசரி வாழ்வில், விழிப்போடு உலகிடை பழகும் போது உண்டாவது தான்.
மேல், கனவு நிலையில், சூக்கும உலகில் சில பல காட்சிகளையும் அனுபவங்களையும் பெற்று பக்குவப்பட நேருகின்றது. இக்கனவு, விழிப்புக்கண் ஏற்படுகின்ற மனோ சலனத்தின் காரணமாகவும், தேகேந்திரியச் செயல் காரணமாகவும், பழையனவாகிய புதையுற்றுக் கிடக்கும் எண்ணங்கள் காரணமாகவும், சில சமயங்களில் ஏற்படும் முன்னறிவு காரணமாகவும், பிறர் புகட்டும் செயல் காரணமாகவும் ஏற்படுகின்றதாம். இப்படி எந்த காரணத்தால் கனவு தோன்றுவதாயிருந்தாலும் மனத்தை முடிவில் சலனமறச் செய்து தயாபக்குவமுறச் செய்தற்கேயாம். இவ்வுண்மை அறிந்து திருத்திக் கொள்ளவே இக்கனவுகள் அவ்வப்போது தோற்றுவிக்கப்படுகின்றன. ஆகையால், அவற்றில் விருப்பும், வெறுப்பும், பெருமையும், அலட்சியமும் கொள்ளக்கூடாது. நல்ல பழக்க வழக்கமும், ஒழுக்கமும் கொண்டிருந்தால் நல்ல கனவுகளை தோன்றி மேலேற்றும். மற்றபடி, தீயொழுக்கமும், அவகுணச் செயல்களும் கொண்டிருந்தால், துர்ச் சொப்பனங்கள் தோன்றி அச்சமும், துன்பமும், அருவருப்புமேயுண்டாம். ஆகையால் மனத்தில் அருள் ஒளி விளங்க வாழ வாழ அதற்குத்தக கனவும் அனுகூலமாய்த் தோன்றித் துணைபுரியும்.
இதுவன்றிப் பல கனாநூலாய்ந்தும், அவற்றால் பலவாகிய பலன்களை எதிர்பார்த்துக் கொண்டும், அருள் மனம் பெறாது அலைவுறுதல் திருவுள்ளச் சம்மதம் அல்லவாம். சுத்த மனம் படைத்தவர்களுக்கு, சகல கேவலமற்ற அருள்நிலை பொருந்தியிருப்பதால், அவர்கள், எந்தக் கனவும் கண்டு மயங்கிட மாட்டார்கள். அவர்களுக்குக் கனவு நிலையே வாராது; அக விழிப்போடு எப்போதும் இருப்பார்கள். அவர்களின் காட்சி, துரியானுபவமாகவே என்றும் விளங்கும்.
உடல் உழைப்பும், மன அமைதியும் கொண்டவனுக்கு அதிகம் கனவு உண்டாகாது. நல்ல தூக்கமாகிய சுழுத்தி நிலையில், அவனது கருவி கரணங்கள் ஒடுங்கிக் கிடக்கும். மனோவிருத்தி குன்றியவர்களுக்கும், கற்பனா சக்தி குறைந்தவர்களுக்கும் அதிகம் கனவு உண்டாவதில்லை. நல்ல தூக்கத்திற்கும், விழிப்புக்கும் இடையில் மயக்க நிலையில்தான் இக்கனவுகள் தோன்றுகின்றன. இக்கனவு, சில வினாடிகளில் நின்று மறைந்த போதிலும் நெடுங்காலம் ஆனதுபோலவே உணரப்படும். இது மனத்தின் சூக்கும ஆற்றலின் ஒரு தன்மையாம்.
மேலும் உறக்கத்தின்போது, உடலின் அக, புறக்கருவிகள் விரிந்தும் தொய்ந்தும், சூக்கும மனச் சக்தியால் அதிகம் தாக்கப்பட்டும் இருக்கும். இதனால், பய உணர்ச்சி, இனக்கவர்ச்சி முதலியன தேகேந்திரியங்களை மிகவும் பாதிக்கின்றனவாம். ஆகையால், தூல தேக வாழ்விலேயே நல்லொழுக்க பழக்கத்தால், சூக்கும சக்தியை நன்கு விருத்தி செய்து வைத்துக் கொண்டால், மேல் கனவு நிலையிலும் சுழுத்தி நிலையிலும் நல் வளர்ச்சியே அடையும். அருள் ஒளி பெறும்போது துரியானுபவம் உண்டாகிட நலம் பயக்கும்.
3. காரண தேகம் அல்லது ஆன்மரூபம்
சிதைவிலா ஆன்ம சிற்றணுவாய், கடவுள் உண்மையைத் தன்னுள் மறைத்துக் வைத்துக் கொண்டிருக்கின்ற ஒன்றே, சூக்கும, தூல தேகங்கள் விளைந்தோங்கக் காரணமாயுள்ளதாம். அதனால் இதுவே காரண தேகமாகக் கூறப்படும். இவ்வான்ம அணுவில் மறைந்து நின்றாள்கின்ற பரமான்மபதி மகா காரணப் பரம்பொருளாகவும் கொள்ளப்படும். ஆன்ம பரிபாகம் உண்டாகின்றபோது, அருட்ஜோதி வெளிப்பட்டு நித்தியானந்த வாழ்வு நல்குவதாம்.
