தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா
14.1.1996.
முன்னுரை
மனிதன் இறைபரம் பொருள் உண்மையை உள்ளபடி கண்டு கொண்டு இன்ப வாழ்வில் தழைத்திட அவ்விறையே கற்பித்த ஒரு மொழி தயவு.
தகர ஆகாசப் பெருவெளி நிறை கடவுட் ஜோதியே, அவர்தம் பேருரு. அது ஒவ்வொரு சிற்றணுவிலும் முழு உண்மை கொண்டு மறை பொருளாக உள்ளது. அவ் அணு அக, மெய்ப்பொருள், தன் இயல் உண்மை அறிவின்ப விளக்கத்தோடு வெளிப்படுத்தவே, பொருட்சக்தி, செயற்சக்தி, ஞான சக்தி, யோக சக்தி, அருட் சக்தி கொண்ட அற்புதமான மனித உருவை அமைத்துக் கொண்டுள்ளது. இதில்தான் நிறை பக்குவ காலத்தில், தலைநடு மெய்யறிவுத் தலத்தே, எங்கும் நிறை இறை பெருந்தயா உண்மை ஓர் அணு மாத்திரமாக விளங்க வைத்துள்ளது. அந்த அணுவே கடவுள் உண்மை ஒளியாகவும், மனிதனின் மெய்யுரு ஆன்மா ஆகவும் இருந்து காலத்தே பரிணமித்து இவனாக அறிவித்தும், அறிந்து கொண்டும், முடிந்த தயவு அனுபவத்தால், நித்திய ஆனந்த வாழ்வு கொண்டு என்றும் விளங்க வந்துள்ளது.
ஆகவே, தயவு என்ற ஒரு ஒப்பற்ற சொல்லே, மனித நிறை இன்ப வாழ்வுக்கு அவ் இறையே வழங்கியுள்ளது மெய்யாகும் ! இது மக்கள் சமுதாயத்திற்கு, அகம் இருந்து, அனகமாக நிறைந்து வாழ்வை நிறைவு படுத்துவதாய் இருக்கின்றது.
இப்போது தயவு என்ற சொல்லின் அனுபவப் பொருள் - கடவுளின் சச்சிதானந்த இயல் உண்மை அறிவின்பம் அருள்வதாய்க் கண்டு கொள்ள உள்ளதாம்.
தயவுக் குறள் உண்மை.
கடவுள், யாவையும் இயக்கிக் கொண்டிருத்தலின் “இயவுள்” என விளங்கியும், மெய்யறிவுப் பகர வடிவப் பீடத்தில் “பா” எனத் தோற்றிப் பெரும் பயன்தரும் “செய்யுள்” ஆகித் திகழ்கின்றது. இச் செய்யுள் கடவுள் பேருருவும். சிற்றுருவும்தான் அகண்ட ஜோதியாயும், சிறிய ஆன்ம அருவுருவ மெய்யுணர்வாயும் விளங்கி, உலகியலில், மனிதனை மன்னி நிதமும் வாழ வகை செய்ய வந்துள்ளதுதான் – இத் “தயவு” மந்திர மொழியாம். இது, “குறட்பா” வடிவில் தோன்றி, குவலய முதலாம் உலக மாந்தரை எல்லாம் குலையா இன்பப் பெரு வாழ்வில் நிலவச் செய்வதாகும்.
தயா மூல பண்டாரம் என்பது, எல்லாம் கொண்டு விளங்கி நல்லின்பில் மக்களை வாழ்விக்கும் இறைவனையே சுட்டுவதாம். ஆறறிவுக்கு மேலான ஏழாம் நிராதார நிலை நின்று நல்லாறுபடுத்தி, ஞான சுத்த நெறிமுறையால் உலகைத் திருத்தித் தெளிவு படுத்தி தயவோடு ஒத்துவாழ வகை செய்யும்.
இதுகாறும் மக்கள், தம்மைக் கடவுளுக்கு அயலாய் இருந்து இறை நிலையை அடையக் கருதி, எவ்வளவோ பாடுபட்டு, வழி வகைகளை வழங்கினார்கள். அவற்றால், உலகில் சில பல நலம் எய்தியும், நிலைத்த வாழ்வில் நிலவ முடியாது மறைந்துதான் போயினர். அதுவே சரி எனக் கொண்டிருந்தது உலகமும். ஆனால் இன்றைய சுத்த தயவு நெறிமுறையால், அக அனக நிறை வாழ்வு கொண்டு நிலவ வழி திறக்கப் பெற்றுள்ளது.
ஆண்டவர் அனாதி நித்தியமானவர். அவரது உண்மையும், அப்படியே, அவ் உண்மை வெளிப்பட்டு அனுபவத்தில் கிடைக்கப் பெறும்வரை நிறை பொருள் அறிவரியதாம்.
