Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
அருட்பெருஞ்ஜோதி தயவு (பகுதி - 2)

அருட்பெருஞ் ஜோதி - தயவு
சுவாமி சரவணானந்தா
வணக்கமும் வாழ்வும்
நித்தியானந்த நிறை வாழ்வு பெற்று என்றும் நிலவற்கே மனிதப் பிறப்பு, திருவருளால் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இவ்வுண்மையை அறியவும், அனுபவத்தில் அடையப் பெறவும் எவ்வளவு நெடுங்காலம் ஆகியுள்ளது! வேறு எந்த உயிரினத்திற்கும் கிடைக்கப் பெறாத மனம் என்னும் பகுத்தறிவு, மக்கள் இனத்திற்கே, படைப்பின் தொடக்க முதல் வழங்கித், தொடர்ந்து வளர்க்கப் பெற்று வந்துள்ளது. பிற உயிரினங்களில் எல்லாம், அவற்றிற்கு ஏற்பட்ட புலன் உணர்வும், சுபாவ இயல்பும், வாழ்வு எல்லையும் கடவாது தோன்றி மறைகின்றனவாம்.
மக்களினம் ஒன்றுக்கே, எல்லையற்ற இறைமய, இயல் உண்மை அறிவு இன்ப வாழ்வையுணர்ந்து பெறற்கான, ஒப்பற்ற அருள் ஞான மனம், ஆன்ம வித்தின் அங்குரமாக, ஆதியிலேயே அமைத்து வெளியாக்கப் பெற்றுள்ளதாம். அந்த ஆன்ம வித்தின் முளைதான், பிரபஞ்ச தோற்றத்திற்கு எவ்வளவோ காலத்திற்குப் பின்னர் தான் உலகொளி கண்டுள்ளதாம். அவ்விதை முளைத்துச் சிறு செடியாகி வளர்ந்து பெரு மரமாகிப் பூத்து அரும்பவே அளவிறந்த காலம் கடந்துள்ளன! இவ்வக மலர் அரும்பிய காலம், மனிதன் தன் இறை இயல் உண்மையை யுணரும் நிலை அடைந்தான். அப்போது, புறத்தோடி அலைந்து உண்மை காணாது உழன்ற மனம், உட் குவிந்து ஆழ்ந்து சென்று, அருள் மயமான போதுதான், தனது ஆன்மக் கடவுள் உண்மையைக் கண்டு கொண்டான் அந்த ஆன்ம மனிதன்.
இந்தக் கடவுளான்ம, யோக ஞானக் காட்சியால், எவ்வளவோ, பெறலரும் சக்தி சித்திகளைப் பெற்றும், பேரின்பிலே திளைத்து பல காலம் களித்து மகிழ்ந்து இருந்தும், முடிவில், உடலையும், உயிரையும் விட்டுப் பிரிந்து, ஆன்ம விதையில் ஒடுங்கி வாழ்வற்றுத்தான் போனான் இதுதான் ஓர் ஆன்மாவுக்கு அந்தம், ஆனந்தம் என்று எண்ணி ஏமாந்தே இருந்தான் இவ்வளவு காலம். உண்மையில், கடவுளும் ஆன்மாவும் இரண்டற்ற ஒன்றே எனவும், அது நித்திய நிறைவுடையது எனவும், அதனால், அவ்வுண்மையைக் கண்டு உணர்ந்த மனிதன், அந்நிலையின் நீங்காது இருந்து கொண்டு வாழ்ந்து வருவதே தனது ஆன்மானந்தமாகும் என்பதும் அறிந்து கொள்ளப்பட்டுள்ளது இன்று!
கடவுளே தன் முழு உண்மையும் வெளிப்படுத்திக் கொண்டு, மனித வடிவில் என்றும் வாழ்ந்து கொண்டிருத்தற் பொருட்டே, பிரபஞ்சக் காரியமெல்லாம் அன்று தொட்டு நடத்தப் பெற்று வருகின்றன. கடவுள் பெரு நிலையே ஒவ்வொரு ஆன்மச் சிற்றணுவிலும் பூரணமாய் இருந்து கொண்டு, ஒரு குறிப்பிட்ட ஆன்மாவைச் சூழப் பக்குவ மனித ஜீவ தேகம் தோன்றி விளங்கும் போது, அக்கடவுளே மனிதனாகக் கண்டு கொள்ளப்படுகின்றது. ஒன்றான கடவுள் தானே குறிப்பிட்ட ஆன்மாவில் அனுபவப் படுகின்றதோடு, எங்கும் தானாய் உள்நின்று அது அதுவாய் விளங்குகின்றதையும் உணரும் காரணத்தால், தான் ஒருவனே, தனக்கு அயலாய் வேறு ஒன்று இல்லாததாய், அயலறியா ஒருவனாய் அறிந்து கொள்ளுகின்றான் இதுதான் முடிந்த கடவுளான்ம அனுபவ நிலையாகும். இதனை எப்படி யுணர்ந்தான் முதலிலே?
மன அறிவு சலனமற்று, உண்மையை உணரவேண்டும் என்ற தீவிர நாட்டத்தோடு, இருகட்புருவ நடுவிருந்து, அக நோக்கி இருந்த தருணம், எங்குநிறை கடவுள் பெருஞ்ஜோதியே, ஒருவனது ஆன்ம சிற்ஜோதியாய், தயா ஒளி விளக்காய், சிரநடு திகழக்கண்டான். இதுவே ஞான சித்தர் கண்ட கடவுட்ஜோதிக் காட்சியாம். இதனிடத்து ஒருமையாற் கூடி, பக்தியாற்படிந்து, சித்தாய்ப் பெற்ற சக்தியால், அற்புதானந்த வாழ்வாற் பல காலம் இருந்து, உயிர் உடம்பு நீங்கியபோது, அனுபவமும் வாழ்வும் கெட்டு சூனியத்தில் மறைந்துவிட்டான் அந்த ஆனந்த சித்தன்! இந்த உள்ளொடுங்கி மறையும் முடிவு நிலைக்கே அவனை உந்தித் தள்ளின எல்லா யோக ஞான, சமய மத, கொள்கை கோட்பாட்டு நெறிமுறைகள் யாவும், அகங்கண்ட கடவுட் ஜோதியைப் போற்றிப் பணிந்து வணங்கிப் பெற்ற முடிவும் இதுவேயாகும். இதனைக் கண்டு கொண்டபின், வேறு எதனையும் விரும்பாது, வாழவும் எண்ணாததால், அப்படி இரண்டறக்கலந்து ஒழியும் நிலையே சம்மதமாய்க் கொள்ளப்பட்டது ஆனால் ஆண்டவர் திருவுள்ளம், தன் உண்மையைப் பூரணமாய் வெளிப்படுத்திக் கொண்டு நித்தியானுபவத்தோடு என்றும் நிலவவேண்டும் என்பதேயாம்!
எனவே, சிற்ஜோதி ஆன்ம அணுவன், தன்னைப் பெருஞ்ஜோதிக்கு அனன்னியனாய்க் கண்டு கொண்டதோடு, அந்நிலையனுபவம் கெடாது, சச்சிதானந்த பதிமயமாய் வாழ்ந்து கொண்டிருக்கவும் வேண்டும் என்பதை யுணர்ந்து கொண்டுள்ளான் இது சமயம். இந்த அழியா இன்ப வாழ்வு பெறவே தயா சுத்த சன்மார்க்கம் உள்நின்று வழங்கப் பெறுகின்றான் மனிதன். இந்நெறி முறை வாழ்வு திருஅருட்பிரகாச வள்ளல் வழி உலகுக்கு வந்து கொண்டுள்ளது. இது அனுபவப்பட, இரண்டே இரண்டு நிலைகளே குறிக்கப்படுகின்றன: அவை, சத்விசாரம், பரோபகாரம். இதற்கோர் உபாயம் அருட்ஜோதி தீப வழிபாடே. அதுவே இன்று நம் தயாவொளி வழிபாடாக விளங்குகின்றது.
தீபச் சுடர் முன்னிருந்து வேண்டும்போது, அகம்வளர் கடவுட்சுடர், கும்பிட்டு நிற்கும் கூப்பிய கர அடையாளமாகத் தோற்றுகிறது. இது சத்விசார ஞானானுபவத் தோற்றம் மட்டுமே! மேல், ஒளிசெய் பரோபகாரச் செயலால் பெறப்படுவது அனுபவ வாழ்வு முறையாகும். எனவே, விசார ஞானத்தால் கண்டது அரைக் கும்பிடேயாகும்: மேல் பரோபகாரத்தால் அடையப் பெறுவதே முழுக்கும்பிடின் பயனாம். இதனால்தான் ஒன்றாகிய தயா தெய்வ ஒளி, இரண்டு அரையாகப் பிரியாதே பிரிந்து விளங்குவதுபோல், நம் இருதயாகாசத்தில் திகழ்கின்றதாம். இடம் வலம் ஆகிய இரு உள்ளங் கைகளில் இரண்டு அரைத் தயவு கூடிய நிலையே ஒரு கடவுள் தயவுச் சின்னமாக, சுடர் விளக்கு துலங்குகின்றதாம். தயவுக் கடவுள் அனுபவம் கொண்டு வாழ உள்ளங்கையில் தயவுக் கனியாய் வழங்கப் பெற்றுள்ளோம் நாம்.
தயவுத் தெய்வத்தை, வணங்கி உட்கூடலும், புற வாழ்வில் வழங்கலும் வேண்டும். இதில் இரண்டரைக் கடவுள் அனுபவநிலை விளங்கும் உண்மை, வணங்கல், வழங்கல் என்ற இரு சொற்களின், ணகர, ழகர நிலை ஆறாவது, பதினைந்தாவது உயிர் மெய்யாய் நின்று, ஒரு ஆறு, இரண்டரை ஆறு உண்மையைக் கொண்டுள்ளதையுணர்த்துவதாம். இது போல், தொண்டும் தொழுகையும், ணகர மெய்யும், ழு-ஆகிய (ழ்+உ) ழகர மெய்ந்நிலையும் ஆறு, பதினைந்தாகவே, இரண்டரை நிலைகாட்டி நிற்கின்றனவாம். எனவே, தயா ஒளி விளக்காய்ச் சிர நடு கண்டு கலந்து இரண்டற இருந்து கொண்டு தயவுக் கடவுள் அனுபவம் உண்டாக வாழ வேண்டும் என்பது கடவுள் திருவுள்ளமாகும்.