இவ்வான்ம சிற்றணுவே தன் அக வடிவமாகக் கண்டு நிற்கின்ற ஓர் ஆன்ம ரூபி, தற்சுதந்திரம் அற்ற கடைச் சிறியனாகத் தன்னையுணர்ந்திருக்கின்றான். இருந்து கொண்டு, “என்னால் ஓர் துரும்பும் எடுத்து அசைக்க முடியாதே அல்லது அசைத்து எடுக்க முடியாதே”, என்று சிறுமைப்பட்டு விண்ணப்பித்துக் கொள்ளுகின்றான். சர்வ சுதந்திரராகிய பதியின் அருளால்தான் எல்லாம் முடியும் என்பது குறிப்பாம். இக்காரண தேகநிலையைக் கண்டு அடைதல், மெய்யறிவும் மெய்யன்பும் நிரம்பிய அருள் ஒன்றினால்தான் கூடும்.
“குடம்பை தனித்து ஒழிய புட்பறந்தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு.”
(திருக்குறள்)
என்றதில், உடம்பை விட்டுச் செல்கின்ற உயிர், குடம்பையாகிய கூட்டை வறிதே கிடத்திவிட்டுச் செல்கின்ற ஒரு பறவைக்கு ஒப்பாகப் பகரப்பட்டுள்ளதாம்.
உடலைப் பிரிந்து சென்ற உயிர் அவ்வுடற் கூட்டுக்கு வருவதில்லை என்பதை யாவரும் அறிவர். ஆனால், அவ்வுயிருக்கு ஏற்பட்டிருந்த தூல உடம்பு அழிந்து விட்டாலும், சூக்கும சக்தி வடிவம் பலகாலம் உழன்று கொண்டிருப்பதும், காரண தேகத்தின் மீது வேறு தேகம் சிருஷ்டிக்கப்படுவதும், திருவருளால் அறிந்து கொள்ளுகின்றோம். காரண ஆன்மா பூரணமாகும் போதுதான், பதி வடிவுகொண்டு பரமானந்தத்தில் ஓங்குவதாம். பரமான்மாவாம், பரமஹம்சம், காரணக் குடம்பையில் இதுவரை மறைந்து பக்குவம் எதிர்பார்த்து இருந்து வந்ததாம். இப்பொழுது வெளிப்படுகின்ற அந்த அன்னப் பறவைக்கு பிறப்பு இறப்பு உண்டாகாது. இனி வேறொரு கூட்டில் நுழையாது.
ஆன்மாவுக்கு தூல சூக்கும வடிவங்கள் எல்லாம் நிலையான உறையுள் ஆகாது. அவைகள் எல்லாம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் போய்க் கொண்டேயிருக்கும். ஆனந்த வாழ்வு பெற, இவ்வான்மாவே தயா வண்ணக் காரண காரிய வடிவு ஆக வேண்டும். அகத்திலிருந்து அனகமுறுவதுதான் உண்மை நெறியேயாகும். ஈதல்லாது, புறத்திருந்து தியான பாவனாதி முறைகளால் ஏகதேச ஆன்ம சக்தியைப் பெற்று உலகை மயக்கும் அற்புத சித்திகளாடக் கூடும். அதனால் பேரின்பமுண்டாகாது. வாழ்வும் நிலைக்காதுபோம்.
புறச்சித்தி நிலை
தூல, சூக்கும, காரண தேகங்களில் ஓர் ஓர் அளவு அதிகமான ஆற்றல்கள் விளங்குகின்றன. அவற்றைத் தனித்தனி முயன்று அடைய, சில உபாய சித்தர்கள் மந்திர தந்திர மார்க்கங்களை வகுத்து அளித்திருக்கின்றார்கள்.
அவைகள்: நமசிவாய, சிவாயநம, சிவயவசி எனப்படும். இவை தூல, சூக்கும, காரணக் கருத்துக்களைக் கொண்டு, சொல்லாலும், சிந்தனையாலும், உள்ளொன்றிய அனுபவத்தாலும் பயன் கொள்ளச் செய்துள்ளனர். இப்பயன்கள் எல்லாம் சுத்த சன்மார்க்கி விரும்புவதில்லை. இவன் திருவருளையே லட்சியமாய்க் கொண்டு, தூல சூக்கும தேகநிலைகளைக் கடந்து காரண ஆன்மவடிவில் இருந்து கொண்டு, அருள் அனுபவ வாழ்வு வாழ்வான்.
திரிதேக சித்தி நிலை
மேற்குறித்த சுத்த சன்மார்க்கனுக்கு, காரண, சூக்கும, தூல தேகங்கள் அருள் ஒளிகொண்டு அமைக்கப்படுகின்றன. சூக்குமத்தில் இருந்து, அகத்தில் காரண ஞான வடிவையும், புறத்தில் நிமல சுத்த வடிவையும் ஏற்றவன் ஆகிவிடுவான். அவ்விரண்டுமே சிற்சபை, பொற்சபை என மொழியப்படும். அவ்வருளாளனுக்கு இவ்விரு சபைகளும் சொந்தமாக வழங்கப்பட்டு விடுவதால், தன் விழைவின் வண்ணம் எவ்விடத்தும் எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தைப் பரப்பிக் கொண்டிருப்பான். இவன் இருக்கின்றது தயா வண்ணப் பிரணவ தேக நிலையாம்.