அந்த உண்மைக் கடவுளைக் குறிக்க வந்த சொற்கள் பலவற்றுள் “தயவு” என்ற ஒன்றன் மெய்ப்பொருள், தமிழின் புற விளைவு, வடமொழியின் இணைப்புற்ற காலத்தே நிறை விளக்கம் கொண்டதாம். அதுவும், அனக சுத்த சன்மார்க்கம் வெளியான தருணம்தான், அனுபவ வாழ்வு கொண்டுள்ளது. ஆரம்பத்தில், அத்தயவு, இரக்கம், அன்பு, கருணை முதலான பண்பும் செயலும் குறித்து சிறு பயன்தான் அளித்ததாம்.
கடவுள், புறம் அகம் என்ற இருநிலை கொண்டதாய் விளங்கி, புறக்காரியப்பாட்டு உருவ தேகாதி பிரபஞ்ச வடிவையும், அறிவறிய அக உண்மையும் கொண்டிருந்தது. ஆனால் அக் கடவுளே உள் அகத்து ‘தய’ என்ற தகராகாசப் பேருருவையும், நம் ஆன்ம அணுத்துவ சிற்றுருவை ‘ய’ கரமாய்ப் பிரிவற உடன் கொண்டும். புறத்தே கடமாகிய தேகாதி ஐந்தியல் வடிவையும் சுட்டுகின்றதாம். அதுவும், தயவு, இரண்டு படாத அக, அனக நிறை வாழ்வு தரத் திகழக் காண்கின்றோம்.
ஆகவே, இத் தயவுக் கடவுள், மனிதனை - அதுவாகி வாழ்விக்கும்படி திகழ்கின்றது. சிறு மனிதன் பேரிறை அனுபவியாகிய, சிறு மாமனிதன் என்றிலங்குவான் என்றென்றும் ! INFINITE GOD, IN FINITE MAN. இவ் உலகுக்கு கடவுள் மனித நித்திய வாழ்வு சத்தியம் !
தயவுக் குறளின் நூல் விளக்கம்.
கடவுள் மனித உண்மையே, குறள் வெண்பாவாக வெளிப்பட்டுள்ளது. குறளின் இலக்கணப்படி, ஒன்றே முக்கால் அடியில், ஏழு சீர் கொண்டு விளங்கி, ஒன்றான பரனே, முத்திறல் அனுபவ வடிவொடு வாழும் மாண்பையுணர்த்த வந்துள்ளது.
இத் தயா இறைவன் நெறி அனுபவம் தலை நடுவுள், ஆயிரம் இதழ்க் கமல மீது ஒளிர் ஆன்ம ஜோதியின் பிரகாசமாய் எங்கும் பரவி, எல்லோரையும் நல்லின்ப வாழ்வில் நிலவச் செய்து. இவ் ஆயிர முகத்திலங்கும் சிற்ஜோதி நூல், ஆறியல் அருட்பெருஞ் ஜோதியாய் விளங்கி நின்று, தயாபெருஞ்ஜோதி வாழ்வை வழங்குவது. இதில், முதற்கண். பாயிரமாக ஆறு அதிகாரம் பதிகமாய்ப் பதிந்து, மேல் ஒழுக்க இயல், விசார இயல், இன்ப இயல்களாய் எழுபது அதிகாரங்களில், எழுநூறு குறட் பாக்களாக விரிந்து விளங்குகின்றன. இந்த ஏழியல் அடிப்படையில்தான் இறை உண்மை, ஏழு, எழுபது, ஏழ்நூறு, ஏழாயிரம், ஏழு கோடி மந்திரங்களாகத் தயவுக் கதிர் ஒளி வீசி உலலெலாம் வாழ உதவிக் கொண்டுள்ளன.
இந்நூல் வந்த விபரம் –
1956-ம் ஆண்டு நாட்குறிப்பு ஒன்று கிடைக்கப் பெற்றபோது, அகத்தே தயவு ஒளி உணர்வு எழுந்து, தினமும் ஒரு தயவுக் குறள் மலராய்ப் பூக்கத் தொடங்கியது. அது எழுநூறு நாட்கள் தொடர்ந்து பூத்து, வாடா மலராய்த் துலங்குகின்றன. இதனை தயவுடைய அன்பர் உலகு எல்லாம் ஏற்று நிறை இன்ப வாழ்வில் நீடு திகழ்வார்களாக.
சத்திய ஞான கோட்டம்.,
திண்டுக்கல்.
===========================================================================================
(இதன் தொடர்ச்சி விரைவில் வெளியிடப்படும்)
ContentRef: Dhayavukkural by Swami Saravanaananda.
Write a comment