இருகை கூப்பி வணங்கும் போது, தயவுக் கடவுள் தானே, அவ்விரு கை நடுவில் இருப்பதாக உணர வேண்டும். இதயத்தினின்று மன அறிவோடு, தயா மெய்யுணர்வும் சேர்த்துச் சிரநடுவேற்றி, மேனிலை பொருத்திய வாழ்வு பெற எவரையும் வணங்கி வாழ்த்துவோம். இதுதான் வழங்கலின் உண்மை. இதனை அறியாது, கை கூப்புவதும், வணக்கம் என்று சொல்வதும், சிரந்தாழ்த்தி, அபிநயம் பிடித்துக் கூறிவிடுவதும் மெய்யான வணக்கமாகாது!
‘கையறவிலாது நடுக்கண் புருவப் பூட்டு,’ என்கின்றார் நம் வள்ளல் அடிகள். அதாவது, கையானது செயல்படுவதோடு, மனம் புருவ நடு விருந்து உள்ளொளியிற் சார்ந்து நின்று செயல்பட வேண்டும். அப்போதுதான் கடவுள் அனுபவம் கைகூடும். இம்முறையே உண்மை தெய்வ வழிபாடாகும்.
திருவடியைத் தொட்டு வணங்கலும், கையால் சிரத்தை தொட்டு ஆசீர்வதித்தலும், கையைத் தூக்கி நெற்றியைச் சுட்டி ‘சலாம்’ செய்தலும், உள் வளர் இறை ஒளியைக் குறிப்பதேயாம். இந்த இறை உண்மை இன்று ‘தயவு’ ஆக உணர்த்தப் பெற்றதோடு, ஆங்கிலத்தும் ‘DAEIOU ’ தயவு ஆக, ஆறெழுத்து ஒரு சொல்லாக வழங்கப் பெற்றுள்ளோம். இது, மூன்று ஆறு (666) ஆக விவில்யத்தில் கடவுள் மனித எண்ணாகக் கூறப்பட்டுள்ளது. இதனை ஒருவன், நெற்றியிலும், வலது கையிலும் தரிக்கப் பெற்று வாழ்வானேயாயின் கடவுளால் இரட்சிக்கப்படுவான் என்று சொல்லப்பட்டுள்ளது.
நெற்றிக் கண்ணைத் திறக்கப் பெற்றவன், உபநயனம் செய்யப் பெற்றவன், , உள்ளொளியைப் பிரம்ம உபதேச முற்றவனாவான். இவன் அந்தப் பிரம்ம ஜோதியை, நவநிலைப் பூணூலாக அணிவிக்கப்படுகின்றான். தினமும் முப்போதும் காய்த்திரி மந்திரத்தால் அவ்விறை ஒளியைப் போற்றுகின்றான். இவ்வுண்மையைச் சுட்டும் வண்ணம், முப்புரி நூலின் பிரம்ம முடியை இதயத்திற்கு நேர் அணிந்து கொள்ளுகின்றான். இது இவனுடைய மனத்தில் அப் பிரம்ம ஞானானுபவம் சதா இருக்கின்றதாகத் தெரிவித்தற்காம். இப்படி இருந்து முடிவில் ஒருவன் பிரம்ம ஐக்கியம் அடைவது தான் அன்றைய முடிவாம். இதுபோல், சிரநடுச் சிற்ஜோதியைப் புரிந்து கொள்ளாமலே புறச் சின்னமாக பிறை மதிமேல் திகழ் ‘ஐ’ இதழ் நட்சத்திரத்தைத் தொழுதேத்தி அல்லா நிலையுறுவதும், நாசிரத் தேசொளியை நம்பிப் பணிந்து போற்றிக் கிறிஸ்தேசுவில் மறையுறுவதும் இறை இன்ப வாழ்வில் இத்தாரணி மீது தழைத்திட வைத்திடவில்லையே! இதுபோன்ற பலவாகிய நெறிமுறையால் பெறலரிய பேரின்ப வாழ்வோடு விளங்கச் செய்ய வல்ல சுத்த தயா பெருநெறி இப்போது வெளிப்பட்டிருக்கின்றது. இது கொண்டு உலகவர் எல்லாம் உய்வு பெறலாம்.
இச் சுத்த நெறி தந்த ஜோதி வள்ளல், அகத்தே சத் விசாரத்தால் அருட்பெருஞ்ஜோதி இறைவனை, தனிப்பெருங் கருணையால் பற்றி நின்றதோடு, அனகமாகக் கருணைவாழ்வு மேற்கொண்டு நித்தியானந்தமாய்த் திகழவும் ஆகியுள்ளார். இவர் தம் இருதயத்தே இருக்கும் இருதயா ஜோதியை, இரு உள்ளங்கை இணைத்து மார்போடு அடக்கி நிற்கும் அடையாளத்தால் குறிப்பிடுகின்றார். மேனிலையில் அருட்பெருஞ்ஜோதியோடு இரண்டறக் கலந்து நின்றதோடு, புறத்தே தயவு வாழ்வு தழைத்தோங்க வாழலானார். இதனால் தான் உள்ளத்தே அருள் விளக்கென விளங்கிய கடவுள் ஒளி, அருட்சுடராய் உடல் முற்றும் நிரம்பியதோடு, அருட்பெருஞ்ஜோதியாய் வெளிமுற்று நிரம்பியதாய்க் கண்டு அனுபவிக்கலானார். இவ்வனுபவம் தான் அவர்க்கு மரணமில்லாப் பெருவாழ்வில் நீடு விளங்கச் செய்துள்ளதாம்.
இந்தச் சுத்த சன்மார்க்க அடிப்படையில் தான் நம் தயவு வாழ்வு செயல்படத் தோன்றியுள்ளது. தயாபெருஞ்ஜோதிக் கடவுள் தானே, நம் உண்மைச் சிற்ஜோதி ஆன்ம அணுவாய் சிரநடு விருந்து விளங்குகின்றதும், அதுவே நாமாய் உள்ளதும் மெய்யே. இந்த மெய்ந்நிலை நின்று தனிப் பெருந்தயவு ஆட்சி புரிந்து கொண்டுள்ளார் நம்பதி. அவர் மயமாய் இருக்கும் நாமும், உலகில் தயவு செய்து கொண்டு வாழ்வதே முறையாகும். இதற்காகவே ஒருவனின் தலையிடத்தே கடவுள் உண்மை வடிவத் தகராகாச ஞானமும், நெஞ்சிடத்தே யகர ஆன்ம உயிர்ப்பு இயக்கமும், உடல் மூலம் வுகர பரோபகாரச் செயற்பாடும் வெளிப்பட்டுக் கொண்டே இருப்பது தான் ஒருவனை ஆற்றுப்படுத்தும் தயவுக் கடவுள் வழிபாடாக அமைகின்றது.
இத்தயவு வாழ்வை உலகுக்கு உணர்த்திடவும், ஏற்கச் செய்யவும், உய்வு உற உதவுவதும் நம் தயவு நெறி முறை யொன்றேயாகும். இந்நெறிதரு உண்மையை யுணர்த்தத் தோற்றுவிக்கப் பெற்றதுதான் நம் தயவு ஆலயம். இது உண்மையில் ஒவ்வொருவரின் உள் ஒளிர்கின்ற ஆன்ம ஆலயமே ஆகும். இது உலகக் கோவில்களைப் போன்ற, உண்மையைப் புறங்கவியக் காட்டாத தத்துவக் கற்பனா ஆலயமன்று. இதில் விளங்கும் தயவு ஒளி உண்மையில், எல்லாமான எல்லாம் வல்ல, என்றும் உள்ள, எவருமாய் விளங்குகின்ற கடவுளையே உணர்த்துகின்றது. எனவே இக்கடவுள் ஒளி தானே நாம் ஒவ்வொருவருமாய்த் தய - வென, இயல்பாகவே கூடாமற்கூடி விளங்குகின்றதும் சத்தியமாம். இதுதான், நம்மின் இறை மயப் பரமயோக இயல் நிலையாகும். ஆகையால் வேறு எந்த வகை யோகத்தாலும் இந்த இறை இன்ப வாழ்வுநிலை சாத்தியப்படுவதாய் இல்லை.
“பரிபாக வேதன் வரோதயா னந்தபத பாலனம் பரம யோகம்,” என்பது வள்ளலார் அனுபவத் திருவடிப் புகழ்ச்சிச் சான்றாகும். தயா பதியின் திருவடி, ஒருவனின் உள்ளத்தே எப்போது தரிசிக்கவும், பரிசிக்கவும் பெறுகின்றதோ, அப்போதே இறை வாழ்வு ஏற்பட உள்ளதாம். இவ்வனுபவ வெளியீட்டிற்கே, தயா ஆட்சி அக நின்று சதா அனகமாகப் புரியப் படுகின்றதாம். இவ் ஆட்சியின் இன்பானுபவ வாழ்வு பற்ற, மேல் குறிக்கப் பட்டுள்ள திருவடிப் புகழ்ச்சி அடி.
“பரமானுகுண நவாதீதம் சிதாகாச பாஸ்கரம் பரம போகம்,” என்பதாம்.
சிரநடுச் சிதாகாசத்திலே, புதுமையான அல்லது அதீதமான ஒன்பதாம் உருக்கொண்டு விளங்குகின்றது பரம்பொருள். இப்பரமபதியின் தனிப்பெருங் குணம் தான் தயவு ஆம். இது அனுபவப் படுவதற்குத்தான் பொருட் சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி, யோக சக்தி, அருட் சக்தியோடு கூடிய ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந் தொழில் கொண்டு விளங்குகின்றார் கடவுள். இவையே தயா பெருங்குணத்தினின்று விரிகின்ற அனக அனுகுணமாகக் குறிக்கப் பெற்றுள்ளது. அனு குணமாவது அனுபவ குணமே என்பது தெளிவு. இதனால் விளைகின்றதுதான், சிதாகாச பாஸ்பரம், தகராகாச ஜோதி சூரியனின் மேலான அனுபவம் ஆகும். இதனைப் புறத்திருந்து திருவருளாலே யுணர்த்தப்பெற்றது சைவசித்தாந்தரின் அக அனுபவத்திலே அவர்தம் உள்ளத் தெழுந்த, தத்துவரூபம், தத்துவதரிசனை, தத்துவசுத்தி, ஆன்ம ரூபம், ஆன்மதரிசனை, ஆன்மசுத்தி, சிவரூபம், சிவதரிசனை, சிவயோகம், சிவபோகம் என்னும் தச காரியத்தின் முடிவாகக் குறிக்கப்படும் சிவபோக அனுபவம், சிவானந்த அனுபவம், முடிவுறாது நீடுகின்றது நம் தயவு அனுபவ, சதானந்த வண்ண முடிவிலா வாழ்வுதனிலே.