இந்த முத்தேகங்களும் ஒரு சுத்த சன்மார்க்கிக்கு உள்ளன என்றால், அவை மூன்றும் வேறுவேறான தனிவடிவங்கள் அல்லவாம். ஒரு தேக வடிவிலேயே தோற்றி நின்றும், அம் முந்நிலை அனுபவங்களையும் பெற்று வாழ்கின்றவனே என்பது கருத்தாம். இத் திரிதேக சித்தியின் அனுபவம் சுத்த சன்மார்க்கத்தில் தான் வெளிப்பட்டு நிலவும்.
5. ஆவிகளின் உண்மை
முன் தலைப்பில் கூறப்பட்ட சூக்கும தேகமும், அதன் சக்திச் செயல்களும் கொண்டு விளங்கும் நுண் பூத வடிவங்களே இந்த ஆவிகளாகும். இவற்றினிடத்து சிலபல குறைகளும், ஒரு சில விசேடங்களும் உள்ளன. அவற்றால் தீங்கும் நன்மையும் உண்டாகலாம். அருள் நெறிக்கு அவை ஒன்றும் பயன்படாவாம். ஆதலின் அவற்றை லட்சியம் செய்ய வேண்டியதில்லை. எனினும் அவற்றின் உண்மையை உள்ளவாறு தெரிந்து கொண்டு விட்டால், சந்தேகங்கள் அறும். அவைகளில் நாட்டமும் செல்லாது.
ஆவிகளின் படைப்பு
கண்கூடாகக் காண்கின்ற இவ்வுலகத்தில், எத்தனையோ மக்கள்கள் தினமும் தோன்றிக் கொண்டும், மறைந்து கொண்டும் இருக்கின்றார்கள். மறைக்கின்றவர்களின் தூல உடம்புகள் விரைவில் சிதைந்து, அழிந்து போகின்றன என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆனாலும், அவ்வுடம்பினுள் உடம்பாய் சூக்குமமாய் இருந்த ஆவி வடிவம், சூக்கும சக்தியால் நிலைத்துப் பலகாலம் உலவிக் கொண்டிருப்பதாம். தூல வாழ்வில் கொண்டிருந்த குணச் செயல்களும், ஆற்றல்களும், தோற்றமுமே அவ்வாவி வடிவங்களிலும் விளங்கும். எனினும், தூலதேக ஆற்றலை விட மனோகரண சக்தி மிக்குடைத்தாதலின் இந்த சூக்கும தேகத்தின் ஆற்றல் ஒருவகையில் அதிகமாகும். தூல நிலையில் செல்ல முடியாத இடத்திற்கும், முடிக்கக் கூடாத செயலுக்கும், செல்லவும் ஆற்றவும் முடிந்து விடுகின்றதாம்.
நற்குண செயலோடு வாழ்ந்து மரித்தவர்களின் ஆவி பிறர்க்குத் துணை புரிய முடியும். அப்படி இல்லாது தீய வழியில் கொடுங்குணச் செயலோடிருந்து மாண்டவர்களின் ஆவி பிறருக்கு தீமையே புரியும். காலம் செல்லச் செல்ல இவ்வாவி வடிவங்கள் ஆற்றல் குன்றி மங்கி மறையும். ஆனால் இக்கால எல்லை, புற ஆயுட் காலத்தை விட பல மடங்கு அதிகமாம்.
மேலும், இவைகள் வாழும் நிலைகள், புறத்தே எங்கேயோ தனிப்பட்ட ஓர் உலகமாக இல்லை. அவை நம் உயிர் உணர்வில் ஒடுங்கிக் கிடக்கும் மனோகரண அகநிலைகளில் சூக்குமமாகவே அமைந்துள்ளனவாம். இயற்கை முறையாலும், சில யோக சாதனா முறையாலும் இந்த சூக்கும ஆற்றல் எழுப்பப்படுகின்றன. அப்போது அவ் வாற்றலே சூக்கும உருக்கொண்டு கனவிலும், நனவிலும் கூடத்தோற்றமாம். அச்சக்தியால் சில புறச்செயல்கள்கூட அசாதாரணமாய் ஆற்றிவிட முடியும். அந்த ஆவி வடிவங்கள் பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் அடி மனத்திருந்து வெளிப்படுவது சாத்தியமேயாம்.
