தயா விளக்க மாலை
சுவாமி சரவணானந்தா
பாடல்கள் 86-90 உரையுடன்
சிறுமொழி கொண்டு செய்ததே யெனினுஞ்
செல்வநின் றன்னுடைச் சேர்க்கை
பெறுமொழி பெற்று பெருமகிழ் வோடு
பேருல கவரெலாம் வாழ
உறுமொழி யந்த உள்விசா ரஞ்சேர்
உயர்நிலைக் கேற்றுவ தென்றே
நறுமொழி சொல்லி நான்செயு மாலை
நயம்பெற நயந்தருள் நனியே. பாடல்.86.
உரை.
சிறிய சொற்களைக் கொண்டு அமைத்தது இம்மாலை. இதுவே அக விசாரத்தால், அருட் பெருநிலைக் கேற்றும், நல் வாக்காக இருத்தல் உண்மை. ஆகையால் உலகத்தார், பெறலரும் அருள் விளக்கம் பெற்று, பெரு மகிழ்வுறலாகும் என்று கூறி இதனை வழங்குகின்றேன். நீயும் உவந்து ஏற்று அருள வேண்டும். அக ஒளி நிலை நின்று புகலும் சொல் சிறிதே ஆயினும் பெறும் பயன் அருளும் அருள் உரையே.
நயந்துஎன் நாவின் மிசையிடங் கொண்ட
நாயகா வெனதுநா மகளே
வியந்தநா வரசே நாசிரத் தேசே
வியனணா மலைவளர் மருந்தே
பயந்தவென் றன்னை பரிந்தணைந் திட்ட
பரமனே பரவிசா ரத்தால்
கயந்தவிவ் வுலகர் கலாமற வாழக்
கட்டினன் மாலையுன் கழற்கே. பாடல்.87.
உரை.
என் நாவின் மேலிடத்தே விளங்கும், நான் மிக விரும்பும் நாயகனே ! நீயே நாமகள், திருநாவுக்கரசு, நாசிரத்து ஏசு, திருவண்ணமாலை யோங்கும் ஜோதி மருந்து எல்லாமாக இருக்கின்றாய். எனக்கு அபயம் தந்து ஆட்கொண்டு என்னுடன் கூடாமற் கூடி நிற்பதைச் சத்விசாரத்தால் அறிகின்றேன். இவ் வுலகிகள், வாழ்விலே கொண்ட கசப்பும் கலக்கமும் தவிர்த்து, ஆனந்தமும் அமைதியும் பெற்றிடவே இதனை உன் திருவடியில் சூட்டுகின்றேன்.
கழலிசை காற்கு அடைக்கல மெனது
கனிவுடை வுள்ளம தாகக்
குழலிசை யொலிபோற் கூடிநின் றுள்ளே
குழைந்தருள் கூட்டுமிவ் வுண்மை
தழலிசை யுலகர் சத்விசா ரத்தால்
தான்கண்டு தயவினால் தழைக்க
மழலைசெய் மொழியோ டிசைக்குமிம் மாலை
வாங்கிடு வாய்மிக மகிழ்ந்தே. பாடல்.88.
உரை.
கடவுள், காலில் கழல் அணிந்துள்ளார் என்பது அவரது அருள் ஒளி உண்மையை வெளியிடும் நாதஒலி யுணர்வைச் சுட்டுவது. குழலினின்று இசைக்கப்படும் ஒலி புறத்தே கேட்டு மகிழ உதவுகின்றது. நமது நன் மனமாகிய உள்ளமே கடவுள் திருவடிக்கு அடைக்கலமாக இருந்து, ஏற்றபோது இன்புறச் செய்வதாம். இச்சைத் தீயிலே கருகிக் கொண்டிருக்கும் உலகர், சத் விசாரத்தால், உண்மை கண்டு ஒன்றி, தயவினால் தழைத்து ஓங்க, இந்த குழறுமொழி மாலையையும் உவந்தேற்று அருள்வாயாக.
வாய்மிக நல்ல வாக்கது வழங்க
மனமது நின்பதம் மருவித்
தேய்விலா மதிபோல் திகழ்ந்திட என்னுள்
சேர்ந்தது போன்றெவ ருள்ளும்
ஓய்விலா துறையு முண்மைகண் டிங்கே
ஒண்தயா விசாரமேற் கொண்டு
மாய்விலா தோங்க வள்ளலே யருள்க
மாலுடை மாலையீ தணிந்தே. படல்.89.
உரை.
வாயானது நற்சொற்களையே பேசவும், மனமானது நின்பதத் தியானத்தில் கலையாதிருக்கவும், என்றும் என் உள் நிறைமதி போல் நிலவுகின்றாய். இதனை நல்லறிவு சகித தயாவிசாரத்தால் உளம் கொண்டு, மயக்கற வாழ்ந்து, உலகர் உய்ந்திட ஏற்பாய். அக விசாரத்தால், நிறை ஒளி நிலை பெற்று இருந்து கொண்டு வாழ்ந்தால் அவ்வாழ்வு நீடிப்பதாகும்.
மாலுடை யுலக மயக்கிரு ணீங்க
மாபெருஞ் ஞாயிறாய் வந்து
பாலொளித் திங்கள் முகத்தொளிர் செவ்வாய்
பண்ணிசை யருளியென் புந்தி
ஞாலமேல் மகிழப் பொன்னுரு வெள்ளி
நல்வரை மேற்சனிப் பிறப்பை
காலுறப் போக்கி விசாரமேற் கவினுங்
கடவுளே காற்கொளித் தாரே. பாடல்.90.
உரை.
மால் என்பது புலனிச்சையாம் அவா. இது மக்களை மயக்கி மடிந்திடச் செய்யும் காரிருளாக இருக்கின்றது. இவ் விருளையும், இதனான் ஏற்படும் அவத்தையும் அழிவும் போக்கி வாழ்வித்தற் பொருட்டே தயாபெருஞ்ஜோதி இப்போது எழுந்து விட்டுள்ளது. இந்த ஞாயிறாகிய ஜோதிபதி மதிமுகத்து, செவ்வாய் திறந்து அருள் மொழி வழங்குகின்றது. இதனால் இங்கு புந்தி (புத்தி)த் தெளிவு ஏற்பட்டு, பொன்மேனி யுடன் வெள்ளி மலைமேல் நான் மகிழ்ந்து வாழ சனியாம் தொல்லைப் பிறப்பைத் தொலைத்து விட்டுள்ளாய். இப்படி இசைக்கும் இம் மாலையை திருவடியிற் கொள்க. இதில், ஞாயிறு முதல் சனி முடிய ஏழு நாட்களையும் இசைத்துள்ளதைக் கண்டு இன்புறலாம்.
Write a comment