உலகம் ஏற்க, தயவு நித்தியானந்த வாழ்வு.
சங்கும் சக்கரமும்
நித்தியானந்த அருள் அனுபவ வாழ்வு தான், ஆன்மாவுக்கு ஆதியிலேயே ஆணை செய்யப்பட்டுள்ள ஒன்றாம். இது தான், ஆதி அந்த நிலையாம், நம் ஆன்மாவுக்கு. இவ் ஆதிக்கு முன்பும், அந்தத்திற்குப் பின்பும், அனாதி நித்தியமாய் உள்ளது எதுவோ, அது என்றும் உள்ள, எல்லாம் வல்ல, நிரதிசயானந்த பரம் பொருளாகும். அப்படியுள்ள நித்திய பரத்தின் இயல் உண்மை அறிவின்ப வெளியீட்டிற்கே, பிரபஞ்சச் செயல் யாவும் வெளிப்பட்டுள்ளது. இவ்வுண்மை அருள் மெய்ஞ்ஞானத்திற்கே யன்றி, இந்திரிய, கரண, ஜீவ உணர்வுக்கு விளங்குகின்றதில்லை. ஆன்ம இயற்கை தயவுதான் அருள் ஞான உணர்வாம். அனாதியாம் நித்திய மெய்ப் பொருளே, தன் முழு இயல்பையும் வெளிப்படுத்தி அவ்வனுபவம் கெடாது, தானே, அதுவாய் என்றும் நிலைத்து விளங்கச் செய்யவேதான், தன்னையே ஆன்ம சிற்றுருவின் அகப் பொருளாக வைத்து, அதனை வெளியாக்க, ஐந்தொழிலும் தொடங்கப் பெற்றன ஆதிமுதல்.
எனவே, அகண்ட நிறை நித்திய இறையே, கண்டமான ஓர் ஆன்ம சிற்றுருவில் அகமிருந்து ஐம்பூதத் தோற்றங்களையும், அவற்றால் ஆக்கப்படும் பொருள்களையும், உயிரின வடிவங்களிலே, ஏற்பதுவும், விடுவதுமாய் இருந்தார். அப்படி ஏற்ற உயிரின வடிவங்களிலே, ஜீவ புலனுணர்வும் வளர்ந்து வந்து, மக்கள் உயிர் உணர்வில் மன அறிவாய்த் தோற்றி, அருட் பக்குவமுற்ற போது, தன் இறை இயல் உண்மையை ஒருவாறு உணர்ந்து கொள்ள முடிந்தது மனித வடிவிலே. அகண்ட இறை உண்மையும், கண்ட ஆன்ம உண்மையும் ஒன்றென ஒன்றி ய நிலையே இம் மனிதன் உண்மை என்பது அறியலானது இச்சமயம். ஆனால் இவ்வுண்மையை உள்ளபடி, உலகரிய வெளியாக்கப்பட முடியவில்லை முதலிலே. ஏனெனில் இவ்வுண்மையைக் கண்ட, உணர்ந்த ஒருவன், தேகப் பொறி புலன் நிலையிலிருந்து, ஜீவ மனோகரண எல்லையினின்று. ஆன்ம இயல்பை ஆய்ந்து அறிந்து, பல கற்பனையால், அக விளக்கத்தை வெளியாக்கினான். அவையே ஆதி, சைவ வைணவ தெய்வ தெய்வீகக் கற்பனை பலவுமாக வெளியாயின.
விண்ணிறை, காலங்கி, அதாவது, ஆகாசம், காற்று, தீத்தோற்றமே அ-உ-ம் ஆய்க்கூடி, ஓமாய்ப் புறத்தெங்கும் ஒலித்துக் கொண்டும், அகத்தே ஒளி செய்தும் உள்ளதாம். இதுவே பிரணவ நாத ஜோதியின் காரியப்பாடு. இப் பிரணவ மந்திரம் தான் யாவற்றிற்கும் மூலமாய் இருந்து யாவையும் வெளிப்படுத்திக் கொண்டுள்ளதாம். மனிதனில், இவ் ஓங்கார உண்மை, உடல், உயிர், உள்ளொளியாய்ப் புறத்திருந்து அறியப்படுவதும், அகமிருந்து அறிவு, உயிர், உடலாய் விளைவு கொண்டிருப்பதும் அனுபவ வெளியீடே. அகர எண் சாண், உடற் படைப்பு, அயன் (பிரமன்) செயலாயும், உகர ஈர் உயிர் இயக்கம், அரி (திருமால்) செயலாகவும், மகர மெய் அறிவு விளக்கம், அரன் (சிவன்) இயல் விளக்கமாகவும் கொள்ளப்படும். இவற்றில் ஆக்கலும், அழித்தலும் ஆகிய, அயன், அரன் செயல்கள் சில நொடிகளில் முடிந்து விடுகின்றன. ஆனால், அரியின் செயல், தோற்ற முதல் மறைவு வரை நீடிப்பதாய் உள்ளதாம். இவ் வாழ் நாள் எல்லையில் தான் எல்லா அனுபவமும் ஏற்படக் கூடியதாயுள்ளது. ஓர் ஆன்மாவுக்கு ஒவ்வொரு பிறப்புக்கும், இறப்புக்கும் இடையான வாழ்வில் உண்டாகின்ற அனுபவம் கொஞ்சம் கொஞ்சமாக விளைவுற்று வந்து, மனிதப் பிறவியில் அருள் ஞானத்தால் கடவுளான்ம உண்மை கண்டு கொள்ளப்படுகின்றது. அக் கடவுள் ஆன்ம உண்மை, நித்திய ஆனந்த மயமானது என்று, என்றோ கண்டு விட்டான் பக்குவி.
தன் இறை இயல் உண்மை நித்தியானந்தமான ஒன்றே எனக் கண்டவன், அழிவுறும் தேக நிலையிலிருந்து தான் அறிந்து கொண்டிருந்தான். ஆகையால், அவ் அழிவுறு தேகப் புறநிலையைப் பற்றற விட்டு விட்டு, அழிவுறா அக நிலையில் அசைவற நின்று அடங்கி விடுதலே முறையாகும் என்று தான் முடிவு செய்து கொண்டும், அப்படியே ஒடுங்கி, வாழ்வற்று மறைந்தே போனான். அப்படி மறைந்தவன், ஆனந்த நித்திரையில் அறிதுயில் புரியும் திருமால் நிலையில் வாழ்வதாக, பிறரால் போற்றிக் கொள்ளப்பட்டான். மேலும் அவன் பரமபதத்தில் இருந்து உலகை எல்லாம் ஆண்டு வருவதாகவும் மதிக்கப் பெற்றான்.
ஓவண்ண ஆன்ம உலகில்; உ-வண்ணத் திருமாலையே, அ-வண்ண உடலையும், ம-வண்ண உள்ளொளியுமே சங்கும், சக்கரமுமாய்க் கொண்டு, பரமபதத்திருந்து ஆள்கின்றதாக அணிந்துரைக்கப்படுகின்றது. சங்கு-நாத ரூப தேகத் தோற்றத்திற்கம், சக்கரம்-ஜோதி வடிவ ஆன்மச் சுடரையும் சுட்டுவதாய்க் கொண்டனர். ஆன்மாவின் புறம் சூழ்ந்துள்ளது பெண் தத்துவ தேகமே. இவ்வுடற் பற்றற்று, தான் ஆன்ம ரூபியே என்ற நிலை பெறுவோன், ஆண் ஆகின்றான். இந்த ஆண் இயல் உண்மையை அறியாத மனம், ஆன்மத் தலைவியைக் கேட்கும் வினாவும், அதற்கு தலைவியின் விடையும், அதற்கும் மேலான நம் வள்ளற் பெருமானின் அக அனக அனுபவ நிலையும், அவர் அருளியுள்ள ஓர் அனுபவப் பாடலால் நன்கு விளக்கம் பெறலாம். திருமால் நிலை, சத்விசாரத்தால் அறிந்து கொள்ளத்தக்க புறநிலையே எனவும், தம் அருள் அனுபவ நிலை அக அனகத் தயவு நிலை எனவும் குறிக்கின்றார்.
அவ்வருட்பாடலை ஆழ்ந்து கவனிப்போம்:
“தாழ்குழல் நீ ஆண்மகன்போல் நாணம்அச்சம் விடுத்தே
சபைக்கேறு கின்றாய்என் றுரைக்கின்றாய் தோழி
வாழ்வகைஎம் கணவர்தமைப் புறத்தணைந்தாள் ஒருத்தி
மால்எனும்பேர் உடையாள்ஓர் வளையாழிப்படையாள்
ஆழ்கடலில் துயில்கின்றாள் மாமணிமண் டபத்தே
ஆள்கின்றாள் ஆண்மகனாய் அறிந்திலையோ அவரைக்
கேழ்வகையில் அகம்புணர்ந்தேன் அவர்கருணை அமுதம்
கிடைத்ததுநான் ஆண்மகனா கின்றதி சயமோ.”