இந்த ஆவி வடிவங்களில், சூக்கும சக்தி இருப்பது உண்மைதான். என்றாலும், அது பெருமை மிக்கது அல்ல. அருள் ஆற்றல் கொண்டதுமல்ல. ஆண்டவர் சக்தியின் அற்பக் கூற்றேயாகும். ஆகையால் அதனிடத்து நம்பிக்கையும் பற்றும் வைக்கக்கூடாது. அதனை வியந்து இச்சைப் பட்டு நின்றால், நாம் ஆண்டவர் அருளுக்குப் பாத்திரமாக முடியாது போம். இதுகாறும் தோன்றி மறைந்துபோன எண்ணிறந்த கோடி மக்களின் ஆவிகளும், அவற்றின் ஆற்றல்களும் செயல்களும் நம் அருட்பெரும்பதியின்கண் அருகி அடங்கியே கிடக்கின்றனவாம். அதனால், ஆண்டவர் அருளைப் பெற்றால், பிற எந்த ஆவியினாலும் பெறற்கரிய பேருதவியைப் பெற்றுக் கொள்ளலாம்
பூதாவேசங்களின் உண்மை
பேராற்றல் கொண்டிருந்தது மறைந்து போன ஆவிகளின் சூக்கும சக்திகள் யோகக் காட்சியில் வெளிப்பட்டு பெருஞ்செயல்கள் புரிய உதவுகின்றனவாம். சிற்ப சித்தர்கள் இந்த பூதாவேசங்களின் உதவியால் பெரிய பெரிய கோயில்களை நிர்மாணித்து, அற்புத சக்திகள் விளங்க விக்கிரகங்களை நிலை பெறுத்தியுள்ளார்கள். அவ்விடங்களில் சித்தர்களின் ஆற்றலும், பூதாவேசங்களின் பெருஞ்செயல் திறனும், கடவுளின் அருள் உண்மையும் ஓர்ந்து கொள்ளலாம்.
மனிதப் பிறப்பு அடைந்துள்ள நாம், அருட்பெருஞ்ஜோதி பதியின் உண்மையை யோர்ந்து அடைந்து, மேலான இறவா நிலைப்பேறு எய்த வேண்டுவதே திருவுள்ளமாக இருக்கின்றது. அவருடைய ஆணைப்படி நமக்கு உதவிகள் சூழ்நிலைகளினின்று அப்போதைக்கப்போது கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. நமக்கு, உண்மையில் தேவையில்லாதனவற்றையும், அருள் முன்னேற்றத்திற்கு தடையானவற்றையும் நம் பதி ஆணை, கிட்டத்தில் அணுகவொட்டாது விலக்கி விடுகின்றதாம்.
ஆகையால், நாம் தயாவொழுக்கம் பூண்டு உலகியலை நடத்திக் கொண்டு வந்தால், எந்த ஒரு பூதாவேசமோ, ஆவியோ தோன்றவோ, தோன்றித் தீங்கு விளைவிக்கவோ மாட்டாவாம். நல்ல ஆவிகள் உதவ வரினும் கூட, நாம் தயவோடு மறுத்துவிட்டு, நம் தயாபெருஞ்ஜோதி பதியின் தயவு ஒன்றையே நாடி நின்றால் பெருநலம் உண்டாகும். நாம் நமது தனித்தலைமைப் பெரும் பதியாகிய தயாபெருஞ்ஜோதியை அடுத்துள்ளோம்; ஆதலின், நமக்குப் பிறரிடத்தேயிருந்து பெறவேண்டியது ஒன்று மில்லையாம். நம் தயாவள்ளலின் சேர்க்கையால், எவர்க்கும் வேண்டுவனவெல்லாம் வழங்கிக் கொண்டிருப்போம்.
பக்குவ ஆவிகள், அபக்குவ ஆவிகள்
இயற்கையாக, பிணி, மூப்பு, சாக்காட்டால் தேகத்தை தணிக்க விட்டுச் செல்லுகின்ற ஆவிகள், சூக்கும பூதாகாச வடிவாய் இருந்து, ஒரு சிலரின் மனோகரண ஆகாசத்தில் தோன்றி சில சமயம் விளங்கும். அதன் உதவியை வேண்டினால், அதுவும் பிரியப்பட்டால் ஓரளவு தன்னால் இயன்ற உதவியைச் செய்யும்.
இந்த ஆவிவடிவங்கள், பொதுவாக மனோ பக்குவமுடைய ஒருவரின் உயிருடம்பைக் கருவியாக (Medium) கொண்டு நின்று உதவும். பிறர் துணையோடு மற்றொரு புறத்துணைக் கருவி (Planchette) மூலமும் நமக்கு, கேள்விக்குப் பதிலும் கொடுக்கும். அன்றியும், சூக்கும வடிவத்தினின்றே ஒரு சில செயல் புரியும் ஆற்றலும் இந்த ஆவி வடிவங்களுக்கு ஏற்படுவது உண்டு. இவையெல்லாம் பொதுமக்களுக்கு வியப்பையும் நம்பிக்கையையும் உண்டுபண்ணி அந்த ஆவிகளினிடம் ஒருவித பயபக்தியோடு கூடிய பற்றுதலை ஏற்படுத்திவிடும். அப்படி, அவற்றினிடத்து பற்று கொண்டுவிட்டால், அவற்றுக்கெல்லாம் காரணமாயும், அதீதமாயும், எல்லாம் வல்லதாயும் இருந்து ஆள்கின்ற உண்மை ஆண்டவரிடத்து நம்பிக்கையும் பற்றுதலும் உண்டாகாது போய்விடும். அது பெரும் நஷ்டமேயாம்.
