தயா விளக்க மாலை
சுவாமி சரவணானந்தா
பாடல்கள் 81-85 உரையுடன்
இது முதல் பத்து செய்யுள் சத் விசார விளக்கம் தருவது.
புணருதற் கரிய என்னருட் பொன்னே
புவியுளோர் யாவரு முண்மை
உணருதற் குரிய வுரிமைகொண் டவரே
உள்ளிருந் தோர்ந்திடீ தென்று
இணர்பெற விசைத்தே என்னுடன் கூடி
இருப்பதைச் சத்விசா ரத்தால்
மணம்பெறக் கண்டு மகிழ்ந்துஇம் மாலை
வனைந்தனன் வாங்கிநீ மருவே. பாடல்.81.
உரை.
உலகம் பொன்னால் வாழ்வு பெற்றிடலாம் என எண்ணுகின்றது. அது சரியல்ல. அருட்ஜோதி அல்லது தயா ஒளியாம் பொன்னே புணர்தற்கரியது, துணையாகக் கொள்ளற்குரியது. இப்படி அகமிருந்து அறிவிக்கின்றதை, அந்தரான்மா உணர்த்துகின்றதைச் சுத்த சத்விசாரத்தாலே உணர்ந்து எவரும் ஏற்க இதனை மாலையாய்த் தொடுக்கின்றேன்.
மருவிடற் கரிய வள்ளலே நீதான்
மகமெனும் ஆன்மவொண் மணியிற்
குருவெனப் பொருந்திக் குலவிநின் றிந்த
குவலயத் திலங்குகின் றாயிவ்
வொருவிடற் கில்லா உண்மையைக் கண்டு
உலவிடாச் சத்விசா ரத்தே
திருவொடு நல்ல அருளொளி சேர்த்தே
செழித்திடிம் மாலையு மணிந்தே. பாடல்.82.
உரை.
வள்ளலே, உன்னைப் பிறர், புறத்திலிருந்து வந்து சார்ந்து கொள்ளுவது என்பது, ஒருபோதும் ஆகாது. ஏனெனில், நீயே, நான் எனது என்னும் ஓர் ஆன்ம வடிவாய், அருட்குரு மணியாய் இருக்கின்றது, நித்திய உண்மையாகும். இவ்வுண்மையை ஓர்மைச் சத்விசாரத்தால் உணர்ந்து ஏற்று, எவரும் தழைத்தின்பில் ஓங்க, இம் மாலையைப் புனைந்து கொண்டருள்வாய்.
அணிந்தணிந் துன்னை அன்புறப் பாடி
அருளடைந் துய்வதற் காக
கணிந்துளே கலந்து நிற்குநின் றன்னை
கதிதரு சத்விசா ரத்தால்
துணிந்துகொண் டிங்கே துறக்கவாழ் வோங்க
சூடுகின் றேனுனக் கிந்த
பணிந்தசொல் லாலே பண்ணின மாலை
பயன்பெறப் பார்கொளப் பணியே. பாடல்.83.
உரை.
கடவுள், நம் உளத்தே நாம் காணாவண்ணம், உள்ளம் கவர் கள்வனாய் இருந்து பக்குவத்தே வெளிப்பட்டுப் பேரின்ப வாழ்வருள உள்ளார். அப்படி உள்ளவரை உய்வு தரும் சத்விசாரத்தால் அறிந்து, அன்பால் கனிந்து உருகப் பாடிப் பாடி ஒன்றானால், இப் பிறவியிலேயே துறக்க (சுவர்க்க அல்லது முத்தி நிலையாம் திரிதேக சித்தி) வாழ்வு பெறலாம். ஆகையால், இந்தப் பணிவன்போடு வழங்கும் மாலையை உலகோர் கொண்டு பயன் பெறச் செய்வாய்.
பாரொடு விண்ணும் படைத்தவெம் பரனே
பரவியே யுன்னையேத் துதற்குச்
சீரொடு என்னைச் சேர்ந்துகொண் டுள்ளே
சிறக்குமித் திருச்செய லதனை
நீரொடு கலந்த பாலினைப் பிரித்துண்
ணீரணம் போல்விசா ரத்தால்
தாரொடு திகழுந் நின்னையே யெவருஞ்
சார்ந்திடக் கொள்க இத்தாரே. பாடல்.84.
உரை.
நிலவுலகோடு விண்ணிறை மாபிரபஞ்சத்தை எல்லாம் படைத்து விளங்கச் செய்கின்ற பரம்பொருள், நம் உள் கலவாதே கலந்து திகழும் திருநிலையை, சுத்த சத்விசாரத்தால், நீர் கலந்த பாலைப் பிரித்தேற்கும் அன்னம் போலக் கண்டு, கொண்டு, எவரும் வாழ்த்திட இத்தார் (மாலையை) நினக்குச் சூட்டுகின்றேன். இதனால் உனைச் சூழும் எவரும் இன்புறுவார்களாக.
தாரகைத் தாரைக் கொண்டதண் மதியுந்
தமனியக் கனலியு மாகிப்
பாருகைத் திடவே பணித் தெனுட் பதிந்து
பாலுற விளங்குமிப் பண்பை
ஏரகத் திருந்து இறைவிசா ரத்தோ
டிங்குளோர் யாவரும் வாழ்வு
சேரகைத் தொட்டுத் திருமணங் கொளவென்
சிறுமொழி மாலையுங் கொள்ளே. பாடல்.85.
உரை.
ஆன்மாவின் அகத்தே அருளொடு விளங்கும் ஆண்டவர், பொற்ஜோதிக் கனலியாம் சூரியனை, நம்முள் உயிர் ஆற்றலாகவும், தாரா (நட்சத்திர) மாலையால் சூழப்பெற்ற குளிர்ந்த சந்திர சக்தியை நமது உடலாகவும் வழங்கி, அருட்ஜோதியாம் பாலை நம் அறிவு உணர்விலே வளர்த்து வருகின்றார். பக்குவத்தே வெளிப்பட்டு நமை மணந்து கொள்ள உள்ளார். இதனையுலகம் அறிந்து கொள்ளவே, இச்சிறு சொன்மாலை சூட்டுகின்றேன்.
Write a comment