சாதாரண பெண்மையுடலில் வாழ்ந்தாலும், நம் வள்ளல் ஆன்மா பொறியுடம்பைப் பற்றிடாது, அகப்பதிநிலையில் இருந்து அம்மயமாய் வாழலின், ஆணே ஆவர்! கற்பனையுலகில், ஆன்மக் கடவுளை சூழ் தேகி சங்கரியாம், திருமால், பெண்ணாய் விளங்குவதும், மேனிலையில் சங்கு சக்கரதாரியாய், புருஷோத்தமனாய் இருந்து ஆள்கின்றதும் அறிவோம். நம் தயா வள்ளல் கேழ் வகையில் அதாவது (அன்பு அல்லது தயவு) ஒளி முறையால், கடவுள் ஒளியின் அகச்சேர்க்கையுடன் அனக ஆட்சி புரிகின்ற அரும்பேறு பெற்றுள்ளதால், அருட்ஜோதி ஆண்டவனே ஆகி அகில பிரபஞ்சத்தையும் ஆண்டு கொண்டிருத்தல் உண்மையாம்.
உகரநிலை கொண்டு திகழ்கின்ற ஆன்மரூபி, அகரதேகப் பற்றொழிந்தபோதுதான், தனது உண்மைச் சொரூபம் உள்ளொளியாய் உள்ளதைக் கண்டு கொள்ளுகின்றான். அவ்வுண்மை யுள்ளொளியே தன்மெய்யுரு என்ற காட்சியானுபவம் குறிக்கவே, அச்சக்கர ஜோதியே சுதர்சனம் எனப்படுகின்றது. அதுவே ஞான தேகமாயும், தயா அனுபவியின் புற அகர வடிவம் சுத்த சுவர்ண தேகமாயும் விளங்குதல், சத்த சன்மார்க்க விளைவு அனுபவமே.
முன் விசார ஞானக் காட்சியில் கண்ட இராஜாதி ராஜனாம் திருமால், பொன்வண்ண பீதாம்பர தாரியாக விளங்கினது. அப்போது அவர்தம் திருக்கரத்திரண்டில், சங்கும் சக்கரமும் நாத விந்துவாய்த் திகழ, கதையும், வில்லும், அம்பும் புறக் காரியக் கருவியாகக் கொண்டு, ஐந்தொழில் ஆட்சிபுரிவதாக கொள்ளப்பட்டதாம்.
இப்போது, தனிப்பெருந்தயவு அனுபவ வாழ்வில் நம் அருட்பிரகாச வள்ளல், சுத்தபொன்வடிவொடும், ஞான தேகப் பெருவடிவொடும், சிருஷ்டிமுதல் ஐந்தொழில் செயலும் தன்னதாய்க் கொண்டு அண்மையில் ஆள்கின்றதை அருட்கண்ணாற் காண்குவர் அனக வாழ்விலே.
இது தயவு வாழ்வு ஆம்.
நித்தியானந்த வாழ்வு
நித்தியானந்த வாழ்வு என்றால், இறை இயல் நிறை இன்ப வாழ்வே ஆகும். அனாதி நித்திய பரம்பொருள் தானே தன் உண்மை முழுமையாக வெளிப்பட்டு, நித்திய அனுபவத்தோடு என்றும் அழிவும் மறைவும் இன்றி விளங்கிக் கொண்டிருத்தலாகும். இதற்கு என்றே மனிதப் பிறப்பு. மன்னி இதனாய் நிலைத்த இன்புருவினனாய் நிலவச் செய்யவே இந்நாள் வரை இம் மக்கள் இனம் தோற்றுவிக்கப் பெற்று, முன்னேற்றப் பாதையில் செலுத்தப்பட்டுக் கொண்டேயுள்ளதாம். மெய்யறிவும், மெய் அன்பும், மெய் இன்பமும் நிரம்பிய வாழ்வே நித்தியமான வாழ்வாகும் இது தோன்றுமுன் பூதப் பொருள்களை உயிர் விளங்கு ஜீவ தேகங்களாக ஆக்கி, அவ்வுயிர் வடிவில், புலன் உணர்வு, மன அறிவு, ஆன்ம ஞானம், கடவுள் உண்மை விளக்கம் எல்லாம் விளைவு கொள்ள வேண்டியிருத்தனவாம். இவையே பிரபஞ்ச காரிய நிகழ்வு ஆம்.
மனிதப் பிறப்பில், ஆன்மக் கடவுள் ஞானம் என்றோ தோன்றிவிட்டது உண்மைதான். ஆனால், அது பூர்ண விளைவு பெறாத, குறைவுடைய ஒன்றாக பல காலம் இருந்து வந்துள்ளது. அவ்விளைவு நிறைவு அடைய, உலகியலில் நெடுங்கால வாழ்வு மூலம், சிறிது சிறிதாக அனுபவப்பட்டுத் தான் கண்டு கொள்ள வேண்டியுள்ளதாம். மனித அறிவில், கடவுள் உண்மை, சச்சிதானந்தமான ஒன்றாகத் திருவருளால் உணர்த்தப் பெற்றுவிட்டது முதலிலேயே. அப்போது அம்மனிதன், பொறிபுலன் ஜீவ உணர்வு நிலையிலிருந்து தான் அச் சச்சிதானந்த பதியை ஒருவாறு உணர்ந்தான். அப்படி உணர்ந்தவன், தன்னை உடல் வடிவினனாகவும், அப்பதியைத் தனக்கு வேறாகத் தனித்துள்ள ஒன்றாகவும் கண்டிருந்தான். மேலும், ‘தான்’ ஜட பூதப் பொருள் புலன் வடிவினனாகவும் இல்லை, தனக்கு அதீதமான, பதி ஆகவும் இல்லை என்றும், இரண்டுக்கும் இடையுற்றிருக்கும் ஒன்றாக கருதிக் கொண்டான். இவ்விடைநிலையில் இருக்கும் தன்னைப், பதியே, பொறியுடம்பில் பிணைத்து வைத்திருப்பதாகவும் எண்ணினான். இந்த தன்னிலையே, தற்சுதந்தரமற்ற ஆன்ம பசுத்துவ நிலையாகக் கொண்டான். அக்கூட்டாகிய பாசத்தைத் தளையை வெட்டி யொழித்துப், பதி சார்புற்று, பரமானந்தம் அடைய, அப்பதி திருவருளே கதி என்று முடிவு செய்திருந்தான் மனிதன்.
பசுத்துவ மனிதன், பொறிவாயில் ஐந்தவித்து, உலக வாழ்வைத் துறந்து, பதி பதத்தில் ஆழ்ந்து இருந்த தருணம், பரமானந்த அனுபவம் அனுபவித்தான், தன் உணர்வும், உயிரும், உடலும் அழிந்து ஒழியாதவரை. அவ்வுயிர் வாழ்வின் முடிவிலே, அவ்வானந்தானுபவமும் சூனியத்தில் மறைந்தது! அப்படி மறைவுறுநிலைதான் முடிவெனக் கொண்டுவிட்டான், அன்றைய மனிதன்! அதனால், தான் கண்டு அனுபவித்த சச்சிதானந்த இறை அனுபவம், நித்தியானந்த வாழ்வில் நிலவச் செய்யவில்லை, அதனை ஒரு குறைவாகவும் கொள்ளவில்லை, அவன். அந்நிலையுற்றவனை, இறை இன்பத் திருவடியில் நீடு வாழ்கின்றவனாகவே கொண்டது அவனது பிற்சந்ததி!
நித்தியானந்த பதியினிடத்திருந்து வந்துதித்த மனிதன், எவ்வளவோ காலத்திற்குப் பின், திருவருளால், அப்பதியுண்மையையுணர்ந்து, சார்ந்து, இன்புற்றும், மறுபடியும், உயிருடல் இழப்பால், இறப்பால், அவனது இன்ப வாழ்வுக்கு தடை ஏற்பட்டு, சூனியத்தில் கிடக்கத்தானா இந்த மனிதப் பிறப்பு இவனுக்கு வழங்கினார் அருள் ஆண்டவர்! இல்லை! இல்லவேயில்லை!! நித்தியானந்தமாய், அனாதியே விளங்கிக் கொண்டுள்ள ஆண்டவர், தன் சச்சிதானந்த உண்மையைத் தடைபடா நித்தியானந்த வாழ்வோடு, அனுபவப் பூர்வமாக வெளிப்பட்டு விளங்கச் செய்யவே திருவுளம் கொண்டுதான், மனிதனுக்கு அன்றே அருள் பாலித்தார். ஆனால், இம் மனிதன், இறைவன் திருவுள்ளத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளும் பக்குவமின்மையால், புறம் இருந்து கண்டு, முடிவில் அகம் புதைந்து மறைந்தே போனான்! இச் சமயம் தான் திருவருள் உண்மை முழுமையாக வெளியாகியுள்ளது. ஒன்றாகிய பேரருட் பெருஞ் ஜோதிபதியே, தன் தனிப் பெருங்கருணையாய், எல்லாம் தானாய், எவருமாய் நாம் ஒவ்வொருமாய்த் திகழ்கின்றதனை வெளிப்படுத்தியுள்ளார். எனவே, அவர் ஒருவரேயன்றி, மற்றபடி எவரும், எதுவும் இல்லை என்பது திண்ணம். இந்த ஒன்றாகிய இறையுண்மை நிலை நின்று நோக்கும் போது, அந்தச் சச்சிதானந்தபதியே உண்மையில் நாமாகிய தோற்றங் கொண்டுள்ளது தெளிவாம். இத்தெளிந்த அகநிலை நின்று, சத்தும், சித்தும், ஆனந்தமும் வெளிப்பட அருள் அல்லது தயவு இயல்வாழ்வு மேற்கொள்ளுவதால், அச் சச்சிதானந்த அனுபவம் நித்தியானந்தமாய் நிலைகொண்டு என்றும் விளங்குவது சாத்தியமாகின்றது. இந்தத் தடைபடாத இறவா இன்ப வாழ்வே, இறை ஆணை நிறை வாழ்வு ஆகும்.
இந்த, அகநின்று அனக தயவு வாழ்வு நெறி முறையே சுத்த சன்மார்க்கம். இது இறைவனின் இயல் நெறி, சுத்த சன்மார்க்கமாம் பொது நெறியும், புது நெறியுமாம், திருஅருட்பிரகாச வள்ளலார் நிறை அருள் அனுபவத்தாற் கண்டு கொண்டதும், உலகுக்கு, விண்டு வெளியிட்டு உள்ளதும், இம்மார்க்கமே ஆகும். ஆனால், பொதுமக்கள் சமுதாயம், இன்னமும், உண்மையை அறிந்து கொள்ளாது, பழநெறிப்பற்றால், அவத்தைப்பட்டு அழிந்துகொண்டுள்ளது! மக்கள், உளம் திருந்தி, உளம் திரும்பி, உளத்திருந்தோங்கும் தயவு பெரு நெறியால் பேரின்பில் தழைத்தோங்கப் போவது உண்மையாகும்.