மேற்குறித்த ஆவிகளினிடத்தும், அவற்றின் ஆற்றல்களிலும் பற்றுமிகக் கொண்டு, தம் உடல், பொருள், ஆவிகளையெல்லாம் வீணாக்கிக் கொண்டிருக்கின்றவர்கள் பலர் நம் நாட்டிலும் பிற நாடுகளிலும் இருந்து வருகின்றார்கள். அவர்கள், அந்த ஆவிகளின் தொடர்பு கொண்டிருப்பதால் ஏதோ தம் வாழ்வில் ஒரு தெய்வீகப் பேறு அடைந்துவிட்டிருப்பதாகக் கருதிக்கொண்டு இறுமாந்துள்ளனர். முன்னோர் ஆவிகளின் ஆலோசனை யுதவியாலும், எச்சரிக்கையாலும் ஓர் ஒரு சமயம் சில ஆபத்து முதலியவைகளினின்று காப்பாற்றப் படுகின்றார்கள். அப்படியிருந்தும், தவிர்க்கப்பட முடியாத ஊழ்வலியால், எந்த ஆவித்துணையும் சிறிதும் பயன்படாது போகவும் காண்கின்றோம்.
சிலர் இறக்கும் தறுவாயில் இருக்கும் போது, அவர்களுள் மறைந்து கிடந்த முன்னோர் ஆவிகள் அவர்களுக்கு முன்தோன்றி தம் நிலைக்கு அழைத்துக் கொள்ளவும் செய்யும். அவ்வாவிகளின் துணையும் தயவும் கொண்டு சில தந்திர முறையால் ஒருவனது ஆயுளையும்கூட அதிகப்படுத்திக் கொள்ளவும் கூடும். ஒருவனுக்கு ஆயுள், சிருஷ்டி ஆரம்பத்திலேயே விதிக்கப்பட்டு விடுவதல்லவா? அதனை எவராலும் மாற்ற முடியுமா? என்று கேட்கப்படலாம். ‘சத்விசாரத்தால்’ தான் இதற்கு உண்மை காண வேண்டும். கண்டால் இதன் சந்தேகங்கள் எல்லாம் ஒழியும்.
கடவுள் ஒர் ஆன்மாவுக்கு ஜீவதேகத்தைக் கொடுத்து காத்துக் கொண்டிருக்கின்றார். அவ்வான்மா பரிபாகமுற்றுத் திருவருளாலே தன்னைத்தான் அறிந்து தன்னுண்மையாகிய கடவுள்மய வாழ்வு ஏற்கும் வரை தேகபோக வாழ்வில் செலுத்திக் கொண்டிருப்பதே அவருடைய திருச்செயல் அல்லது அருள் நியதியாக இருக்கின்றது. இம்முடிவெய்து முன் பல முறையும், பல வழிகளிலும் தவறநேரும், அவற்றால் எல்லாம் கைவிட்டுவிடாது திருவுள்ளம் இரங்கி மேலும் மேலும் இவ்வுலகிடை தோற்றுவித்து ஒவ்வொருவரையும் வாழ்வித்துக் கொண்டேயுள்ளார்.
ஆகையால், எவரேனும், அருள் நன்முயற்சி செய்து மேலேற விழைந்தால் உடனே கரங்கொடுத்து உதவவே காத்திருக்கின்றார் என அறிய வேண்டும். அம்முயற்சி உடையார், திருவருளால் உயிர் விளக்கம் அதிகம் கிடைக்கப்பெற்று, முன் விதிக்கப்பட்டிருந்த ஆயுள் எல்லையையும் கடந்து வாழ வல்லவர்களாவார்கள். முடிவாக அவர்களுடைய அகங்கார போதமொழிந்து அருள் வண்ண வாழ்வு ஏற்படும்போது உடலுக்கு ஏற்பட்டிருந்த ஆயுள் எல்லையே முற்றும் அழிக்கப்பட்டுவிடும். அப்போது முதல், அவ்வான்மாக்கள் அனக நிறைவு கொண்டு என்றும் நிலவும். இது சுத்த சன்மார்க்கர் உறுகின்ற அழியா வாழ்க்கை நிலையாம்.
இதனால், ஒரு நல்ல ஆவியின் உற்ற துணையாலோ, பிற நன்முயற்சிகளாலோ ஒருவனுடைய ஆயுளைக் குறுக்கிக்கொள்ளவும் நீட்டிக் கொள்ளவும் முடியும் எனத் தெரிந்திருத்தல் நலமாம். ஆனாலும், இப்படி ஒருவனுடைய ஆயுளைக் குறைத்து முடித்துக் கொள்ளுவதாலோ, பெருக்கி வளர்த்துக் கொள்ளுவதாலோ, பேரின்ப நிலை அடைந்து விடார்கள். நமது பதி யார், எதையும் ஒருமையோடு, விடாப்பிடியாக, தவமுயற்சி செய்து வேண்டுவாராயின் அவருக்கு அதனைத் தந்தே விடுவார். அப்படிக் கொடுத்து விட்ட போதிலும் கூட அது, அருள் நிலைக்கேற உதவாத ஒன்றாயின் அதனை அவ்வழியிற் சென்றே மாறாட்டஞ் செய்து கவிழ்த்து விடுவார். எப்படியும் தன் திருவுள்ளப்படி எவரையும் முடிவில் தன் வழிக்கே வரச்செய்து கொள்ளுவார். ஆகையால், அருள் நியதி, விதிமுறை, ஊழ்செயல் என்பதெல்லாம் கடவுளரின் பேரருள் அடைவிக்கும் ஒரே குறிக்கோளுடைய தேயாகும்.
