தயா விளக்க மாலை
சுவாமி சரவணானந்தா
பாடல்கள் 96-100 உரையுடன்
செகமிசை யுள்ளோர் திருவருள் கொண்டு
சிவணுமோர் தயாபெரு மின்பம்
அகமிசை வாழ்வு அடைந்திடற் கென்றே
அகமெனும் ஆன்மனை அழியா
மிகமிக நல்ல தயவுஆ லயமாய்
மேதினி விளங்கவைத் தாயே
பகவனே யெனது பகர்ந்தசொல் மாலை
பாருளோர் காணஏற் பாயே. பாடல்.96.
உரை.
புவியிலே வாழவந்த புண்ணியர், சிவணும் (அடையும்) ஓர் ஆனந்த வாழ்வு, அகமிருந்து, அனகமாக அடையப் பெறும் தயா இன்ப வாழ்வே ஆம் என்பதையுணர்த்த, அந்த ஆன்மாவையே மிக மேலான தயவு ஆலயமாகத் திகழச் செய்து விட்டாய். இக் கருத்தை என் மூலம் வெளிப்படுத்திக் கொண்ட “தயா பெருஞ்ஜோதி” பகவனே, இதனை இம்மாலை வழி உலகறிந்து ஏற்று இன்புறச் செய்வாயாக.
பாரிது வென்று பரிவுட னெனக்கே
பாலொளிர் தயாபெருஞ் ஜோதி
சேரிடுஞ் சிரத்தின் நடுவுறு தளியைத்
திரிநிலை யொடுதிகழ் உண்மை
பாரினிற் றெளிந்து பரதயா விசாரப்
பண்பினாற் கூடிநின் றோங்கச்
சீரினிற் சிறக்கச் செய்கவென் தேவே
சிறியவிம் மாலைகொள் சிரத்தே. பாடல்.97.
உரை.
தயாபெருஞ் ஜோதி திகழும், சிரநடுவுள் விளங்கும் தயவு ஆலயத்தைக் கவனித்து நோக்கு. தயவின் மூன்று அம்சமே இம் மூவெழுத்தாய் முறையே கடவுள், ஆன்மா, உடல் நிலைகளை விளங்கச் செய்யக் காண்பாய் என்றாய். இவ்வுண்மையைச் சத்விசாரத்தால் உலகம் உணர்ந்து உட்கூடி நின்று புற வாழ்வில் செழித்தோங்க இந்த மாலையைத் தலையில் தரித்துக் கொள்வாயாக.
சிரத்துநள் ளிடத்தே தகரமாந் தளியிற்
சிறந்திடு யகரமாம் ஆன்ம
உருத்தரித் துகர அருளொளி யாகி
ஓங்குமென் தயாபெருஞ் ஜோதி
கரத்துறு கனிபோல கண்டவர்க் கென்றுங்
கழிபெரும் இன்புதந் தருள்வாய்
உரைத்த விம்மாலை யுலகவர் காண
ஒளிபெற அணிந்துகொள் ளுவந்தே. பாடல்.98.
உரை.
தலை நடுத்தலத்திலே தான் நம் தயவு ஆலயம் விளங்குகின்றது. தகரமே கோயிலைக் குறிக்கிறது. இதுவே தகராலயம் எனப்படும். இதில் நிலவும் யகரமாம் ஆன்மாவே, கடவுள் வடிவமாகி, வுகரம் அருட்பேரின்ப வாழ்வு தழைக்க உதவிக் கொண்டுள்ளதாம். தயாபெருஞ் ஜோதி பதியே நீ இப்படி இங்கு விளங்கிக் கொண்டிருக்கின்றாய். இதனை உலகவர் கண்டு அடைந்து அனுபவத்திற் கொண்டு இன்பில் தழைத்திட இம் மாலையைத் தரித்துக் கொள்.
ஒளியது திரண்டு ஒருதயா வுருவாய்
ஓங்குமென் பகரரும் பதியில்
தளியது கொண்டு தயாபெருஞ் ஜோதி
தனையடைந் தவர்களுக் கெல்லாம்
கிளியது வாகும் கிளர்சுக வடிவம்
கேண்மையிற் கொடுக்கவிம் மாலை
எளியது என்று எண்ணிடா திங்கே
ஏற்றணிந் திடுகிறா ரின்றே. பாடல்.99.
உரை.
அகண்ட வான்வெளி நிறை ஒளியே, தன் உண்மையை முற்றும் நமக்கு வழங்கி வாழ்விக்கவே, ஒரு தயவு ஒளி உருவாய்த் திரண்டு, இந்தச் சொல்லரும் பதியாம் சின்மய புரத்திலே கோயில் கொண்டு திகழ்கின்றது. இத் தயா பெருஞ் ஜோதிபதியைச் சார்கின்றோர்க்கு எல்லாம், கிளி என்னும் சுகானந்த வடிவம் தயவோடு ஏற்பிக்கவே இம் மாலை செய்து சூட்டியுள்ளேன். இதனை அலட்சியப் படுத்தாது ஏற்று இது முதல் அணிந்து கொள்ளுகின்றார்.
இன்றெனக் கருள்செய் என்னுடைத் தயவு
இறைவரே யென்னுளத் தளியில்
நன்றுற நல்ல தயாவொளி சூழ
நானதைத் தாமமாய்க் கண்டு
மன்றுறை வள்ளல் அந்தமு மாதி
வளரொளி மாலையே கொண்டார்
என்றுநா னவர்க்கந் தாதியா மாலை
இசைப்பதுந் தயாவொளி விளக்கே. பாடல்.100.
உரை.
அடியேனுக்கு அருளிட, இத் தருணம் எனது உள்ளக் கோயிலில் தயா ஜோதி சூழ எழுந்தருளியுள்ளார், தயா பெருஞ் ஜோதிபதி. இந்தச் சூழ் ஒளிதானே நம் தயா ஒளி வள்ளலுக்கு, ஒரு நன்மாலையாகக் காண்கின்றேன். ஆதியும், அந்தமும் இல்லா அரும் பெருஞ் ஜோதிக் கடவுளுக்கு, ஆதியும் அந்தமும் பொருந்திய இந்த அந்தாதி மாலையை இசைக்கின்றேன். இப்படி உள்ளிருந்து இசைக்கின்றது தயாவொளி விளக்கே.
தயா விளக்க மாலை முற்றிற்று
சூழ்க தயாபெருஞ்ஜோதி தனிப்பெருந்தயவு.
(அந்தாதி முறையில் தொடுக்கப்பட்டது இப் பா மாலை.)
Write a comment