சுத்த சன்மார்க்க வாழ்வு முறையை இன்றைய உலகம் புரிந்து ஏற்கும் வண்ணம், அருட்பாவையும், தயவுப்பாவையும் எடுத்து விளக்கி உலகுக்கு உதவவே இக்கட்டுரை யீண்டு வெளியாக்கப்படுகின்றது இத்தருணம்.
வாழ்வையே, ஒரு நாடகமாகவோ, பந்தாடலாகவோ, ஆனந்த நடனமாகவோ புனைந்து வழங்கப்படுவது மரபு ஆகும். இங்கு, வள்ளலார் வழங்கியுள்ள ஆனந்த மேலீட்டுப் பந்தாடல் கொண்டு ஒரு விளக்கமும், நம் தயவுப்பாடலின் ‘நடனம்’ என்ற தலைப்பில் வரும் செய்யுள் விளக்கமும் கொண்டு நித்தியானந்த வாழ்வு பெற வருணிக்கப்பெறும், “ஆடேடி பந்து ஆடேடி பந்து, ஆடேடி பந்து, ஆடேடி பந்து,” என்று அருட்பெருஞ்ஜோதி கண்டு வாழுமுறையை, மனத்தோழியை முன்னிலைப்படுத்தி, ‘ஆடேடி பந்து,’ என்ற தலைப்போடு ஒரு பத்து பாடல் பாடப்பெற்றுள்ளது. “ஆனந்தமேலீடு,” என்பதே பதிகத் தலைப்பு ஆம். அதன் முதற்செய்யுளை ஈண்டு எடுத்து விளக்கஞ் செய்வாம். அச்செய்யுள்
“வாழியென் தோழியென் வார்த்தை கேள்என்றும்
மரணமில் லாவரம் நான்பெற்றுக் கொண்டேன்
சூழியற் செஞ்சுடர் தோற்றுரு கீழ்பால்
தூய்திசை நோக்கினேன் சீர்திகழ் சித்தி
ஊழிதோ றூழிநின் றாடுவன் நீயும்
உன்னுதி யேலிங்கே மன்னருள் ஆணை
ஆழிகரத் தோடே ஆடேடி பந்து
அருட்பெருஞ் ஜோதிகண் டாடேடிபந்து.”
இதன் விளக்கம் அருட்பெருஞ்ஜோதி ஆனந்த நடனபதியின் சேர்ப்பால் ஆன்மாவாகிய தலைவி, (ஈண்டு வள்ளலார்தான்) நித்தியமாக இருப்பது இயற்கையே எனினும், இப்போது அனுபவத்தின் பொருட்டுத் திருவருளால் மரணமில்லாப் பெருவரம் பெற்றுவிட்டுள்ளதாகக் குறிக்கப்படுகின்றது. அவ்வர மகிமையால் தன் நித்தியானந்த வாழ்வு நாற்றிசையுலகுக்கும் வழங்கும் அற்புதச் சித்துச் செயல்புரிய ஆணை பெற்றுள்ளதாகவும் உள்ளதாம். இதனைஎல்லாம் உலகுக்கு உணர்த்த, இம்மனிதப் பிறப்பால் கிடைக்கப் பெற்றுள்ள மனத்தோழியின் வாய்மொழியும், மொழித்துணையும் அகம் இருந்து வெளிப்பட வேண்டியுள்ளது. அவ்வெளியீட்டால் உலகம் எல்லாம் கண்டுகொண்டு உய்வு பெறும் என்பது உண்மை.
சிரநடு ஆன்ம பீடத்து நாற்றிசையினும், நான்கு சத்திச் செயலால் அருட்பெருஞ்ஜோதி சித்தி பரவுவதாயுள்ளதாம். இங்கு, கிழக்கு (முன், ஆகிய முகப்பக்கம்) உத்தரஞான சித்திபுரம் என்ற பெயரால் விளங்கும் திசையில், வெளியாக்கப்படும், உயர்ஞானசித்தி அனுபவம் கிடைக்கப்பெறுவதாம். இத்திசையை நோக்கி நின்று, ஆன்மத்தலைவி, இவ்வுத்தரஞான சித்தி உண்மையை வெளியிட, உடனின்று வெளியுலகிற் பரப்பும்படி மனத்தோழியைத் தன்பால் ஈர்த்துக் கொள்கின்றாள். ஆழி கரத்தோடு ஆடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறாள். இவ்ஆழி, மோதிரம், சக்கரம், சமுத்திரம் என்னும் முப்பொருள் தரலின், திரிதேக சித்திப்பேற்றின் அடையாளமாகும். இதனால், இந்தத் தலைவி திரிதேக சித்தி கொண்டு, சதாகாலமும் மரணமில்லா வாழ்வில் என்றென்றும் வாழப்போவது உண்மை என உணர்த்தப்பெறுகின்றது. இதுபோல, நான்கு திசையிலும் இம்மரணமில்லா வாழ்வுக் கருத்து எங்கும் பரவச் செய்யவே, இப்பதிகத்தின் முதல் நான்கு பாக்களும் முறையே வழங்கியுள்ளார் வள்ளல் அடிகள். தலைப்பிலும், நான்கு தரம் ‘ஆடேடி பந்து;,’ என்று இசைக்கப்பெற்றுள்ளது. இனி தயவுப் பாவைப் பார்ப்போம். அதில் ‘நடனம்’ என்ற தலைப்பில் வரு பதிகம்,
“தயாபெருஞ் ஜோதிகண் டாடேடி நடனம்
சச்சிதானந் தங்கொண் டாடேடி நடனம்.”
என்ற எடுப்புடன் பத்து செய்யுள்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் முதற்பா இது:
கீழைவான் கிளர்ந்தெழு ஜோதிமுன் எழுந்து
கீறியிலா உளத்தோடே கிண்கிணிவாய் மலர
ஏழைபங் காளனின் எழில்வண்ணம் காண்
இன்னிசை கீதம்நீ என்னொடு பாடி
மாழைசேர் இன்பநடம் மகிழ்ந்தாடாய் தோழி
மரணத்தைத் தவிர்த்தற்கு மார்க்கமீ தென்றே
ஊழையொழித்திட்ட வள்ளலார் வாக்கை
உவந்திவண் இருந்தினி ஆடேடி நடனம்.
இதில், சுத்த தயா சன்மார்க்க வாழ்வு விளக்கம் வெளியாகியுள்ளது. தயாஜோதிபதி தயவுச் சத்விசாரத்தால் கண்டு கொள்ளப்படும். உண்மை, ‘தயாபெருஞ்ஜோதி கண்டு ஆடேடி நடனம்,’ என்ற முற்பகுதியால் குறிக்கப் பெற்றுள்ளதும், பின்னர் ‘சச்சிதானந்தம் கொண்டு ஆடேடி நடனம்,’ என்ற அனுபவ வாழ்வுக்குறிப்பும் எடுப்பாகக் காட்டப் பெற்றுள்ளது சிறப்பாம்.
தயாபதியின் என்றும் பிரியா இவ்வான்மத் தலைவி, கீழ் திசைச் சூரியன் உதயமாகும் முன்பே எழுந்து விடுகின்றாள். எழுந்து கிறி என்னும் பொய் இல்லா, மெய்யொளி திகழ் உள்ளத்தோடே மெல்லொலி, மெல்லிதழைத் தாமரை மொட்டின் மலர்ச்சிபோல வட்டமாய் மலர்த்திக் கொண்டு புறப்படுகின்றதாம். இவ்வொலி, தனிப்பெருந்தயவு உருக்கொண்ட தயா பெருஞ்ஜோதிபதியின் எழில் வண்ணத்தைக் காணச் செய்யும், இன்னிசைக் கீதமாக வெளிப்பட வருகின்றதாம். அவ்விசையோடு இசைந்த இசையாக, மனத் தோழியும் இசை கூட்ட வேண்டுமாம் அப்படி உண்மையும் வாய்மையும் கூடி இரண்டு படா இன்னிசையாய் பண்ணிசைத்துக் கொண்டு ஆடுதலே, இன்ப நடனமாம். உண்மையில் இது அனக தயா வாழ்வே அன்றி வெற்று ஆடலும் பாடலும் அல்ல. ஊழை வெற்றி கொள்ளற்கு இதுதான் வழி என்று, வள்ளற்பெருமான் அருள் வாக்கு அருளியுள்ளார். அது வெறும் வாய் வழி வந்த சாதாரண வாக்கு அன்று: உண்மை அனுபவத்தில் பெற்ற விளைவே ஆம். ஊழின் கடைசி எல்லை, ஒருவனது வாழ்வின் எல்லையாம் மரணமே. எனவே, ஊழை வென்றவன் என்றால், மரணத்தையே வென்றவனாக, மரணமில்லா வாழ்வு பெற்றவனாக இருக்க வேண்டும். அப்படி இறவாமை பெற்ற அருட்பிரகாச வள்ளலார் தான் ஊழை வென்றவர் என்பது சத்தியம். அந்த, நிலைத்த நித்தியானந்த அனுபவத்தில் இருந்து கொண்டு தான், அதனைப் பலரும் அடையும் அனக சுத்த சன்மார்க்கத்தை வழங்கியுள்ளார். அப்படிப்பட்ட அருள் வள்ளலின், அருள் அனுபவ வாக்கை உணர்ந்து உளங்கொண்டு, அவ்வுளத்திருந்தே தயா பெருஞ் ஜோதி கண்டும், சச்சிதானந்தம் கொண்டும் வாழ்வோம் என்பதே இந்த நடனம் உணர்த்த வந்த அனுபவப் பொருளாம்.