‘முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார்’ என்பது பழமொழி. “ஊழையும் உப்பக்கம் காண்பார், உலைவின்றி, தாழா து(உ)ஞற்றுபவர்”என்றதால், இடைவிடாது அருள் நன்முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் தாழாது உஞற்றுபவர்கள் தாம் விதியை வெல்லும் மதியுடையவர்களளைவார்கள். இதனால், ஏகதேச ஜீவதயா நன்முயற்சி மேற்கொண்டவர்கள், தங்கள் துன்பங்களையும், கேடுகளையும் சற்று விலக்கிக் கொண்டு வள வாழ்வோடு நீடித்திருப்பார்கள்.
ஆவித்துணையும் கூட இவ்வருள் வாழ்வுக்குப் பயன்படுத்திக் கொள்ளக் கூடுமானால் நல்லதேயாம். மற்றபடி முன்னோர்களின் நல்லாவித்துணை கொண்டும் மருள் உலக வாழ்வில் மயங்கி முயங்கிக் கிடந்து உழன்று கொண்டிருத்தல் அறியாமையேயாம்.
ஆவித்துணையால் மாயாஜாலங்கள் செய்து கொண்டிருத்தல், அருள்நெறிக்கு முற்றிலும் முரணானதாகும். காற்று, கறுப்பு, குறளி, சாத்தான், எட்சணி முதலியவாகக் கூறப்படும். பைசாச பூதாவேச ஆவிகளைத் தம்வசப்படுத்திக் கொள்ள அநேக கொடிய தந்திர மந்திர முறைகளைக் கையாளுகின்றவர்கள் அதிக பிரயாசைப்பட்டு ஒரு சில சித்திகளை அடைகின்றார்கள். அச்சித்திகளால் உலகை மயக்கிப் பிழைத்து முடிவில் வீண் போகின்றார்கள். அவர்களுக்கு உதவின ஆவிகள், அவர்களையே முடிவில் தம்மோடு அழைத்துக் கொண்டுவிடுகின்றனவாம். இந்த மாயாஜால மந்திர மார்க்கம், முன்பு அதிகம் பயிலப்பட்டு வந்தது. உலகமும் அன்று அதிகம் மதித்திருந்தது. அக்காலம் இப்பொழுது முடிந்துவிட்டது.
அருள்நிறை சன்மார்க்கம் உதயமாகி விட்டதால் அந்தப் பழைய இருள் நெறிகள் விரைந்து விரைந்து ஒழிந்து கொண்டுள்ளனவாம். அந்த ஆவிகளும் மீளாநெறியிற் சென்று மறைந்தே போய்க் கொண்டிருக்கின்றனவாம். இனி, அவற்றை நன்மார்க்கிகள் எவரும் விரும்ப மாட்டார்கள். ஒரு சில துன்மார்க்கிகள் விரும்பி முயன்றாலும்கூட இனி அவை சித்திக்க மாட்டாது. இது திருஅருள் ஆணை.
பேயாட்டல்.
மக்களில் சிலர் தற்கொலையாலும், கொலையாலும், விபத்துக்களாலும் அகால மரணம் அடைந்துவிடுகின்றார்கள். இம்மாதிரி இறப்புண்டாகாதிருந்தால் இவர்கள் குறிப்பிட்ட காலம் வரை இருந்து, இறப்படைபவர்களேயாவர். அப்படி ஏற்படாது இடைக்காலத்தில் இச்சம்பவம் நேர்ந்து விடுவதால், அந்த தேகங்களிலிருந்து வலிய அப்புறப்படுத்தப் படுகின்ற ஆவிவடிவங்கள் நுண்பூதத் தோற்றத்தோடு ஊசலாடிக் கொண்டிருக்கும். இவைகளிலும் நன் குண செயலுடையாரின் ஆவி வெண்ணிறத்தோடு, ஒளி ஒலி உலகிலும் உழன்று கொண்டிருக்க, மற்ற தீயோராவிகள் காரிருளுலகில் கவலை வாழ்விற் சுழன்று கொண்டிருக்கும். இந்தத் துன்மரண ஆவிகள், முன் தேகத்திற்கு விதிக்கப்பட்டிருந்த ஆயுள் காலம் வரை இப்படி உழன்று கொண்டிருந்துவிட்டுக் கரைந்து சென்று மறைவுறும். இந்த இடைக்காலப் பகுதியில்தான், இந்த ஆவிகள், திட மனோகரணமில்லாத மக்களை, முக்கியமாகப் பெண்களையும், அருள் ஒழுக்கம் பூணாத சாதகர்களையும் வந்து பற்றக்கூடும்.
