Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயா விளக்க மாலை பாடல்கள் 91-95 உரையுடன்

தயா விளக்க மாலை
சுவாமி சரவணானந்தா
பாடல்கள் 91-95 உரையுடன்
ஈற்று, இப்பத்து செய்யுளும் இன்ப வாழ்வைக் குறிப்பன.
தாரணி மேலே தயாபெரும் இன்பம்
தழைத்திடத் தனிநெறி யொன்றே
பூரணம் பெற்று எங்கணும் விளங்கப்
புவிமிசை புகழ்படத் தோன்றிக்
காரணந் தெரிக்காக் கற்பனை செய்த
கருநெறி யாவுமே கழிய
ஆரணங் காணாத் தயாபெருஞ் ஜோதி
அண்ணலே அலங்கலீ தணியே. பாடல்.91.
உரை.
வேதங்களால் காண்பரிய மெய்ப்பொருள், தயாபெருஞ்ஜோதியாக இத் தருணம் எழுந்தருளியுள்ளது. அப் பதிக்கு அணிவிக்கும் இம்மாலையின் மூலம், தயா பேரின்ப வாழ்வு தழைக்கவுள்ளது. இதற்கான சுத்த தயாநெறி ஒன்றே எங்கணும் நிரம்பிப் புகழ்பட விளங்கும். பழைய, உண்மையை விளக்காத, கற்பனா இருள் சேர் நெறிகள் யாவும் அழிந்து ஒழிந்துபோம். இவ்வுண்மை குறித்து இம் மாலையைத் தயா ஜோதி அண்ணலுக்குச் சாற்றுகின்றோம்.
அண்ணலே எனது அருட்பெருஞ் ஜோதி
அப்பனே அகிலமே லெவரும்
தண்ணளி யாலே தயாபெருஞ் ஜோதி
சத்திய சுத்தசன் மார்க்கம்
நண்ணியே மற்ற நவையுள நெறியை
நாடிடா தொருவிநின் றன்னை
பண்ணினாற் பாடிப் பரவிவாழ்ந் திடற்குப்
பாலியே மாலையீ தணிந்தே. பாடல்.92.
உரை.
நம்மை அண்ணி (அடுத்து ஒன்றி) யுள்ள ஆண்டவரே அண்ணல் எனப் படுகின்றார். எனது அருட்பெருஞ் ஜோதித் தந்தையே, உனது குளிர்ந்த அன்புச் சக்தியால், “தயா பெருஞ்ஜோதி சத்திய சன்மார்க்கம்” ஒன்றையே எவரும் மேவிடவும், மற்ற குற்றங் குறை நெறிகளை அறவிட்டு, விலகிடவும் தயைபுரி. இதனை எண்ணி எண்ணித் துதித்து வாழ்வு பெற உலகுக்கு உதவுவாயாக.
பாலிலே தேனும் பஞ்சநல் லமுதும்
பக்குவ முறக்கலந் திட்டு
மாலிலே யுண்ணும் மனித்தரை யின்று
மயக்கொழித் திடுதயா அமுதம்
தோலிலே யுள்ள மாசறத் தூய
சுகந்தரத் தருஞ்சுக வாழ்வு
ஏலிலே யிருந்து வெளிப்பட விசைப்பாய்
இச்சிறு மாலையும் எடுத்தே. பாடல்.93.
உரை.
சுக, இன்ப வாழ்வு தருவது எது என்று அறிந்து கொள்ளாத உலகர், மருளறிவாலே, பாலையும், தேனையும், பக்குவமுறச் செய்திட்ட நல்ல பஞ்சாமிர்தத்தையும் உண்டு களிக்கின்றார்கள். மயக்கை ஒழித்திடு தயா அமுதத்தை (ஏலிருந்து, அதாவது) உள்ளத்து உணர்விலே இருந்து வெளிப்படுத்தி, உயிருடம்பிலேயுள்ள குற்றங்களைப் போக்கிச் சுகத்தை வழங்கி மெய் இன்ப வாழ்வில் திகழச் செய்வாய். இதற்காக இம் மாலையை ஏற்றருள்.
இச்சிறு பாக்க ளாய்மலர் பூக்கள்
இங்குனக் கேற்றநன் மலரே
நச்சியே கொள்வாய் நானிலத் தவர்க்கு
நவையிலாத் தயாபெரு மின்பால்
அச்சிதை யழியா அருள்வடி வாக்கி
அலகிலாக் காலமிங் கிருக்க
வச்சிடு வாயே வள்ளலே மலர்ந்த
மருமலர் மாலையும் மலைந்தே. பாடல்.94.
உரை.
இந்த சிறிய பாமலர்கள் உனக்கே உகந்தவை. உவந் தேற்றுக் கொண்டு, இந்நானிலத்தவரை எல்லாம் குற்றமற்ற தயாபெரும் இன்பிலே வாழவைப்பய். அவர்களும் தயா அமுத ஜோதியால், உடல் அழியா மரணமில்லா வாழ்வில் நீண்ட நெடுங்காலம் மகிழ்வோடு திகழ்வார்களாக. நீ கொள்ளும் இம் மாலையும் உலகுக்கு ஒளி நெறிகாட்டுவது திண்ணம்.
மருமலர் மாலை ஆயிர மிங்கே
வல்லவர் நல்லதா யிசைப்பார்
கரமல முடையேன் கன்மன மீதுன்
கருணையாற் கவினொடு மலரும்
குருமல ராக இவைகளைக் கொண்டு
கோவைசெய் தணிகிறே னினக்கே
திருமலர் மாலை யிதுவெனச் சென்னி
சேர்க்கிறாய் செகஞ்சுகித் திடவே. பாடல்.95.
உரை.
மணமிக்க மாலைகள், எத்தனையோ வல்லுநர்களால் செய்து உனக்கு வழங்கப் படலாம். இங்கு எனது அபக்குவ கடின சித்தமாகிய கல்லின் மீது கூட, நின் கருணையால் சிலமலர் மலர்ந்து விட்டன ! அவைகளையே அழகிய ஒளிமலர் எனக்கொண்டு இவ் அலங்கலாய்த் தொடுத்து விட்டேன் ! நீயும் இதனைத் திரு மலர் மாலை எனக்கொண்டு, உலகு கண்டு மகிழ உனது சிரத்திலே சூட்டிக் கொள்ளுகின்றாய் ! இது அதிசயமே !
ContentRef: Dhayaa vilakka maalai