தெய்வ கற்பனா ஆனந்த நடராஜபதியின் உண்மை, அகமிருந்து அருள் ஐந்தொழில் புரிந்து கொண்டுள்ள இறை தத்துவமேயாகும். அதனை அப்படி கண்டும், ஆனந்தங் கொண்டும், வாழ, அனக நெறி இன்மையால், இதுகாறும் இம்மனிதப் பிறவி, மன்னிநிதமும் இன்பொடும் செயலொடும் என்றுமே வாழ்ந்து கொண்டிருக்க முடியாமல் போய்விட்டதாம், இப்பொழுதே, அவ் இறைவனே, அகநின்று அனகமுற்று நித்தியானந்த வாழ்வு கொண்டு நிலவ வந்துவிட்டுள்ளார் என்பது உண்மை.
ஆகவே, இன்னமும், ஒன்றான மன்பதை, மனுக்குலம், புலன் இன்பிலே பிழைத்து, அவத்தைப்பட்டு அழிந்துபோகாமலும், அன்பறிவின்பக் கடவுள் உண்மை அறிந்து கொள்ளாது, பலவாகிய கற்பனானெறிகளிலே உழன்று கலக்கமுற்று வீண்போகாமலும், தயா நலம் கொண்டு வாழ்ந்து இனிது தழைத்திடல் திருவுள்ளச் சம்மதமாகும். புற நெறிகளால், உண்மையான இன்ப வாழ்வு, இதுவரை உலகுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதா? இன்பம் என்பது, என்னவென்றே தெரிந்து கொள்ள முடியாதபடி அகம் அறியாது, புறப்புலன் உணர்ச்சி வேகத்திலே சுழன்று கொண்டிருக்கின்றான் இன்றைய மனிதன். உள்ளத்திலே இறை தயவு ஒளிவீச வேண்டும் அதுவே பொறிபுலன் வழியாக தயா நல வாழ்வாக மலரவேண்டும். அப்போது தான், உண்மை எது, அதனால் வரும் இன்ப வாழ்வு எப்படிப்பட்டது என விளங்கிக் கொள்ளமுடியும். ஆகவே, தயவில்லாத நெறிமுறைகளைப் பற்றாது, தயவோடு, அகமிருந்து உலகில் புதுவாழ்வு மேற்கொள்ளல் நன்றாம். சுத்தசன்மார்க்கம் உள் உதித்துவிட்டுள்ளது. அதனை உணர்ந்து ஏற்பது ஆண்டவர் ஆணை. ஆனந்தம், அது சச்சிதானந்தம் என்பது உண்மை. அந்த சச்சிதானந்தம் இப்போது தான் வள்ளல் மார்க்கமாய் வெளிப்படவும், நித்தியானந்தமாய் நிலைத்து, மனிதனை, அதுவாக என்றும் வாழ வைக்கவும் வருகின்றது. அது, அருட்பெரும் பதியின் அருள் ஆணைப்படி உலகெங்கும் படர்ந்து நிலை கொள்ளப்போகின்றதும் திருவுள்ளமே.
சூழ்க நித்தியானந்த தயவு வாழ்வு.
தயவு
ஆதியும் அந்தமும்
எதற்கும் ஓர் ஆரம்பம் அல்லது அடிநிலை உண்டு. அதுபோல் அதற்கான ஒரு முடிவும் அல்லது முடிநிலையும் இருப்பது இயல்பேயாம். இதற்கு மாறாக நித்திய பரம் பொருளாகிய ஏக இறை உண்மை நிறைவான ஒன்றுக்கோ, அப்படி ஓர் ஆரம்பத் தோற்றமோ முடிவோ இல்லை என்பது நிச்சயமாம். எனவே அவ் இறை மெய்ப்பொருள் ஆதியும் அந்தமும் இல்லா நித்திய நிலை கொண்டதாய் அறியலாகும்.
அந்த நித்திய நிறை பொருள், ஆகிய ஒன்று இருப்பது மெய்யோ, பொய்யோ? அது இருப்பதற்கு ஆதாரம் என்ன? அதனால் விளைவு? என்ன என்று உள் ஆழ்ந்து சிந்தித்து - இத்தருணம் உண்மையை அறிகின்றோம். இந்த இறை இயல் அறிவு, இம் மனித உள்ளத்தில் இன்று வெளியாகி உள்ளது ஒன்றே சான்றாக நின்று, அந்த அனாதி நித்திய இறை, தன் உண்மையை வெளியாக்குவதற்கென்றே படைப்பின், தொடக்க முதல் இது வரை, எல்லாப் பொருளாக, ஆற்றலாக, உணர்வாக மெய்ஞ்ஞான அறிவாக விளைவுற்று, தானே உணர்த்தியும், நாமாய் உணர்ந்தும் கொண்டுள்ளதாம்!
எனவே, அந்த அனாதி பரம்பொருளே, ஆதியில் ஏகமாய், அனேகமாய், யாவுமாய்த் தோற்றி, இப்போது நாமாய் விளங்கிக் கொண்டும் உள்ளதாம்! இதனால் நாம் என்பதும் அது என்பதும் உண்மையில் ஒன்றே! இரண்டல்ல!! நமது உண்மை இப்படி இறை இயல் கொண்ட ஒன்றாய் இருப்பதை, உள்ளவாறு புரிந்து கொண்டு, நிறை இறை வாழ்வு வாழாது, மக்கள் இனம் அவத்தைப்பட்டு அழிந்து கொண்டிருப்பது ஏன்? மக்கள் தம் நித்தியானந்த இறை உண்மையைக் கொஞ்சமும் அறியாது, தேக போக வாழ்வில் மிகுதியாக விருப்பும் வெறுப்பும் கொண்டு, தவறான நெறியில் சென்று கொண்டிருப்பதே காரணமாகும்.
புறஉலகம்தான் உயிரின வாழ்வுக்கு அமைந்ததாகத் தோன்றுகின்றது. இதுவே, ஐயறிவுக்குமேல் ஆறறிவு பெற்ற மக்கள் இனத்திற்கும் தானா? மனோ பகுத்தறிவு விளைவுறாத போது, அப்படிப் புலபோகத்திற்கே படைக்கப்பட்டது சூழுலகெல்லாம் என எண்ணி இருக்கலாம். பின்னர், மன த்தெளிவு உண்டாக உண்டாக பிரபஞ்சத் தோற்றக் காரிய காரணத்தை ஒருவாறு ஓர்ந்து, உலகம், புல போக நிமித்தம் மட்டும் தோற்றுவிக்கப்பட்டதல்ல. இதற்குக் காரணமாகிய இறை உண்மையைக் கண்டு, அனுபவ பூர்வமாக அடைந்து இன்புறவே மனிதன் தோற்றுவிக்கப்பட்டுள்ளான் என அறிந்து கொண்டான். அவ்விறை இயலைக் கண்டும், இன்பானுபவம் அடையக்கருதியும், எங்கெங்கோ சென்று தேடியும், எவரை எல்லாமோ அண்டி - தொண்டு பூண்டும் முடிவில் அந்த இறை, தன் உள், கரந்தும் (மறைந்தும்) கலந்தும் உள்ளதாய் உணர்ந்தான். அப்படி உள்ள, உள்ளுறை பொருளை, உள்ளங்கவர் கள்வனை, அறிந்து, கண்டு, அடையப் பல தந்திர உபாய நெறிமுறைகளை, வகுத்தான் மனிதன்.
இதுகாறும் கடவுளை அடையவேண்டுமென்றே, எல்லாச் சமய, மத, யோக ஞான, தந்திர மந்திர, கொள்கை கோட்பாட்டு விதிமுறைகள் பலவற்றையும் மேற்கொண்டு முயன்ற மக்கள் வெற்றிபெற்றனரா? இல்லை என்று தான் சொல்ல வேண்டும் ஏனென்றால், அவர்கள் முடிவில் குறிக்கோளாய்க் கொண்ட, சச்சிதானந்தப் பரம்பொருள், புறக்காரிய உலகுக்கு அப்பாற்பட்டதாய், இப்புற நிலையைக் கடந்து நீங்கிச் சென்று தான் பெறக்கூடிய ஒன்றாய் எண்ணியும் நம்பியும், மறைந்து வாழ்வற்றுத் தான் போனான்! இறை இன்பானுபவத்திற்குத் தானே, இந்த அரிய மனிதப் பிறப்பு ஒருவனுக்கு வழங்கப்பட்டது. அந்த இன்பம், திருவருளால் ஏகதேசமாய்க் கண்டும், ஒன்றியும், அனுபவித்தும் இருந்த மனிதன், உடல் இழப்பால் உயிர் உணர்வும், இறை அனுபவமும் ஒழிய, எல்லாம் சூனியமாகி விட்டதாம். இறையும், இறை இயல் இன்பமும் நித்தியமானவை. ஆகையால் அவ்வனுபவம் பெற்று, இறைமயமாக வாழும், ஒருவன், நித்தியானந்தனாய் வாழ்தல் வேண்டும்: மரணம் அடையக் கூடாது. உடலை நீத்து விட்டு, இறை நிலையுற்று இன்பில் வாழ்வதாக எப்படி கொள்ள முடியும்? குறிப்பிட்ட ஆன்மா இம்மானிட தத்துவ நிறை உயிருடம்போடு இருக்கும் போதல்லாது, மற்ற நிலையில் இன்பானுபவத்திற்கே வழியில்லையாம். மேலும், நித்தியானந்த பதி என்றும் நித்தியமாய் ஆனந்த நடனம் புரிந்து கொண்டிருக்க, அப்பதி நிலை பெற்றோன் கூட நித்தியானந்தமாய் வாழ்ந்து கொண்டிருப்பதே முறையாகும். அன்றியும், அவர், என்றும் ஒரு படித்தாய் அகமிருந்த வண்ணம், புறத்துயாவையும் ஆண்டு கொண்டிருத்தலின், அவர் மயமான ஒருவனும் அகமிருந்து, அனக ஆனந்த வாழ்வோடு நிலவ வேண்டுவது ஆணையாகும். இதற்கெல்லாம் சான்றாக விளங்குகின்றவர், திரிதேக சித்தி பெற்று, மரணமில்லாப் பெருவாழ்வுடன் திகழ்கின்றது வள்ளற்பெருமானே ஆவர்.