இவர்களுடைய மனோகரணத்தில் இவ்வாவிகள் தாக்குவதால், இவர்கள் தம் சுய உணர்வு நிலையை இழந்து விடுகின்றார்கள். அப்போது அவ்வாவிகளின் செயல்தான் வெளிப்படுகின்றதாம். இது மிகச் சிற்றளவில் இருக்கும் போது மனோ பேதன நோயை மூளையில் தோற்றுவித்து விடுகின்றதாம். இந்நோய் தவிர்க்கச் செய்யும் தந்திர முறையே பேயாட்டல் ஆகும். மூளை நரம்புகளுக்கு அதிர்ச்சி உண்டு பண்ணத் தக்க, ஒலி, ஒளி, மணம், பரிசம் முதலியன கொண்டு தலையைச் சுழற்றி ஆட்டவிடுவதால், அந்த ஆவேசங்களின் செயல் அடங்கும் நீக்கவும்படும்.
இந்நோய் போக்க, ஒரு சில சிற்பாலயங்களில் யந்திர மந்திர பீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்விடங்களில் குறிப்பிட்ட காலங்களில் பக்தி சிரத்தையோடு சென்று தவமிருந்து வேண்டிக் கொண்டால் எளிதில் தீரும் என்ப. இவற்றில் நம்பிக்கை குறைந்து போன இக்காலத்தில், பயனும் ஏற்படுகின்றதில்லை.
நமது பரம பதியின் திருவடி நிலையைக் கண்டு பற்றிக் கொள்ளுவோர்க்கு, இவ்வாவிகளின் செயல் ஒன்றும் நெருங்காவாம். சுந்தரச் சோதி துலங்கும் மந்திரச் சக்கரமாகிய ஆன்ம பீடத்திருப்போரை எந்த ஆவியும் நெருங்க முடியாது. எல்லாம் கைகட்டி, வாய் பொத்தி, முன்நின்று ஏவல் செய்யும் என்பது வள்ளலாணையாம்
ஆவிகளின் தோற்றம்
ஆவிகள் எப்படி தூலத்திலிருந்து பிரிந்து வெளிப்படுகின்றன என்பதும், அவை அங்ஙனம் வெளிப்பட்ட போது எவ் வண்ணம் காட்சியாகின்றன என்றும் சிறிது விளக்கப்படுகின்றது ஈண்டு.
இயற்கை மரணத்தில், ஜீவசக்தி உள்ளொடுங்க, பிராணாதி தசவாயுக்கள், உடற்கூறுகளின் பல பிரிவுகளினின்று ஒவ்வொன்றாக வெளியேறுகின்றன. மூன்றாம் தினம்தான் முற்றும் வெளியேறி விடுகின்றதாம். மேல், தேகம் வெடித்து சிதைந்து கெடும். அதுவரை, அவ்வுடம்பினின்று வெளியேறுகின்ற ஆவிவடிவம் பூரணமுறாது, அத்தேகத்தை அடுத்தே இருக்கும். ஆகையால், இறந்தவர்களை நல்ல முறையில் அடக்கம் செய்தல் நன்றென்ப.
அப்படி அல்லாது உடனே தேகத்தை எரித்து விடுவதால் அவ்வாவி பலாத்காரமாக வெளியேற்றப்பட்டு குறைபட்டு உழன்றியங்குமாம். அந்த ஆவிக்கு பங்கமும், இழிவும் நேரக்கூடாது என்பது முன்னோர் விழைவு. ஏனெனில், ஆவி வடிவில் இருந்து வாழ்வது பரம இன்பவாழ்வாகக் கருதினர்.
ஏசு பெருமான் சிலுவையில் மாண்டு, புதையுற்று மூன்றாம் நாள் வெளிப்பட்டார் என்பது, இந்த ஆவிவடிவக் காட்சியாகக் கொள்ளுவார்கள் உண்மை அறிந்தோர். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பவை, காரணக் கடவுள் வடிவையும், தூல கிறிஸ்து ரூபத்தையும், சூக்கும ஆவி வடிவத்தையும் சுட்டுவனவாம். மூன்றாம் நாள் ஆவி வடிவம் வெளிப்படுவதே உயிர்த்தெழுந்ததாகக் கூறப்படுவது என்ப. சாதாரணமாக ஒவ்வொருவரின் ஆவியுருவமும் இப்படி மூன்றாம் நாள் வெளியிற் செல்வது இயற்கையே. விசேஷ தெய்வாம்ச மனிதனாக போற்றப்படும் ஒருவரின், இந்த ஆவி ரூப வெளிப்பாடு தெய்வீகம் விளங்க போற்றிக் கொள்ளல் சகஜமேயன்றோ!
மற்றபடி அவர்தம் தூல உடல் பிறர் அறியக் கூடாது மறைந்து போனதும் ஒரு தெய்வீக நிகழ்ச்சியாகவே கொள்ளப்படும். ஆண்டவர் உண்மையைக் கண்டு, அன்பு வண்ணமாய்த் திகழ்ந்திருந்த அவர், தன் அன்பு, அறிவு, அனுபவங்களை ஏகதேசம் பிறர்க்கும் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள் இந்த ஆவி வடிவுடன் இருந்து கொண்டுதான். இப்படித்தான் உதவுகின்றனர் மற்ற மற்ற மார்க்கத் தலைவர்களும்கூட. இவர்களின் துணைகொண்டு, இவர்களுக்கெல்லாம் காரணமாயும், பூரணமாயும், அன்றும், இன்றும், என்றும் விளங்குகின்ற அருட்பெரும் பதியைக் கண்டு அருள் அடைந்து வாழ வேண்டுவதே அவ்வொவ்வொரு தலைவரின் விருப்பமும், நமது ஒவ்வொருவரின் கடமையும், ஆண்டவர் ஆணையுமாகும்.
ஆவி வழிபாடு
உண்மை ஆண்டவர் வழிபாடாற்ற வேண்டியே, இந்த ஆவிகளின் துணையை, வேண்டுமானால் நாடலாமே ஒழிய, அந்த ஆவிகளையே கதி எனக்கருதி, சரணடைந்து, வழிபாடு செய்து கொண்டிருத்தல் உயர் செயலாகாது. அவ்வாவிகளில் இரு பிரிவுகள் கொள்ளப்படுகின்றன. ஒன்று தென்புலத்தார். மற்றொன்று தெய்வம் ஆம்.
தென்புலத்தார் - இவர்கள் பிதிரர் அதாவது, முற்சந்ததியாரின் ஆவி வடிவங்கள். ஒவ்வொரு மனிதனுக்கும், தூலதேகம் வெளிப்பார்வையிலும், சூக்கும வடிவம் உள்மறைந்தும் இருப்பது அறிவோம். இந்தச் சூக்கும வடிவமே ஆதி, பூர்வம் என்றும், தூல வடிவம் அந்தம் அல்லது உத்தர வடிவம் என்றும் கொள்ளப்படும். இந்த பூர்வ உத்தரமே நம் நிலவுலகப் படைப்பில் தென்பகுதியும் வடபகுதியுமாக ஆகியுள்ளன. ஆகவே தென்புலத்தார் எனக் குறிக்கப்படும் இந்த ஆவிரூபிகள் பிரமனால் முதலில் அல்லது ஆதியில் படைக்கப்பட்டவர்களாக அணிந்து கூறப்பட்டனவாம். ஆதலின், மக்கள் இந்த ஆவி வடிவங்களைப் போற்றிப் பணிந்து வழிபட்டால் நலம் பெறலாம் எனக் கொண்டு வலியுறுத்தினர். இம்முறையில் தான் இப்பிதிரர் ஆவி வழிபாடு உலகில் பல பாகங்களிலும் நெடுங்காலமாக வழங்கப்பட்டு வந்துள்ளதாம்.
இவ்வுண்மையைச் சரியாய் அறிந்து கொள்ளாமலும், புற விஞ்ஞான மோகத்தாலும் அந்த ஆவி வழிபாட்டில் பற்று குன்றி கைவிடப்பட்டுக் கொண்டு வருகின்றது. மற்றொரு புறத்தில் சுத்த சன்மார்க்க உண்மை நெறி தோன்றிப் பரவிக் கொண்டுள்ள காரணத்தாலும், ஆவி வழிபாட்டு முறை மறைந்து ஒழிய உள்ளதாம்.
தெய்வம்
தென்புலத்தார் பொதுவாக ஆவிரூபிகள் எனக் கொண்டு உரைக்கப்பட்டது அறிந்தோம். அவ்வாவிகளின் சாதாரண இயல், செயல்களுக்கும் அதிகமான, பேராற்றலும் பெருஞ்செயலும் கொண்டு விளங்கின சத்துக்களின் ஆவி வடிவங்கள், கற்பனா ரூபங்கள்தாம் தெய்வங்களாகக் கொள்ளப்படுவன. தயவு ஆற்றல் மிகக் கொண்ட சுத்த ஆவி வடிவங்களே தெய்வமாக வழிபடத் தக்கவையாம். மற்றவைகளை அறிவும் அன்பும் பக்குவமுறாதவர்கள் போற்றும் சிறு தெய்வங்களாக உரைப்பர்.
முதலில் பிதிரராகிய தென்புலத்தோரை வழிபட்டு, அத்துணையோடு தெய்வங்களையும் வழிபடுவதால், மேலான பயன்களை அடையலாமென்பது ஆன்றோர் கொள்கையாம். ஆனால், இப்பொழுது தென்புலத்தார், தெய்வம் எல்லாம், சித்திர ஓவிய சிற்ப வடிவங்களில் கண்டு, விருப்பு வெறுப்போடு கூடிய வந்தனை வழிபாடுகளை செய்யப்பட்டு வருகின்றன காண்கின்றோம். இது பகுத்தறிவு வாதிகள் என்று கூறிக்கொள்ளுகின்ற உண்மை அறியாதவர்களால் புறக்கணிக்கப்பட்டு வருவனவும் காண்கின்றோம்.
இத்தருணம் அருள் உண்மை வெளிப்படுகின்றதால், எல்லாம் வல்ல ஆண்டவரை அருட்பெருஞ்ஜோதி வடிவில் நேரடியாகக் கண்டுகொண்டு, எவ்விடத்தும், எக்காலத்தும், அருள் வழிபாடு இயற்றிக் கொண்டு ஆனந்தமாக வாழ்வார்கள் ஒவ்வொருவரும். இது திருவுள்ளச் சம்மதமாம்.
Write a comment