வள்ளலாருக்கு இந்த மரணமில்லா நித்தியானந்த வாழ்வு எப்படிக் கிடைத்தது? அவரும் முதலில் பிறர் போன்று தான் கடவுள் உண்மையைத் தனக்கு வேறாகக் கண்டு, ஒன்றி ஏகதேச அனுபவமும் பெற்றார். அதனால் பெறலரும் பல சக்தி சித்திகளையும் கைவரப் பெற்றார். ஆனால் அவற்றில் எல்லாம் சிறிதும் பற்று கொள்ளவில்லை; அவை கொண்டு புகழ்பட வாழவும் விளைந்திடவில்லை. மாறாகத் திருவருள் நிறைபக்குவத்தால், தனிப்பெருங்கருணை உடைய அருட்பெருஞ்ஜோதி பதியே, யாவுமாய், தானுமாய் இருப்பதையுணர்ந்து, இயற்கையில் ‘தான்’ ஆனந்தபதிக்கு அனன்னியமாய் (அன்னியமில்லாததாய், அந்த ஒன்றாகவே) இருப்பதைத் தெளிவாகக் கண்டு கொண்டார். இதனால், கடவுளை அடையப் புறத்திருந்து முயல்வது தவறு என்றும், அகநிலையிற் பிறழாது, திருவருள் கூட்டிவைக்கும் வண்ணம் தயவுசெய்து கொண்டு வாழவேண்டும் புற வாழ்வைத் துறந்து அகம் அடங்குவதோ, அகநிலவாது புற முயற்சி எதனாலும் நித்தியானந்த வாழ்வு அடைய முடியாதென்றும் புரிந்து கொண்டார். இவ்வுண்மை, அவ்வகநிலை நின்று அறிந்து கொண்டதோடு, அங்ஙனம் இருந்தபடி பரோபகாரத் தயவுச் செயல் முறையையும் மேற்கொண்டார். இதனால், இறையும் இவரில் பூரணமாய் வெளியாகிப் பேரின்பப் பெரு வாழ்வுடன் விளங்கச் செய்துவிட்டதாம்.
இனியும், இறை இன்ப வாழ்வுடன் ஒருவன் வாழ, புறமார்க்கம் எதையும் பற்ற வேண்டாம் என்ற எச்சரிக்கையோடு, சத்திய ஞான சத்விசாரத்தால், சத்திய ஞான சபையில், ஆம், அக சத்திய ஞான சபையிலே அருட்பெருஞ்ஜோதியைக் கண்டு கலந்து அதுவாகிநிற்கும் உபாயம் செய்துள்ளார். யாவருக்கும். அதுமுடிவான நிலை அல்ல: முன்னெறிகள் எவைக்கும் முடிவு நிலையாகும் இது, சுத்த தயா நெறிக்கு முதற்படியே ஆகும். ஆகவே, உட்பதியோடு கூடாமற்கூடி இருந்து கொண்டு தயைபெருகப் பெருக தயா இன்பம் உள்ளிருந்து ஓங்க வாழ வேண்டுவது திருவருள் ஆணையாம்.
இந்த நித்தியானந்த அனுபவ வாழ்வுடன், என்றும் தானே இம்மனித உருவொடு திகழ்ந்து கொண்டிருக்கவே, அனாதி பரம்பொருள், ஆதிமுதல், பிரபஞ்சக் காரியமாகிய ஐந்தொழிலாம் நடனச்செயலை மேற்கொண்டுள்ளார். இதனால், இப்பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றுக்கும் ஆதியும் அந்தமும், இருப்பதே போல், கடவுள் மயமான ஒர் ஆன்மாவுக்கும் ஆதியும், அந்தமும் ஏற்பட்டுள்ளது. ஆன்மாவின் ஆதிநிலை என்பது, அகண்ட பரம்பொருளே, அனுபவத்தின் பொருட்டு விளங்கும் அணுத்துவ நிலையாகும். அந்த ஆன்மாவின் அந்தமாகிய முடிவு நிலைதான் மனிதவுருவுடன், திரிதேக சித்தி விளங்க என்றென்றும் வாழும் பேரின்ப நிலையாகும். இதுதான் ஆன்மாவின் அந்த நிலை, ஆனந்தநிலையாம்.
தயவு
தாணுமாலயன்
தயாபெருஞ்ஜோதியாய், அகண்ட பரிபூரணமாய், நித்தியமாய், நிறை இன்ப மயமாய் உள்ள ஒன்றே தன்னிகரில்லா மெய்ப்பொருளாக இருக்கின்றது. இந்த உண்மை விளக்கம், இன்றைய பக்குவ மனித மெய்யறிவால் கண்டு கொள்ளப்படுகின்றது. முன்பு, யோகஞான அனுபவத்தின் மூலம் கண்டு கொள்ளப்பட்ட பிரணவநாத ஜோதியே, பரப்பிரம்மம், மகாவிஷ்ணு, சுத்தசிவம் எனவும், பிரணவமந்திரத்தின் அருள் மெய் அகப்பொருளாகவும் புற ஒளிநிலையை, அயன், அரி, அரன் ஆகவும் கொள்ளப்பட்டதாம். முக்கியமாக, ருத்திராம்ச, தீ வண்ண, ஜோதி சிவமே, இறை என்னும் என்றும் நிலைத்த பரம் பொருளைக் குறிக்க நின்றதாம். இந்த இறை ஜோதியைக் கொண்டே அயனால் யாவும் படைக்கப்படவும், அரியால் யாவும் காக்கப்படவும், அரனால் யாவும் அழிக்கப்படவும் உள்ளதாம். ஆம்: எது உள்ளது, அந்த ஒன்றான நித்திய பரஞ்ஜோதியே! இவ்வடி நிலை இறை ஒளி எனும் ஒன்று இல்லாமல், மும்மூர்த்திகளும் இல்லை அவர்களின் முத்தொழிலும் இல்லையாம்.
மேற்படி தனிப்பெரும் ஜோதி இறை உண்மையை வெளிப்படுத்தி, அதன் இயல் செயல் விளைவாக, மறையுறா இன்பானுவத்தோடு மன்னி வாழும் இறை மனிதன் (GOD MAN) வெளிப்படற்கே இப்பிரபஞ்சகாரியம் ஆதிமுதல் நிகழ்த்தப்பட்டுக் கொண்டேயுள்ளதாம். மனிதப் பிறவியில்தான், மன அறிவு தோன்றி, வளர்ந்து, முதிர்ந்து, கடவுட் கனியாக விளைவுற்றுள்ளது இது சமயம். ஆனால் இந்தக் கடவுட்ஜோதிக் கனியை பொது மக்கட் சமுதாயம் இன்னும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் விளைவுற்ற கனியை, அருள் ஞானக் கண்ணாற்கண்ட ஒரு சிலர் வியந்தும் போற்றியும், பறித்தும் புசித்தும் இன்பப்போதையில் மயங்கி, அதிலேயே அழுந்தி, அழிந்தே போயினர். இது புறப்புணர்ச்சியால் கண்ட பயனாம். நித்திய இன்ப வாழ்வுக்கு இப்புறச்செயல் முறை உதவவில்லை! அது திருவுள்ளமும் அல்ல.
நம் ஆண்டவர் நிறை இன்பக் கனிவடிவினராகவே நித்தியமாய்த்திகழ்ந்து கொண்டுள்ளவரே ஆவர். அவர், தன்னேரில்லாத் தனிப்பரம் பொருளாயுள்ளவர். அப்படியுள்ள அவரை, பிற எவர்தான் கண்டு கொள்ளவும், அனுபவத்திற்கொண்டு, அவரைப்போல் இன்புருவாய் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கவும் முடியும்? பிற எவராலும், எக்காலும், எவ்விதத்தும் கண்டு அடைய முடியாது என்பது சத்தியம். உண்மையில், நித்திய சத்தாய் இருக்கின்றதும், தானே தன் அருட்பெருஞ்சித்து விளக்கமுறையால் எங்கும் நிறைந்து விளங்கியும், ஒரு குறிப்பிட்ட பக்குவ ஆன்ம சிற்றுருவில் வெளிப்பட்டு, தன்னைத்தானே உணர்ந்து கொண்டும் விளங்குகின்றது. இந்த ஆன்மா, எதுவுமல்ல, வேறு எவருமல்ல, அந்த சத்துப்பொருளே, இப்படிச் சித்வசத்தால், இக்குறிப்பிட்ட ஆன்மாவாய் விளங்குகின்றதாம். இக்கடவுளான்ம உண்மையைப் புரிந்து கொள்ளவே, அச்சத்சித்பதியே, இம்மெய்ஞ்ஞானம் விளங்கும் மெய்யுணர்வும், உயிரும், உடலும் கொண்டு விளங்குகின்றது தான் முக்காலும் உண்மை.
இக்கடவுளே, சித்தால், ஆன்மாவாய் விளங்கும் உண்மையைப் புரிந்து கொள்ளாது, ஒருவன் தன்னை ஓர் ஆணவமல சகித, பந்தப்பட்டு கிடக்கும் ஆன்மாவாக எண்ணிக்கொண்டு, அவத்தைப்படுகின்றான் பன்னெடுங்காலமாக. படாதபாடெல்லாம் பட்டு முடிவில் திருவருட்சேர்க்கையால் இந்த ஆன்மப் பசு, ஜீவ தேகாதி பிரபஞ்சமாகிய, பந்தபாசத்தையொழிக்கப் பெற்று சுத்த, ஆன்மாவாய் நின்ற தருணம், சர்வ சுதந்திரராகிய பதி, இந்த ஆன்மாவின் தற்போத ஆணவமலத்தையொழித்துத் தன்னில் இரண்டற ஐக்கியப்படுத்திக் கொள்வதாய்க் கொள்ளப்பட்டது. இதுதான், ஒருவன் முடிவில் அடைந்த சச்சிதானந்த முடிவு ஆம். ஆனால், நம் சச்சிதானந்த பதியோ, நித்தியானந்தமாய், செயலொடு விளங்கிக் கொண்டிருக்கின்றார் என்று திருவருளால் உணர்த்தப்பெறுகின்றோமே! ஆனந்த பதியைப் புறத்தணைந்து, இருப்பறியாது மறைந்து போன ஆன்மாவுக்கு தனி வாழ்வு இல்லை என்பது உண்மை. இந்நெறி முறைக்கு மாறாக, அருட்பெரு நெறியாம் சுத்த சன்மார்க்கத்தால், ஒன்றாகிய அருட்பெரும் பதிக்கு, அனன்னியமாக (வேறாகாததாயுள்ளது) ஆன்மாவே, சூழ் ஜீவ தேகாதி பிரபஞ்சத்திருந்து கொண்டே, தன் கடவுளான்ம உண்மையை உணர்கின்றது. புறப்பற்றற்று அகம் ஒடுங்கி நிற்கும் போது பரவச ஆனந்தானுபவத்தையும் அனுபவித்துவிட்டு, அத்தோடு மறைந்துதான் போகின்றான் மனிதன். மறையுறாது, அவ் ஆனந்தானுபவம் கெடாது, அந்நிலை நின்றே வாழவைக்க வருகின்றது சுத்தசன்மார்க்கம்.
இப்போது, சச்சிதானந்தபதி ஒருவரே உண்மையில் உள்ளவர் என்றும், அவர் ஒருவரே, எக்காலத்தும், எவ்விடத்தும் தனித்தனி ஓர் ஒரு பக்குவ ஆன்மாவாய்த் தனித்தனி விளங்குகின்றதும் மெய்யே என அறிகின்றோம். இதற்கு மேல் அந்தக் கடவுளான்ம அகநிலையிலிருந்து, அதுவே எவருமாய்த் தோற்றியும், இருந்தும், மறைந்தும் கொண்டுள்ளதாகவும் அறியலாகும். ஒவ்வொன்றின் அகத்திலும் இருக்கும் நித்தியானந்த பதியே, அகமிருந்து பிரியாது வாழும் அனகவாழ்வு ஏற்கப்படாத வரை புறவாழ்வு தடைபட்டுப்போவது சகசம். ஆகையால், அகத்தே பதிமயமாய் இருந்து கொண்டே, புலபோகப் பற்றற்று, ஜீவ காருண்யத் தயவுச் செயல் புரிந்துவரின், அக ஆனந்த இறைநிலை, அனக ஆன்ம, ஆனந்த வாழ்வாக நிலை கொள்ளுவதாம். இந்த நிலையில், அந்த ஒன்றாகிய கடவுள் தானே ஒவ்வொரு பக்குவியுள்ளிருந்தும், நித்தியானந்த வாழ்வோடு நிலவத் தொடங்கி விடுவார். அப்போதும், கடவுள் ஒருவரே, பலராய்ப் புறவுலகில் சதானந்த நடனமாகிய செயலொடு இலங்குதல் அமைந்து விடுகின்றதாம். இதுதான் சத்விசார அனுபவத்தால் ஏற்படும் கடவுளான்ம வாழ்நிலையாம், சிவானந்த நித்திய வாழ்வு இதுவாகும். இந்த ஆனந்த வாழ்வே, சுத்தசன்மார்க்க மனிதனின், நிறை இன்ப நித்திய வாழ்வு எனலாகும்.
வள்ளலார் கண்ட அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வாழ்வு உலகுக்கு இப்போது வெளியாகின்றது. இவர் பெற்ற அருட் பெருஞ்ஜோதி இறை, சத்-சித்-ஆனந்தமான சிவமே. சி-அகண்டவான் வெளிநிறை இறை ஒளி ஆம். வ-அவ்விறை ஒளியே அனுபவத்தின் பொருட்டு அருள் அறிவாய், ஆன்ம உருவாய், மனிதனில் திகழ்கின்றதைக் குறிக்கின்றதாம். இப்படியான சிவத்தின் ஆனந்த அனுபவமே-ஆக விளங்கிக் கொண்டுள்ளதாம். இதுவே, சிவம் தானே சச்சிதானந்த மனிதனாய் அனுபவப்படுகின்றதாம். இத்தருணம் உலகம் எல்லாம் ஏற்றின்புறும் வண்ணம் அந்தச் சச்சிதானந்த சிவம் த-ய-வு ஆகி அனுபவப்படுகின்றது. இதில் த-தகராகாசப் பேரொளி இறையுருவாகும். அதுவே, தன் நிறை அனுபவத்தை வெளிப்படுத்த வேண்டி - யகர ஆன்ம வடிவாய் உற்றுள்ளது. இதனால் தய - தான் கடவுளான்ம உண்மை விளக்க நிலை இப்படி இருந்து கொண்டே உடல் வாழ்வில், அகஇறை இன்பம் வெளிப்பட வாழ்வதே-வுகரத்தால் உணர்த்தப் பெறுவதாம். இந்தத் தயவு இறை இயல்தான், சத்து, சித்து ஆனந்த மனித வடிவு கொண்டு நிலவ வல்லதாகின்றது.
இன்று, கடவுள் உண்மை தயவு ஆகக்காண்கின்றோம் அதுஎங்கும் நிறைந்தும், மனித ஆன்மாவில் வெளிப்பட்டும், உடல் வாழ்வில் நித்தியானந்தமாய் வெளிப்பட்டும் விளங்கக் காண்கின்றோம்.
வடலூர் சத்தியஞான சபையிலே அருட்பெருஞ்ஜோதியைக் கண்டும் கலந்தும், வடலூரில் அதுவாகி நிற்றற்கு உபாயம் செய்யப்பட்டது அன்று. அது சச்சிதானந்த அனுபவத்தை உளத்திலே அனுபவிக்கச் செய்தது உண்மையே. உளத்திற் கண்ட அருட்பெருஞ்ஜோதி ஆனந்தானுபவமே உயிர் உடல் வாழ்விலே வெளிப்பட்டுத் தழைத்து நிலவற்கு அகமிருந்து விரியும் அனக தயவுச் செயல்முறை வழங்கப்படுகின்றது இங்கு இன்று.
இந்தத் தயவு தான் முன்னோர் கற்பனையில், சிவஜோதி பதியாகவும், ஆன்மவிஷ்ணு வடிவாகவும், பிரம சிருஷ்டி மனித உருவாகவும் கொண்டிருந்தனர். இம்மூன்றும் இணைந்த ஒரு திருவுருவே இன்று தயவு மனிதனின் வண்ணமாய்க் காண்கின்றோம். இம் மும்மூர்த்தியின் ஒன்றுபட்ட வடிவம் தான் தாணுமால்-அயன்=தாணுமாலயன் எனப்படும். தாணு-சிவ ஜோதியாம், அகண்ட வெளி நிறை இறை ஒளியே. மால்-அவ்வான் நடு, வளர் ஒளி ஆன்மப்புள்ளியாய், அகண்ட ஒளி கண்டு அறிதுயில் புரியும் அரியாம் திருமாலாம். அயன்-சிவானுபவம் அல்லது தயானுபவம் விளங்க படைக்கப்பட்டுள்ள இம்மனித உடல் வடிவமாகும். இப்போது இத்தாணுமாலயன் உருவே தான் தயவு இன்ப வடிவாய்த் திகழலாகிவிடுகின்றதாம்.
அனாதி நித்தியபரம்பொருளின் உண்மை தயவுதான் என்பது இதுவரை உலகம் அறியாது எதை எதையோ, அன்னியமாய் இருந்து கற்பனை செய்து கொண்டும், அடைந்து இன்புறக் கருதியும், எவ்வளவோ முயன்றும் கண்டதும் பெற்றதும் எல்லாம் நித்திய இறை இன்ப வாழ்வைக் கூட்டிவைக்கவில்லை. கடவுள், கருணாகரன் என்றும், தயாமூர்த்தி என்றும், மெய் அடியார்க்குத் தன்னையே முழுதும் வழங்கி வாழ்விக்கும் தியாகமூர்த்தி என்றும் மெய்யுணர்ந்தோர் கூறுகின்றனர். அப்படிப்பட்ட தியாகேசன், தன்னை அண்டின அடியார்க்கு, தன் உண்மையை ஏன் இது காறும் வெளிப்படுத்தி வாழ்விக்கவில்லை! அவர்தன் உண்மையை மனிதனுக்கு என்றோ உணர்த்திவிட்டார். அதுவும் தயவு என்ற ஒரு சொல்லின்மூலம், அதுதான் தனது, பிரபஞ்ச நிறை தகராகாச வடிவு என்றும், அதனையே இவனது யகர ஆன்மாவாய் உள்வைத்து, வு-கர உயிருடலாய்ப் புறத்திற் சேர்த்து, தயவாய் அறிந்தும், தயவாய் இருந்தும், தயவாய் வாழவே யாவையும் தயவாய் வெளிப்படுத்தினார், பக்குவக்குறைவினால் இவ்வுண்மை இவனுக்கு இந்நாள்வரை புரியவே இல்லை. இன்றே, தன்னையும், பிற எவரையும், எதையும் தயவாய்க் காண்கின்றான். இது அத்தயவு மயமானால் அன்றி மற்ற எதனாலும், எவராலும் கண்டுகொள்ளமுடியாது என்பதனையும் இன்றே காண்கின்றான்.
ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு உயிரும், ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு அணுவும் கூட, தகர உள்ளொளியையும், யகர ஆற்றலையும், உகர உருவையும் கொண்டு மொத்தத்தில் தயவு ஆகி விளங்குவதை காண்கின்ற இவன்; தலைநடுத்தலத்தே தயவு உணர்வோடு நிலைத்திருந்து கொண்டு தனது, தயவு ஆற்றலை தேகேந்திரிய கருவி கரணங்கள் மூலம் வெளிப்படுத்திக் கொண்டு வாழ வேண்டும். இதுவே எல்லோருக்கும் உண்மையான இன்ப வாழ்வை வழங்குவது சத்தியம்.
உலகியலில் தயவு செயல்படத் தொடங்கினாலே நல்லின்ப வாழ்வு உதயமாகிவிடும், அதுவே சுத்த சத்விசாரத்தோடு கூடிய தயவு வாழ்வு மேற்கொள்ளப் பட்டால், எல்லா நன்மையும் நிறைத்த, என்றும் நிலைத்தோங்கும் இன்ப வாழ்வே எங்கும் தங்கும்.
தயவு நிறைவதாக.
(குறிப்பு; சுத்த தயாஜோதியே-சுசீந்திரமாக-(சுசி+இந்திரம் ஆக) ஒரு தலமும், அங்கு நம் தயவு குறிக்கும் தாணு மாலயனும் வெளியாக்கப்பட்டுள்ளது)